என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாமக"
- தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
- கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இரவு நேரத்தில் இயற்கையின் அழைப்புக்காக வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்ற சிறுமியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூவர் தூக்கிச் சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியைக் காணாமல் தேடிய அவரது தந்தை அருகில் உள்ள கல்குவாரியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.
அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக்கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள்.... அரியலூர் ரெயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரெயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.
- சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார்.
- அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பா.ம.க., வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு புதுச்சேரி பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகாபலிபுரத்தில் நடைபெறும் பா.ம.க. சித்திரை திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது:-
வன்னியரான ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக உள்ளார். ஆனால் அவர் வன்னியராக நடந்து கொள்வதில்லை. வன்னியருக்கு இருக்கக்கூடிய வீரம், உறுதி அவரிடமில்லை. யாரைப் பார்த்தாலும் வழவழப்பான சிரிப்பு. அதிலேயே அனைவரையும் கவிழ்த்து விடுகிறார்.
முதலமைச்சர் வீட்டு வாசலில் கொலை நடக்கிறது. மாதம் தோறும் கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதற்கு சளைக்காமல் தமிழ்நாடு வந்து விட்டது. தமிழகத்தில் கொலை சாதாரணமாகி விட்டது.
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்திரை திருவிழா வன்னியர் சங்கத்தின் இளைஞர் மாநாடு மகாபலிபுரத்தில் நடத்தப்படும். போலீசார் தடுத்தாலும் தடையை மீறி மாநாடு நடத்தப்படும். மாநாட்டிற்கு இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.
சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார். அடுத்தும் எங்க ஆட்சி தான் என ஆட்டம் போடுகிறார். இதுக்கு போட்டியாக அடுத்து ஒரு சினிமா நடிகர் வந்துள்ளார். அவர் ஒரு கூட்டம் போட்டு 2026-ல் ஆட்சி என்கிறார். அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே தஞ்சாவூருக்கு அருகில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை.
மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். மக்களிடமிருந்தும், தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் முதலமைச்சர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதலமைச்சர் செல்லவில்லை. காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று உயர்நீதிமன்றம் இன்று வினா எழுப்பியுள்ளது. நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
- 2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் ஏற்கனவே நடத்திய மாநாட்டில் கலவரம் ஏற்பட்டதால் 12 ஆண்டுகள் சித்திரை திருவிழா நடைபெறவில்லை.
வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் சித்திரை திருவிழா நடத்த கோரிய நிலையில் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் நடைபெறும்.
- வறட்சி, மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21-ந்தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் டிசம்பர் 21-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான நான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.
வறட்சி, மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை, பயிர்க்கடன்கள் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என உழவர்களின் துயரங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. உழவர்களின் துயரங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு உரைக்கும் வகையில் எடுத்துக் கூறி, தீர்வுகளைப் பெறுவதற்காகவே தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்
- டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்றபோது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவதை தொடக்க நிலையிலேயே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவோ தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல்: சிறைபிடிப்பு-உடனடியாக திட்டத்தைக் கைவிட வேண்டும்!திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு…
— Dr S RAMADOSS (@drramadoss) November 15, 2024
- ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பும் முடிவை கண்டிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது.
- அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.
பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனர் அண்மையில் அத்துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று அறிக்கை வெளியிட்ட நான், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஊதிய செலவை மிச்சப்படுத்தும் நோக்குடன், 497 ஆசிரியர்களை விடுதிக்காப்பாளர் பணி செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு விற்கப்போகிறார்களா? என்று வினா எழுப்பி கண்டித்திருந்தேன்.
அடுத்த சிறிது நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இது குறித்து கேட்டபோது,''இது பற்றி எனக்குத் தெரியாது. இது பி.சி துறையில் வருகிறதா, எங்கள் துறையில் வருகிறதா? எனத் தெரியவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆசிரியர்கள் விற்பனை தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனரின் சுற்றறிக்கை கடந்த 7-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் ஒரு வாரமாகியும் இது குறித்து அமைச்சருக்கே எதுவும் தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பும் முடிவை கண்டிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது. இது தொடர்பான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரின் கடிதம் பள்ளிக்கல்வித்துறைக்கு செப்டம்பர் 23-ம் நாள் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் 44 நாட்கள் கழித்து தான் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இடைப்பட்ட ஒன்றரை மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இது இரு துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிலையில் விவாதித்து கொள்கை முடிவு எடுக்கப்படாமல், ஆசிரியர்களை இன்னொரு துறைக்கு அனுப்புவது சாத்தியமில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாமல், ஆசிரியர்களை விடுதி காப்பாளர் பணிக்கு அனுப்புவதற்கான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் அனுப்புகிறார் என்றால் அந்த முடிவை எடுத்தவர் யார்? இந்த வினாவுக்கான விடையை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. அதை தெரிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை.
எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும். பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்துவதை ஏற்று பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சருக்குத் தெரியாதா? முடிவெடுத்தது யார்? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்!தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 15, 2024
- அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா?
- அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்.... ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினமான இன்று பள்ளிகளில் அவர்களை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா? அதற்கு உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் போதுமானது.
அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் அகிலம் அவர்கள். அவர்களின் உலகில் வஞ்சம், வெறுப்பு. பொறாமை, பகைமை உள்ளிட்ட எதற்கும் இடமில்லை. அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்.... ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவர்களின்றி உலகில் எதுவும் இல்லை. அவர்களை நாம் கொண்டாடுவோம். குழந்தைகளைப் போன்ற உள்ளங்களைப் பெற முயற்சி செய்வோம்! என்று தெரிவித்துள்ளார்.
- வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
- வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.
ஆனாலும், திமுக அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. திமுக அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
- கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்.
கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா?சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 13, 2024
- சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது.
- தி.மு.க.வினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் வணிகர் மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை.
அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது. சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது.
காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட தி.மு.க.வினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாவிட்டால், அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தமிழ்நாட்டையும் அப்படி ஒரு மோசமான நிலைக்கு திராவிட மாடல் அரசு தள்ளிவிடக்கூடாது. தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவியை பாம்பு கடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்படூர் கிராமத்தில் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவி சங்கரியை பாம்பு கடித்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் நம்மியந்தல் கிராமத்தில் இந்த பணியில் ஈடுபட்ட குருராமலட்சுமி என்ற மாணவி விஷபூச்சி கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவிகளின் இந்த நிலைக்கு பொறுப்பற்ற திமுக அரசு தான் காரணம்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்ட நான், ''செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?
கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத திமுக அரசு, மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி இந்தப் பணியில் ஈடுபடுத்தியதால் தான் சர்வேயின் முதல் நாளிலேயே பாம்பு கடித்தும், விஷப்பூச்சி கடித்தும் இரு மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. திறனற்ற தமிழக அரசு அதன் தோல்விகளை மறைப்பதற்காக மாணவ, மாணவிகளை பலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய திமுக அரசின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
மாணவி சங்கரி, குருராமலட்சுமி ஆகியோருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவிகளுக்கு தரமான மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து வேளாண் மாணவ, மாணவியரை உடனடியாக விடுவித்து வருவாய்த்துறை அல்லது தனியார் அமைப்பைக் கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்