search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகோரி"

    • 9 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமுற்றனர்.
    • உயிர்தப்பியவர்கள் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்கள் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி என பல மாநிலங்களை சேர்ந்த பயணிகள் சிவகோரியில் இருந்து காத்ராவுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை வழிமறித்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமுற்றனர்.

     


    இந்த நிலையில், தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் வெர்மா கூறும் போது, "பயங்கரவாதியை பார்த்ததும், நான் தப்பிக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரின் தலை ஸ்டீரிங் வீல் மீது சாய்ந்ததை பார்த்தேன். இதன் பிறகு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது," என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தேவி பிரசாத், "பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த போதிலும், பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். நாங்கள் எந்தவித அசைவும் இன்றி தரையிலேயே படுத்துக் கொண்டோம். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை நாங்கள் உயிரிழந்தவர்களாக நினைத்துக் கொண்டோம்," என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் காயமுற்றவர்களை மீட்டு, உயிரிழந்த சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து சாலைக்கு கொண்டுவந்தனர். இவர்களை தொடர்ந்து காவல் துறை, பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ராஜத் ராம் வெர்மா, "முதலில் பேருந்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது என்று நினைத்தேன். பிறகு, திடீரென பயங்கரவாதிகள் தாக்கியதாக யாரோ அழுதார்கள். உடனே என் மனைவி மற்றும் மகனை பேருந்து இருக்கையின் கீழ் மறைந்து கொள்ள செய்தேன். மறைந்து கொள்வதற்குள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், என் மகனை என்னால் பிடிக்க முடியாமல் போனது. பிறகு மகன் குறித்து கேட்ட போது, அவன் உயிரிழந்துவிட்டதாக என் மனைவி தெரிவித்தார்," என்றார்.

    பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் உயிரிழந்தவர்களில் ராஜத் வெர்மாவின் 14 வயது மகன் அனுராக் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×