search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK ராமதாஸ்"

    • வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு

    தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது.

    2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

    தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.

    ஆனாலும், திமுக அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. திமுக அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படுவது உறுதி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
    • அரசு ஊழியர்களுக்கு இதைவிடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 309-ம் வாக்குறுதியாக, ''புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய ஆணையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளனர். தங்களின் வாழ்நாள் முழுவதும் தி.மு.க.வை ஆதரித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இதைவிடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.

    சிலரை சில முறை ஏமாற்றலாம், பலரை பலமுறை ஏமாற்றலாம். ஆனால், அனைவரையும் அனைத்து முறையும் ஏமாற்ற முடியாது. தி.மு.க.விடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழி தீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    2026-ம் ஆண்டில் அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.
    • சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு எந்த சமூகப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.

    கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2&ஆம் நாள் பிறப்பித்த ஆணையில் ''கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை சமூகநீதிக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 3-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,'' பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்" என்று கூறியிருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தமது ஆணையை திரும்பப் பெற்றுள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம், ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்த 22.05.2024-ஆம் தேதியிட்ட உயர்கல்வித்துறை அரசாணை எண் 110-இன்படி, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

     

    அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் சமூகநீதிக்கு துரோகம் செய்த திமுக அரசு, பொதுவெளியில் அம்பலப்பட்டதால் அதன் தவறை இப்போது திருத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்தது ஏன்? அவ்வாறு செய்ய அவரைத் தூண்டியது யார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

    சமூக நீதிக்கு துரோகம் இழைக்க முயன்றதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குனரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கி விட்டு, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    ×