search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாலத்தூர் மலை"

    • நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலம்.
    • அனந்த சயன மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டியில் உள்ளது, கண்ணிறைந்த பெருமாள் திருக்கோவில். நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    திருமயம் குடை வரைக் கோவிலைப் போலவே சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின் மீது எழுப்பப்பட்டுள்ள குகைக் கோவில்தான் மலையடிப்பட்டி கோவில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'திருவாலத்தூர் மலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இங்கு அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு வீற்றிருக்கும் ஆலயம், திருப்பதி ஆலயத்திற்கு நிகராக போற்றப்படுகிறது.

    இங்குள்ள சிவன் கோவில், திருமால் கோவிலைவிட காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது. மலையடிப்பட்டி குகைக் கோவில் களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறு சில பழங்கால குகைக் கோவில்களும் காணப்படுகின்றன. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை அனைத்தும் உள்ளன.

    மலையடிப்பட்டி கோவிலில், நந்திவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் 16-வது நூற்றாண்டில், குறிப்பாக கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோவில் எழுப்பட்டதாகவும், அந்த இறைவனுக்கு 'வாகீஸ்வரர்' எனப் பெயரிட்டதாகவும் செய்தி காணப்படுகிறது.

    மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகி இருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

    எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின் மீது அமர்ந்து போரிட்டு வீழ்த்தும் காட்சியும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பணியை சார்ந்தது.

    சிவன் குகையின் மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை காணப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில், பள்ளிகொண்ட பெருமாள் அருள்கிறார். சயன கோலத்தில் இருக்கும் இறைவன் 'பள்ளிகொண்ட பெருமாள்' என்றும், 'கண்ணிறைந்த பெருமாள்' என்றும், தாயார் 'கமலவல்லி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

    விஷ்ணு குகைக் கோவிலானது கருவறையையும், அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோவிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

    மண்டபத்தின் சுவற்றில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்ற, இருந்த, கிடந்த (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) கோலங்களைக் கொண்ட மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

    சயன பெருமாளை சுற்றிலும் 5 தலை கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், தேவர்கள் உள்ளனர். துவாரபாலகர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள். தாயாரின் சன்னிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.

    மேலும் இந்தக் குகைக் கோவிலில், ஆந்திரா மாநிலம் லேபாட்சியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும். முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கையின் ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு, ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாசல்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம், ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்கும் என்கின்றனர்.

    கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் இத்தல பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்தக் குடைவரைக் கோவிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

    கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றை சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன.

    கண்ணிறைந்த பெருமாள் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை.

    கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு, அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.

    பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும், வேண்டுதல் நிறை வேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம் ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் வழிபட தீபாவளி, கார்த்திகை, ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

    காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடியில் இருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16 கிமீ தூரம் பயணம் செய்தும் மலையடிப்பட்டி குகைக் கோவிலை அடையலாம்.

    ×