search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டபேதார்"

    • டபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • டபேதார் மாதவி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ரிப்பன் கட்டிடத்தில் மகளிர் தின விழா நடந்தபோது பேஷன் ஷோவில் பங்கேற்றது விவாதமானது.

    சென்னை:

    சென்னை மேயர் பிரியாவின் டபேதாராக மாதவி (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் டபேதார் மாதவி செல்வார். மாதவி உதட்டில் கலர் கலராக "லிப்ஸ்டிக்" பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். இதனால் "லிப்ஸ்டிக்" பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து "லிப்ஸ்டிக்" பூசி வந்துள்ளார்.

    கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற டபேதார் மாதவி "லிப்ஸ்டிக்" பயன்படுத்தி உள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் கண்டித்தார்.

    இந்த நிலையில் டபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களினால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் பணிக்கு உரிய நேரத்தில் வராதது, மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காதது ஆகிய காரணங்களுக்காக மேயரின் கடந்த ஆகஸ்டு 6-ந்தேதி மெமோ அனுப்பப்பட்டது.

    அந்த மெமோவுக்கு பதிலளித்த மாதவி, ''நான் லிப்ஸ்டிக் அணியக்கூடாது என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் நான் லிப்ஸ்டிக் அணிந்தேன். இது குற்றம் என்றால் லிப்ஸ்டிக் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை காட்டுங்கள். சென்னை மாநகராட்சி போன்ற ஒரு அமைப்பில் மனித உரிமைகளை மீறும் வகையிலான இத்தகைய விதிமீறல் கவலையளிக்கிறது'' என கூறி இருந்தார்.

    இதற்கு முன்பு டபேதார் மாதவி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ரிப்பன் கட்டிடத்தில் மகளிர் தின விழா நடந்தபோது பேஷன் ஷோவில் பங்கேற்றது விவாதமானது.

    இதுபற்றி மேயர் பிரியா கூறுகையில், ''மகளிர் தினத்தின்போது பேஷன் ஷோ ஒன்றில் டபேதார் பங்கேற்றது விமர்சனத்துக்குள்ளானது. அவர் மேட் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். லிப்ஸ்டிக் அணிந்திருக்கும்போது அது கவர்ச்சிகரமாக இருந்தது. மேயர் அலுவலகம் என்பது அடிக்கடி அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து செல்லும் இடம். மேலும் இதுபோன்ற ஷேடுகளில் லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று எனது உதவியாளர் அவரிடம் கூறினார். ஆனால் டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், இந்த லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை'' என்றார்.

    இதுகுறித்து டபேதார் மாதவி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாற்றம் செய்துவிட்டனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து அருகே உள்ள அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யாமல் மணலிக்கு மாற்றம் செய்துவிட்டனர்.

    எனது மூத்த அதிகாரிகள் கொடுத்த உத்தரவுகளை மீறியதை தவிர, சரியான நேரத்தில் வேலைக்கு வரவில்லை என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள்.

    கடந்த ஆகஸ்டு 6-ந்தேதி வெறும் 30 நிமிடம் தாமதமாக வந்தேன். காலை 10.30 மணிக்கு அலுவலகத்தை அடைந்தேன். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தாமதம் ஆனது. மேயரின் உதவியாளர்கள் தொடர்ந்து என் லிப்ஸ்டிக்கை குறைக்க சொன்னார்கள். நான் பளபளப்பான புடவைகளை அணிந்திருப்பதாக அவர்கள் என் மீது குற்றம் சாட்டினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×