search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முனிவர் சிலாதர்"

    • இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது.
    • பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும்.

    ஒரு ரிஷி எமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார்.! எம தர்மன் அவரது ஆசைக்கு செவிசாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திர குப்தனை அனுப்புகிறேன் என்றார். பின் சித்திரக்குப்தனை எமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார். சித்திரக்குப்தன் எமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.


    எமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி. நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார்.

    தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். 'இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்? நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம் கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?

    சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனை திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.

    இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.

    'இது என்ன கற்பாறை?*

    'ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம். இப்படி வளர்ந்து நிற்கிறது!"

    "சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?"

    பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்த பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான்.

    அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்த கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது.

    விதி முடியும் நேரத்தில் அவன் எமலோகத்துக்கு வரும்போது இந்த பாறையை அவன் உண்ண வேண்டும் இதுதான் அவனுக்கான தண்டனை" என்றான் சித்ரகுப்தன்.

    அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள், முனிவருக்கு அந்த சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம்.

    ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்த சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல. சாட்சாத் அவரேதான்.

    தன் தவறை உணர்ந்தார். எமதர்மனிடம் போனார் நடந்ததைச் சொன்னார்.

    எமதர்மா நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்கு தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும், எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்த பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்த கல்லை தின்று செரித்துவிடுகிறேனே!

    முனிவரின் கோரிக்கையை எமதர்மன் ஏற்றான். கல்லை சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். 'சிலா' என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர். சிலாதர் ஆனார்.

    எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும்.

    ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்கு கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள்.

    சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது. அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.

    ×