search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமலை நாயக்கர் அரண்மனை"

    • சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
    • நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும்.

    சென்னை:

    மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை இரவில் ஒளிரும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்,

    தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!

    சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!

    இவற்றைப் போலவே, நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.
    • தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றன.

    மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாயக்கர் மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவராக திருமலை நாயக்கர் கி.பி.1623- 1659 வரை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்க மன்னர் கி.பி.1636 ஆம் ஆண்டில் மதுரையில் அரண்மனை ஒன்றினைக் கட்டினார். இந்த அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.

    தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்கிறது.

    திருமலை நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த அரண்மனை அரியணை மண்டபம், அந்தப்புரம், நாடகசாலை, பள்ளியறை, பூசை அறை, படைக்கலன், வசந்தவாவி, மலர்வனம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

    திருமலை மன்னரின் பேரன் சொக்கநாத நாயக்க மன்னர் தனது தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். எனவே இந்த அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து திருச்சிராப்பள்ளியில் புதிய அரண்மனையை உருவாக்கினார். தற்போது அரண்மனையின் நான்கு ஒரு பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.

    திருமலை நாயக்கர் அரண்மனை இந்தோ-சாரசனிக் கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டதாகும். இந்துக்கோயில்களின் கட்டக்கலையும் முகமதியக் கட்டக்கலையும் இணைந்து கட்டப்பட்டும் கலையை இந்தோசாரசனிக் கட்டக்கலை என்றழைப்பர்.

    இவ்வரண்மனையில் சென்னை மாகாண ஆளுநர் 1879-ஆம் ஆண்டு ரூ 5 இலட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மேலும், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன.

    திருமலை நாயக்கர் அரண்மனையினை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மதுரைக்கு வட இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரண்மனையைக் கண்டுகளிக்கின்றனர்.

    பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    திருமலை நாயக்கர் அரண்மனையினை உலகத்தரம் வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருங்கால தலைமுறையினருக்கு இத்தகைய மரபுச் சின்னங்களைத் தொன்மை மாறாமலும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் பாதுகாத்து எடுத்துச் செல்வது நமது தலையாய கடமையாகும் என்ற உன்னத நோக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    "மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை" என்ற உயரிய நோக்கோடு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

    ×