search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள எம்எல்ஏ"

    • மானந்தவாடி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான கேலுவுக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
    • பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெற்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மாநிலத்தின் தேவஸ்தானம் மற்றும் ஆதிவாசி பழங்குடி நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆனார். இதையடுத்து அவர் தனது மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகித்த தேவஸ்தானம் மற்றும் ஆதிவாசி பழங்குடி நலத்துறைக்கு புதிய மந்திரியை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் மானந்தவாடி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான கேலுவுக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

    பழங்குடியின வகுப்பை சேர்ந்த அவருக்கு ஆதிவாதி பழங்குடி நலத்துறை மட்டும் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தான துறை மந்திரி வாசனுக்கும், பார்லிமென்ட் விவகாரத்துறை மந்திரி ராஜேசுக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.

    புதிய மந்திரியாக பொறுப்பேற்க உள்ள கேலு மானந்தவாடி தொகுதியில் தொடர்ச்சியாக 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் ஆவார். வயநாடு மாவட்டத்தை சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும் கேரள சட்டசபையில் ஆதிவாசி-பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவராகவும் பணியாற்றுகிறார்.

    கட்சியில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னதாக கேலு தினக் கூலியாக வேலை பார்த்தவர். அவர் எஸ்டேட் மற்றும் விசைத்தறிகளில் தொழிலாளியாக பணியாற்றியிருக்கிறார். மேலும் விவசாயமும் செய்தார். தொழிலாளியாக கடினமாக உழைத்து வந்தபோது தான், அரசியலுக்கு வந்தார்.

    கேலு 2000-ம் ஆண்டில் திருநெல்லி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பதவியேற்றார். அதன்பிறகே அவரது பொதுவாழ்வு பயணம் தொடங்கியது. பின்பு பல ஆண்டுகள் திருநெல்லி கிராம பஞ்சாயத்து தலைவராகவும், மானந்தவாடி தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் 2016-ம் ஆண்டில் மானந்தவாடி தொகுதி எம்.எல்.ஏ. ஆகி முதன்முதலாக சட்டசபைக்கு சென்றார்.

    தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெற்றார். இதன் காரணமாக 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகும் மக்கள் பணியாற்றி தொகுதியில் சிறந்த பெயரை பெற்றிருக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் விவசாயத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். நெல், வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அவர் பயிரிடுகிறார். தினக்கூலி தொழிலாளியாக வேலைபார்த்த கேலு, பஞ்சாயத்து உறுப்பினர், தலைவர், எம்.எல்.ஏ. என படிப்படியாக உயர்ந்து தற்போது மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    இதன்மூலம் வயநாடு மாவட்டத்தின் முதலாவது மந்திரி என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். மந்திரியாக பொறுப்பேற்கும் கேலுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ×