search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாஷ்நாதன்"

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி கவர்னர் இல்லாமல் பொறுப்பு கவர்னர்கள் நிர்வகித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னர்தான் அரசு என்றும், நிர்வாகி என்றும் அழைக்கப்படுகிறார்.

    கவர்னரின் அனுமதி பெற்றே அரசின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது. அதேநேரத்தில் 2021-ம் ஆண்டு முதல் புதுவைக்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. தனி கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் பொறுப்பு கவர்னராக செயல்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். .

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு கவர்னர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி கவர்னர் இல்லாமல் பொறுப்பு கவர்னர்கள் நிர்வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் புதுவையின் பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய கவர்னராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாஷ்நாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதிய கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுவைக்கு வந்தார்.

    அவரை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

    இன்று கவர்னர் மாளிகையில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடந்தது.இதற்காக கவர்னர் மாளிகை வளாகத்தில் மேடையும், பந்தலும், விருந்தினர் அமர இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.

    சரியாக காலை 11.15 மணிக்கு மாளிகையிலிருந்து கைலாஷ்நாதன் மேடைக்கு வந்தார். இதனையடுத்து பதவியேற்பு விழா, தேசிய கீதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புதுவை தலைமை செயலாளர் சரத்சவுகான், புதிய கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×