search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பழக்கம்"

    • திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் போதைப்பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும்.
    • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள்.

    பயங்கரவாதத்தை மிஞ்சியது போதைப்பழக்கம்.

    பிறரால் உருவாகக்கூடிய பயங்கரவாதத்தை கூட பாதுகாப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்திவிடமுடியும். ஆனால் போதைப்பழக்கம் அப்படியல்ல...

    தடுப்பு நடவடிக்கைகள் மூலம் எவ்வளவுதான் தடுத்தாலும் உலக அளவில் போதைப்பொருள் பயன்பாடு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது.

    மது குடிக்காதே, கஞ்சா புகைக்காதே, போதைப்பொருளை எடுத்துக் கொள்ளாதே என விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் முடியுமே, தவிர அடக்குமுறையால் அடக்கிவிடமுடியாததாக இருக்கிறது போதைப்பழக்கம்.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் போதைப்பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும்.

    அதையும் தாண்டி போதைக்கு அடிமையாகிவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய உதாரணம். போதை தன்னை மட்டும் கொல்லாமல், தான் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துவிடும்.

    வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் கேடாக அமைந்துவிடும் என்பதால்தான் போதையை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

    போதைப்பொருள் பயன்பாட்டால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றன.

    உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    இவர்களில் 3-ல் ஒருவர் பெண் என்பதும் போதைக்கு அடிமையாவோரில் 85 சதவீதம் பேர் படித்தவர்கள் என்பதும், 75 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதும் வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

    மது, கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் பல விதங்களில் புழக்கத்தில் உள்ளன.

    உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணப்புழக்கம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு தகவல்.

    12 முதல் 17 வயது வரை உள்ள இளவயது பருவத்தினர் அதிகம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டை தொடங்கும் நிலையில் இருக்கிறார்கள். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை அடையும் நிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள். சுமார் 3.1 கோடி பேர் கஞ்சாவும், 60 லட்சம் பேர் ஓபியாய்டுவும், 1.18 கோடி பேர் தற்போது மயக்க மருந்துகளை (மருத்துவம் அல்லாத பயன்பாடு) போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. 8.5 லட்சம் பேர் போதை ஊசி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் நாட்டில் போதைப்பொருளின் பன்முக தாக்கங்களின் தீவிரத்தை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தலை தடு்ப்பது, போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குதல், ஆலோசனை வழங்குதல், உரிய சிகிச்சை அளித்தல், போதைப்பொருள் சார்ந்த நபர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றன.

    இளைய சமுதாயத்தினரிடையே போதைப்பொருள் ஊடுருவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் போலீஸ், தன்னார்வ ெதாண்டு நிறுவனத்தினர் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு என்பது குறைந்தபாடில்லை. போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. அதனால்தான் அதை ஒழிக்கும் நோக்கத்தை உலக நாடுகள் வலியுறுத்தும் விதமாக ஜூன் 26-ந்தேதி (இன்று) போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஐ.நா. சபை, உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது முயற்சிகளை விரிவுபடுத்துவோம். கூட்டு நடவடிக்கை மூலம், ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்ற போதைப்ெபாருள் ஒழிப்பு தின செய்தியாக தெரிவித்து இருக்கிறது.

    மக்கள் நலன் கருதி போதைப்பொருட்கள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன் வரவேண்டும். போதைப்பொருள் கடத்துவோருக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தியதால் நிலைகுலைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவற்றிற்கெல்லாம் மேலாக, உயிரை கொல்லும் போதை இன்னும் தேவைதானா என்று அதை பயன்படுத்துவோர் நினைக்க வேண்டும். தன்னையும், தன் குடும்பத்தினரையும் மனதில் கொண்டு போதைப் பொருளை தொடமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.

    போதை எனும் பாதை என்றைக்குமே தவறான இடத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதை உணர்ந்தால் நாமும், நாடும் நலம் பெறலாம். போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

    ×