என் மலர்
நீங்கள் தேடியது "நட்சத்திர ஓட்டல்கள்"
- சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் களைகட்டத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி:
சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது.
இதுதவிர இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு பிறக்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி இப்போதே தயாராகி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை ஒரு வார காலத்திற்கு புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச் ரெசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஓட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் களைகட்டத் தொடங்கி உள்ளது.
மேலும் டிசம்பர் 31-ந் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அளவில்லாத அசைவ உணவுடன் மது பானங்களும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணாசாலை, நேருவீதியில் மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த வீதிகள் மின்னொளியில் ஜொலிப்பது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இது உள்ளது.
போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பணியில் இருந்தாலும் இந்திரா காந்தி சிக்னல், ராஜிவ் காந்தி சிக்னல், நெல்லித்தோப்பு, கொக்கு பார்க் சிக்னல்களில் நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரும் போது மட்டும் போக்குவரத்து போலீசார் தனி கவனம் செலுத்துகின்றனர்.
புத்தாண்டை கொண்டாட இப்போதே வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவியத்தொடங்கி உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நேற்று மாலை புதுச்சேரி நகர பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டது.