என் மலர்
நீங்கள் தேடியது "வேணுகோபால சுவாமி கோவில்"
- 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார்.
- 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.
புல்லாங்குழலுடன் காட்சி தரும் கிருஷ்ணன், வேணுகோபாலனாக ஆலயம் கண்ட தலங்கள் பல உள்ளன. அவற்றில் அமர்ந்த, நின்ற, சயனம் என மூன்று கோலங்களிலும் இறைவன் காட்சி தரும் ஆலயமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தானின் நிதிப் பொறுப்பாளராக இருந்த ரங்கையா என்பவர், இந்தப் பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு கட்டி வந்தார்.
ஆனால் மூன்று ஆண்டுகளாக வசூலித்த வரிப் பணத்தை திப்பு சுல்தானுக்கு கொடுக்காமல், அதை வைத்து இங்குள்ள 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் மேல்கோட்டில் உள்ள திரு நாராயணபுரத்திற்குச் செல்லும் வழியில் சில நாட்கள் இங்கு தங்கியதாக சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு
இந்த கோவில் மூன்று நிலை மற்றும் ஐந்து கலசங்கள் கொண்ட ராஜ கோபுரத்துடன், கண்களை கவரும் வண்ணம் அழகாக காட்சி தருகிறது. மேலும் உயரமான சுற்றுச் சுவர்களையும் கொண்டுள்ளது.
கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் பெரிய விசாலமான பரப்பைக் காணலாம். கோவிலை கடந்து உள்ளே சென்றவுடன் எதிரே 30 அடி உயரத்தில் செப்புக் கவசத்துடன் நீண்ட நெடிய கொடிக் கம்பம் ரம்யமாக காட்சி தருகிறது.
அதனை அடுத்து அழகிய வேலைப்பாடுடன் கூடிய 108 கல் மண்டபங்கள் வரிசையாக அழகாக காட்சி தருகின்றன. இந்த மண்டபத்தின் முகப்பில் ருக்மணி, சத்தியபாமா உடனாய குழல் ஏந்திய கிருஷ்ணனின் சுதை வடிவ சிற்பம் இருக்கிறது.

கல் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் வித்தியாசமாக கல்யாண விநாயகரை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள தூணில் திப்புசுல்தானின் புடைப்பு சிற்பமும் இருக்கிறது.
கொங்கு நாட்டை திப்பு சுல்தான் ஆட்சி செய்த போது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதற்கு அடுத்ததாக 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார், சுதர்சன ஆழ்வார்.
இவருக்கு சித்திரை நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சுதர்சன ஆழ்வாருக்கு மறுபுறம், யோக நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இவருக்கு அடுத்ததாக விநய ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். கல்விக் கடவுளான ஹயக்ரீவர், ஆரோக்கியத்தை காக்கும் தன்வந்திரி பகவான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இவர்களை வணங்கி தாயாரான கல்யாண மகாலட்சுமியை தரிசிக்கிறோம். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், மேல் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய - வரத முத்திரையோடும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதோடு, விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
தொடர்ச்சியாக 9 வாரங்கள் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, திருமணத்தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அடுத்ததாக மூலஸ்தானத்திற்கு துவாரபாலகர்களைக் கடந்து உள்ளே செல்கிறோம். மூலவரை நோக்கி கூப்பிய கரத்துடன் கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையில் புல்லாங்குழல் ஊதும் வேணுகோபாலனாக ஆனந்தமான முகத்துடன் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

இவரது சன்னிதிக்கு பின்புறம் ரங்கநாதர் சன்னிதி இருக்கிறது. அங்கு சிறிய மற்றும் அழகான வடிவத்தில் 'கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயரில் 7 தலை ஆதிசேஷனின் மேல் தூங்கும் புஜங்க சயன தோரணையில் அவர் உள்ளார்.
அவருக்கு இரு பக்கமும் நிலமகளும், திருமகளும் நின்றபடி இருக்கின்றனர். திருவரங்கம் போன்ற மற்ற சிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த சிலை சிறியதாக இருந்தாலும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் சன்னிதிக்கு முன்னால் பல நூற்றாண்டு பழமையான கல்வெட்டும் இருக்கிறது.
பிரகாரத்தை சுற்றி வரும்போது சிவபெருமான் கோவில்களில் உள்ளது போல, மகாலட்சுமியின் அம்சமான வில்வ மரத்தை காண முடிகிறது. அதற்கு கீழே நாகர் சன்னிதி, அதற்கு பக்கத்தில் காளிங்க நர்த்தனர் மற்றும் வாமன அவதார பெருமாள் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.
தல விருட்சமாக மகிழம் மரம் உள்ளது. அடுத்ததாக அமர்ந்த நிலையில் லட்சுமி நாராயணர் அருள்கிறார். திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில், இறைவன் நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் அருள்வது போல, இங்கும் மூன்று கோலங்களில் இருக்கும் இறைவனை நாம் தரிசிக்கலாம். இந்த மூன்று மூலவர்களுக்கும் வழக்கமான அபிஷேகம் நடைபெறுகிறது.
மேலும் இங்கு ஆண்டாள் சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. 108 கால் மண்டபத்தின் கடைசி கல் மண்டபத்தில், சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது.
பெருமாள் கோவில்களில் சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் இருப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. இதேபோல கோவில் சுவர்களில் ஆங்காங்கே மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளதைப் போலவே, மோட்ச பல்லியின் சிற்பமும் இருக்கிறது. விஷ பூச்சியால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து மோட்சப் பல்லியை வணங்கிச் சென்றால், அந்த பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு முன்பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை, 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் இருப்பது விசேஷமானது.
புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவிலுக்குள் 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.
வேணுகோபாலனுக்கு ஆவணியில் நடைபெறும் ஜெயந்தி உற்சவம், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் விசேஷமான வழிபாடுகளாகும். இவ்வாலய இறைவனை வழிபாடு செய்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டரில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.
- இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை.
- நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.
முந்தைய காலங்களில் கிராமப் புறங்களில் ஒரு சிறிய கோவிலை அமைத்து, அதில் ராமபிரான் அல்லது கண்ண பிரான் திரு உருவப்படங்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இத்தகைய கோவில்கள் 'பஜனைக் கோவில்கள்' என்று அழைக்கப்பட்டன.
இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை. நமது முன்னோர்கள் ஒன்றாய்க் கூடி பஜனைப் பாடல்களை இசையோடு பாடுவதன் மூலம் இறைவனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல ஊர்களிலும் பஜனை மடங்களை நிறுவினர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் பஜனைக் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இந்த பஜனைக் கோவில்களில் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை இசைத்து நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.
இந்த பஜனை கோவில்கள் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறையில் ராமபிரான், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர் ஆகியோரது சிலைகளை பிரதிஷ்டை செய்து முழுமையாக ஆலயமாக மாற்றப்பட்டன.
அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பெரியகாட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த பஜனைக் கோவிலில், நவநீதக் கண்ணன் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளார். 1904-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
நவநீதக்கண்ணன் பஜனைக் கோவிலாகத் திகழ்ந்த இத் தலத்தில், முதலில் ருக்மணி - சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமியை பிரதிஷ்டை செய்த மக்கள், பின்னர் பல்வேறு திருப்பணி மூலமாக கருடாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, காளிங்க நர்த்தனர் சன்னிதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி ஆகிய சன்னிதிகளையும் அமைத்தனர்.
கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடியான பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பலிபீடமும், அதற்குப் பின்னால் பெரிய திருவடியான கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன.

கருவறையின் முன்னால் சுதைச்சிற்ப வடிவில் துவாரபாலகர்கள் இருபுறமும் காட்சி தருகிறார்கள். கருவறைக்குள் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
வேணுகோபால சுவாமி புல்லாங்குழலை தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ளார். உற்சவர்களாக ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர், ஆண்டாள் மற்றும் நவநீதக்கண்ணன் இருக்கிறார்கள்.
இத்தலத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் அன்று பரிவேட்டை உற்சவம், கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, திருவாடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மூன்றாவது வாரம் சிறப்பு வழிபாடுகள், விஷேச சிறப்பு கல்யாண உற்சவம் முதலானவை விமரிசையாக நடை பெறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி அன்று தவறாமல் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்து, இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.
மன அமைதியை நாடுவோர் இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வேணுகோபால சுவாமியை மனம் குளிர தரிசித்தால் நம் மனம் முழுவதும் அமைதி பரவுவது நிச்சயம். ஒரு கால பூஜை நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணிநேரம் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம் - விட்டிலாபுரம் சாலையில் அமைந்துள்ளது, பெரியகாட்டுப்பாக்கம் திருத்தலம்.