search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்ணக்கயிறு"

    • ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது.
    • மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதலை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது.

    சந்து குழுவின் பரிந்துரைகள்:

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. அவை அரசு பள்ளிகளாக மாற்றம் செய்யப்படவேண்டும்.
    • தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
    • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
    • ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
    • மாணவர்களின் கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
    • மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
    • பள்ளி வளாகத்தில் உள்ள சாதி தொடர்பான பெயர்களை அகற்ற வேண்டும். பள்ளிக்கு நன்கொடை வழங்கி இருந்தாலும் அவர்களின் பெயரையும் அகற்ற வேண்டும்.

    ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை பலரால் வரவேற்பை பெற்றாலும் சிலர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சந்துரு குழு அறிக்கையை எதிர்க்கும் பாஜக:

    பாஜகவை சேந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி இந்த அறிக்கையை ஊராட்சிக்குழு கூட்டத்திலேயே கிழித்து எரிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

    நெற்றியில் திலகம் இடக்கூடாது கையில் கயிறு கட்டக்கூடாது என கூறுவது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்று அவர் தெரிவித்தார்.

    ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என நிர்வாகம் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிந்து வர ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொட்டு வைக்கக் கூடாது, திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக்கூடாது என்று சொல்வது தவறானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. வண்ணக்கயிறுகளை சாதிகளோடு அடையாளப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவை சேர்ந்த பலரும் சந்துரு குழு அறிக்கையைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்து மாணவர்களை இது பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வண்ணக்கயிறும் நெற்றி திலகமும் ஹிஜாபும் ஒன்றா?

    வண்ணக்கயிறு, நெற்றித் திலகம், போட்டு ஆகியவை இந்து மத அடையாளங்கள். வண்ணக்கயிறை போல ஹிஜாபை, சிலுவையை தடை செய்வீர்களா என்று வாதம் செய்கின்றனர்.

    ஹிஜாபும், சிலுவையும் மத அடையாளங்கள். அவற்றில் சாதி இல்லை. ஆனால் வண்ணக்கயிறுகளிலும் நெற்றித் திலகத்திலும் சாதி இருக்கிறதே. ஒவ்வொரு சாதியையும் குறிப்பிட்ட நிறத்திலான கயிறுகளையும், குறிப்பிட்ட வண்ணத்திலான நெற்றித் திலகத்தையும் வைப்பதே இங்கு பிரச்சனையாக மாறுகிறது.

    ஒருவர் ஹிஜாப் அணிந்தோ, சிலுவை அணிந்தோ வந்தால் தான் அவரின் மதத்தை கண்டுபிடிக்க தேவை இங்கு இல்லை. ஒருவரின் பெயரை வைத்தே அவரின் மதத்தை நம்மால் அடையாள காணமுடியும். ஆனால் பெயரை வைத்து தமிழ்நாட்டில் சாதியை கண்டுபிடிக்க முடியாது.

    பெயர்களுக்கு பின்னர் சாதிப்பெயரை சேர்க்காத பெருமை தமிழ்நாட்டிற்கு உள்ளது. அப்படியொரு மாநிலத்தில் எந்த ஊர், என்ன குலசாமி, அம்மா அப்பாவுக்கு என்ன வேலை போன்ற கேள்விகளிலும் சாதிக்கயிறு, சாதி பொட்டுகளிலும் சிலர் சாதியை அடையாளம் காண்கின்றனர்.

    இதன் மூலம் ஒரே சாதியை சேர்ந்த சிலர் ஐக்கியமாகி மற்ற சாதியை அடையாளம் கண்டு அவர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தும் சம்பவங்கள் பள்ளி கல்லூரிகளில் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது.

    அதனை தடுப்பதற்கு இத்தகைய பரிந்துரைகள் அவசியம். ஆகவே சந்துரு குழுவின் இந்த பரிந்துரைகள் இந்து மதத்திற்கு எதிரானது கிடையாது, சாதிய அணிதிரட்டலுக்கு சாதிய வன்முறைக்கு எதிரானது என்று சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    சாதியை குறிக்கும் விதமாகவும் அரசியல் கட்சிகளின் கொடியின் வண்ணத்தை குறிக்கும் விதமாகவோ வண்ண கயிறு அணிந்து வந்தால் பிரச்சனை. மற்றபடி கருப்பு, சிவப்பு போன்ற சாதாரண நிறத்தில் வண்ணக்கயிறு கட்டுவதாலோ, குங்குமம் சந்தன அபோட்டு வைப்பதாலோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆகையால் அதற்கு தடை விதிப்பது சரியல்ல என்றுதான் வாதம் செய்கிறோம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் - சாதிய அடையாளமா?

    தலித்துகளுக்கும் கள்ளர் சமூக மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இவை நேரடியாக பள்ளிக்கல்வித்துறையில் கீழ் வராது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆதி திராவிடர் பள்ளிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் கள்ளர் பள்ளிகளும் வரும்.

    இந்நிலையில், ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துரையின் கீழ் கொண்டு வரலாம் என்று சந்துரு குழு பரிந்துரைத்தது.

    ஏனெனில் ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அந்த பள்ளிகளின் பெயரால் சாதி ஒடுக்குமுறை நிகழ்த்த வாய்ப்புள்ளது ஆகவே அந்த பெயர்களை நீக்க அக்குழு பரிந்துரைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

    தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதும் நல்ல கோரிக்கையாக உள்ளது என்று பலரும் இந்த சந்துரு குழுவின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    ×