search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கி விரமணி"

    • “திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்” என்பதையும் நிரூபித்து விட்டார்.
    • காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, மறுக்க முடியாத, மகத்தான வெற்றியாக தமிழ்நாடு-புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவைத்து, "இந்த நாற்பது-இனியவை நாற்பது" என்பதை உணர்த்தி, பிரகடனப்படுத்தியதற்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

    அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட மதியூக வியூகமும் தந்த வெற்றிக்கனிகள் இவை. கலைஞர் தம் நூற்றாண்டு நிறைவில் இந்த இனிய நாற்பதைக் கொண்டு முதலமைச்சரும் கூட்டணியினரும் கட்டிய இந்த வெற்றி மாலையைக் கலைஞரின் தோளுக்குச் சூட்டிடும் அவரது முயற்சியின் மூலம், மீண்டும் "இது பெரியார் மண்தான்" என்பதையும், "திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்" என்பதையும் நிரூபித்து விட்டார்,

    அவரே அதன் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். அந்த வெற்றித் திருமகனாருக்குத் தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!

    காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.

    காங்கிரசும், இளந்தலைவர் ராகுல் காந்தியின் இடையறாத பிரசாரச் சுனாமியும் இந்தியா, கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரசாரமும் முகிலைக் கிழித்து எறிந்து புதிய விடியலுக்கு வித்திட்டிருக்கின்றன!

    இதற்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்!

    சர்வாதிகார வெறிக்கு அணை போடப்பட்டுள்ளது; அந்த அணை முழுமையாவதற்கு முழுக் கவனமும் அரசியல் வியூகமும் தேவை! அதற்கும் தமிழ்நாடும் அதன் மதியூகியான நமது தி.மு.க. தலைவரும் கலங்கரை வெளிச்சமாக என்றும் இருப்பார் என்பது உறுதி!

    ஜனநாயகத்தின்-அரசியல் சட்டத்தின் தலை தப்பியுள்ளது.

    இவ்வாறு கி.வீரமணி கூறி உள்ளார்.

    ×