search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்சார்பற்ற ஜனதா தளம்"

    • பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றார்.
    • ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்தது. இதற்கிடையே ஜெர்மனியில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அவரை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.

    இதற்கிடையே கடந்த 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அங்குள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான மகளிர் போலீஸ் குழுவினர் அழைத்துச் சென்றனர். 35 நாட்களாக வெளிநாட்டில் இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு போலீசார் காரில் சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன் பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரஜ்வல் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

    இவ்விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தாவான முன்னாள் பிரதமர் தேவகவுடா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

    தனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம். நாடு திரும்பி விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    ×