search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூலை மாதம்"

    • ஜுலை 2024 மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.
    • 2024-2025-க்கான மானியக் கோரிக்கையின் போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அறிவிப்பு.

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் வழங்கி வந்த ரேஷன் பொருட்கள் விநியோகம் கடந்த இரண்டு மாதங்களாக தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, மே மாதம் வழங்க வேண்டிய பாமாயில், துவரம் பருப்பு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஜூன் மாத பொருட்களை ஜூலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

    இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு மே 2024 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே 2024 மாத உரிம அளவு பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜீன் 2024 மாதத்தில் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பெற்றுள்ளனர்.

    கூடுதல் நகர்வு காரணமாக ஜுன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜுன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நடைபெற்று வரும் 2024-2025-க்கான மானியக் கோரிக்கையின் போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஜுன் 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024 மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டும் ஜுன் 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுன் 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை உடனடியாக பெறும் வகையிலும் ஜுலை 2024 மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×