search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரவுட்ஸ்ட்ரைக் முடக்கம்"

    • உலகம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
    • இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், வங்கிகள், பங்கு சந்தைகள் உள்பட பல்வேறு முக்கிய அத்தியாவசிய சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்டிரைக்' என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட உலகம் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

    'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி தனது பால்கன் சென்சார் மென் பொருளை மேம்படுத்துவது உண்டு. அப்படி மேம்படுத்தினால்தான் மென் பொருள் நிறுவனங்களின் இயங்கு தளங்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சிறப்பாக செயல்பட முடியும்.

    இந்த நிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் நேற்று 'கிரைவுட் ஸ்டிரைக்' நிறுவனம் பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது விண்டோஸ் மென்பொருளின் குறிப்பிட்ட சில இயங்கு தளங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

    இத்தகைய சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது. இதனால் 'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால்கன் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    என்றாலும் தொழில்நுட்ப செயலிழப்பை உடனடியாக சரி செய்ய இயலவில்லை. இதனால் நேற்று மதியம் முதல் உலகம் முழுவதும் போக்குவரத்து, மருத்துவம், தொலைத் தொடர்பு, வங்கி பணிகள் போன்றவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.


    அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்பட பல நாடுகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கின. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் விமான சேவைகள் முடங்கின.

    இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அது போல வங்கி சேவை, பங்கு சந்தை சேவை ஆகியவற்றிலும் பாதிப்பு காணப்பட்டது.

    'கிரவுட் ஸ்டிரைக்' நிறுவனத்தினர் இன்று பால்கன் சென்சார் மென்பொருளை ஓரளவு சரி செய்து விட்டனர். இதன் காரணமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. என்றாலும் உலகம் முழுவதும் இன்று 2-வது நாளாக தொழில்நுட்ப செயல் இழப்பின் பாதிப்பு இருந்தது.

    மைக்ரோ சாப்ட் தொழில் நுட்ப பிரச்சனையால் உலகம் முழுவதும் வர்த்தகத்தில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது. பல நாடுகளில் இன்றும் பெரிய நிறுவனங்கள் மற்றும் நடுத்தர அலுவலகங்கள் ஸ்தம்பிக்கும் நிலையில் இருந்தன. இன்று மாலை முதல் இயல்பு நிலை முழுமையாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் இன்று 2-வது நாளாக விமான சேவை, வங்கி சேவை, பங்கு சந்தை நிறுவன செயல்பாடு ஆகியவற்றில் பாதிப்பு காணப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்பட பல நகரங்களில் 2-வது நாளாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னையில் நேற்று மதியத்தில் இருந்து, நள்ளிரவு வரை 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதுவரை வருகை விமானங்கள் 8 புறப்பாடு விமானங்கள் எட்டு என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ரத்தான அந்த 16 விமானங்களில் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளில் பலர் பயணத்தை ரத்து செய்து விட்டு வீடுகளில் திரும்பி சென்றனர். சில பயணிகள் காத்திருந்து மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் டெல்லி மும்பை கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம் கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகள் இன்றும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிறகு தொழில் நுட்ப செயல் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீராக தொடங்கியது. இதன் காரணமாக சென்னை விமான நிலைய கணினிகள் ஓரளவு செயல்பாட்டுக்கு வந்தன. இதன் மூலம் விமான இயக்கம் இயல்பு நிலைக்கு வர தொடங்கி உள்ளது.

    11 மணிக்கு பிறகு உள்ளூர் விமான சேவைகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின. இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவைக்கு இன்று வழக்கம் போல விமான சேவைகள் இயக்கப்பட்டன.

    என்றாலும் வங்கி சேவைகளில் இன்றும் பாதிப்பு காணப்படுகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தவிர மற்ற வங்கிகள் இன்று மதியத்திற்கு இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி சேவை மற்றும் ரெயில் போக்குவரத்திலும் இன்று பாதிப்பு இருந்தது. மைக்ரோ சாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையில் ரஷியா, சீனா இரு நாடுகளும் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×