search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமைக்குழு கூட்டம்"

    • எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    • அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக தற்போது முதலமைச்சராக பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்டசபை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

    இதையடுத்து உரிமைக்குழு, தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது.

    இதை எதிர்த்து முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், சட்டசபைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.


    அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டசபை தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டுமெனக் கூறினார்.

    அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவி்ல்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டசபை முடிவுக்கே விட்டுவிடலாம், என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள இன்று பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் தீர்ப்பை பிறப்பிக்க தயாரான போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 14 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த வழக்கில் தற்போது நீங்கள் தீர்ப்பளித்தால், இவர்கள் மேல்முறையீடு செல்லும் பொழுது எங்களுடைய கருத்தை கேட்காமலேயே ஐகோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்யும்போது அவர்கள் நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கு நடத்தியுள்ளனர் .

    இதை நான் கூட கவனிக்கவில்லை. அதற்காக மன்னிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.

    உடனே நீதிபதிகள் ஆவணங்களை எடுத்து பார்த்தனர். பின்னர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப வில்லை. நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம் அவர் கிடைக்க வில்லை என்று அச்சிடப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்கள் அனைவரும் பிரபல மானவர்கள் என்று கூறினர். பின்னர், எதிர்மனு தாரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேருக்கும் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரிலோ நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் நோட்டீசை பெற்றுக் கொண்டு வருகிற வியாழக்கிழமை தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கலாம். இந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

    ×