search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூடா முறைகேடு வழக்கு"

    • சித்தராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
    • முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மதிப்புள்ள நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின்பேரில் நீதிமன்ற வழிகாட்டு தலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2-வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3-வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4-வது குற்றவாளியாக தேவராஜன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லோக் ஆயுக்தா போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை 10.10 மணிக்கு ஆஜரானார். இதையொட்டி அலுவலகம் வெளியே உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பத்திரிகையாளர்களும் அந்த பகுதியில் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

    லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு தி.கா. உதேஷ் தலைமையிலான குழுவினர் முதல்-மந்திரி சித்தராமை யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விபரங்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கமாக பதில் அளித்தார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி லோக் ஆயுக்தா அலுவலகம் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் லோக் ஆயுக்தா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதற்கிடையே மைசூரு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் லோக் ஆயுக்தா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர் இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • முதலமைச்சராக இருக்கும் நான் யாரோ ஒருவர் வீட்டில் வாடகைக்குதான் இருக்க வேண்டுமா?
    • மைசூருவில் உள்ள குவேம்பு சாலையில் என்னுடைய வீடு கட்டப்பட்டு வருகிறது. இன்னும் வேலை முடியவில்லை.

    மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தியிடம் 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தனக்கு சொந்த வீடு இல்லை என கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையா தெரிவித்துள்ளார். தனது சொந்த தொகுதியான வருணாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சித்தராமையா பேசினார். அப்போது சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

    என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை. குமாரசாமி, எடியூரப்பா, விஜயேந்திரா, அஷோகா, பிரகலாத் ஜோஷி போன்றோர்களால் நான் முதல்வராக இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.

    முதலமைச்சராக இருக்கும் நான் யாரோ ஒருவர் வீட்டில் வாடகைக்குதான் இருக்க வேண்டுமா? சொல்லுங்கள்... நான் இதை ஏன் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால் நீங்கள்தான் என்னுடைய உரிமையாளர்கள், மாஸ்டர்கள். என்னை அசீர்வதித்தவர்கள்.

    மைசூருவில் உள்ள குவேம்பு சாலையில் என்னுடைய வீடு கட்டப்பட்டு வருகிறது. இன்னும் வேலை முடியவில்லை. எனக்கு சொந்தமாக எந்த சொத்தும் இல்லை. கட்டுமான வேலை நடைபெற்று மூன்று வருடங்கள் ஆகிறது. கடந்த மூன்று வருடங்களாக மெதுவாக வேலை நடைபெற்று வருகிறது.

    என்னுடைய செல்வாக்கை குறைக்க எப்படி பழி சுமத்துகிறார்கள் பாருங்கள். இந்த செல்வாக்கு எல்லாம் நீங்கள் கொடுத்தது. நீங்கள் ஆசீர்வதித்தது. நீங்கள் கொடுத்த அதிகாரம். நீங்கள் மட்டும்தான் திரும்ப பெற முடியும்.

    சித்தராமையா 2-வது முறையாக முதல்வரானதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் முதல்வராகுவதை பா.ஜ.க. விரும்புவதில்லை. சமூக நீதியை அமல்படுத்துதல், ஏழைகளுக்காக பணியாற்றுதல் போன்றவை அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது. ஏழை மக்களுக்கு எதிரானது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
    • நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 'மூடா' நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு காணொலி மூலம் ஆஜராகி இருந்த சித்தராமையாவின் வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, இந்த தீர்ப்புக்கு 2 வாரங்கள் தடை விதிக்குமாறு கோரினார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, நான் வழங்கிய தீர்ப்புக்கு நானே தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

    தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தீர்ப்பு பற்றி தெரியவந்ததும் அவர் உடனடியாக தனது காவேரி இல்லத்துக்கு புறப்பட்டார். மேலும் மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சித்தராமையாவை சந்தித்து பேசினர்.

    முதல்-மந்திரி சித்தராமையா ஐகோர்ட்டு தீர்ப்பு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக கோரி எதிர்கட்சிகள் விலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா பா.ஜனதாவினர் சமூகநீதி, ஏழை மக்களுக்கு எதிரானவர்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

    ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகலை நான் முழுமையாக வாசிக்கவில்லை. அதை படித்து பாா்த்த பிறகு நான் விரிவாக உங்களுடன் பேசுகிறேன். பா.ஜனதாவினர் எனக்கு எதிராகவும், எனது அரசுக்கு எதிராகவும் சதி செய்கிறார்கள்.

    நான் எந்த தவறும் செய்யவில்லை. ஐகோர்ட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கிய காரணத்தால் நான் தவறு செய்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. ஐகோர்ட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் 17ஏ பிரிவின்படி மட்டுமே விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனக்கு எதிராக முழு விசாரணைக்கு அனுமதி வழங்கவில்லை.

    நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?. நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். மத்திய மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. அவர் ராஜினாமா செய்துவிட்டாரா?. இது அவருக்கு பொருந்தாதா?. இதுகுறித்து அவரிடம் போய் கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • லோக்அயுக்தா போலீசார் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள்.
    • சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

    மேலும் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. முதல் நாளிலேயே, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் கவர்னர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.

    அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


    இந்த நிலையில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு அளிக்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில் மூடா முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என்று உத்தரவு விடப்பட்டுள்ளது.

    அதன்படி லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள்.

    விசாரணை நடத்தி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் நிலை ஏற்படும். அதே நேரத்தில் சித்தராமையா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.

    ×