என் மலர்
நீங்கள் தேடியது "வேலை மறுப்பு"
- தமிழக அரசிடம் மத்திய அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.
- இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில், உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது.
உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது.
அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு உங்களுக்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.
இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.
இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.
இது தொடர்பாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது.
வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டை கிளப்பி உள்ளனர். இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.
பாதுகாப்பு கருதி பாலினம், மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி மட்டுமே பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.