search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ப்பூர் போலீசார்"

    • வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
    • கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் அனுஜ். அவர் ஆகஸ்ட் 18-ந்தேதி அன்று தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் மலைக்கு சென்று இருந்தார். அந்த இடத்தில் அனுஜ்ஜை கண்காணித்த சிலர் அவரது உடையை பார்த்து, அவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று கருதி, அவரை கடத்த முடிவு செய்தனர்.

    அவரை அணுகி வாயில் டேப் ஒட்டி, கை, கால்களை கட்டி, கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்கள் அவரை காரில் அழைத்துச் சென்றனர். அவரது நண்பரை தாக்கி வழியிலேயே இறக்கி விட்டனர்.

    வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு, போலீசார் அவரது நண்பர் சோனியை விசாரித்து, ட்ரோன்களை பயன்படுத்தி நஹர்கர் மலைகளில் சோதனை செய்தனர்.

    இதற்கிடையில், அனுஜின் பெற்றோருக்கு கடத்தல்காரர்களிடமிருந்து போன் வந்தது. அவர்களது மகனை விடுவிப்பதற்காக அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கேட்டனர்.

    அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், பணம் திரட்ட அனுஜ் பெற்றோர் அவகாசம் கேட்டனர்.

    கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து அனுஜ் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடத்தல்காரர்களின் போன் கண்காணிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது.

    ஒரு நாள் கடத்தல்காரர்கள் மீண்டும் அனுஜ் குடும்பத்தை அழைத்து பணத்தை கொண்டு வந்து கல்கா-சிம்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பெட்டியில் உட்காருமாறு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன. தரம்பூர் ரெயில் நிலையம் அருகே பணப்பையை வீசி எறியுமாறு கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, அங்கு காத்திருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டவர் வீரேந்திர சிங் என்ற மென்பொருள் பொறியாளர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடிவருகின்றனர்.

    இறுதியாக ஜெய்ப்பூர் காவல்துறையினரால் ஆகஸ்ட் 27-ந்தேதி அனுஜ் மீட்கப்பட்டார். அவர் ஒரு ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீசார் அவரை மீட்டனர்.

    அனுஜ் எழுந்திரு... எழுந்திரு... ஜெய்ப்பூர் போலீஸ் என்று கூறுகின்றனர்.

    அனுஜ் ஹாய்... ஹலோ... என்று கை அசைக்கிறார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் அனுஜ் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை மீட்க தாங்கள் இருப்பதாகவும் போலீசார் அவரை எழுப்புவதையும் காணலாம்.

    ×