என் மலர்
நீங்கள் தேடியது "கேது பரிகாரத் தலம்"
- கேது பகவான் ‘ஞானகாரகன்’ என்று போற்றப்படுகிறார்.
- அனைத்து உற்சவங்களும் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
கோவில் தோற்றம்
சென்னையை அடுத்துள்ள போரூருக்கு அருகில் இருக்கிறது, கெருகம்பாக்கம் என்ற ஊர். இங்கு ஆதிகாமாட்சி உடனாய திருநீலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் இது கேது பரிகாரத் தலம் ஆகும். எனவே இதனை 'வடகீழ்ப்பெரும்பள்ளம்' என்று அழைக்கிறார்கள்.
கேது பகவான், ஜோதிட சாஸ்திரப்படி 'ஞானகாரகன்' என்று போற்றப்படுகிறார். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள், கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் கேதுவின் நிலை சரியில்லை என்றால், அந்த நபர் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அது அவ்வளவு எளிதில் வெற்றியை அடையாது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலி மிகுதியால் வாசுகி பாம்பானது நஞ்சை கக்கியது. அதேநேரம் பாற்கடலில் இருந்தும் நஞ்சு உருவானது. இவை இரண்டும் சேர்ந்து 'ஆலகாலம்' என்ற கொடிய விஷமாக மாறின.
இந்த ஆலகால விஷத்தால் உலகமே அழியும் நிலை உருவாகும் என்பதால், தேவர்கள் அனைவரும் அஞ்சினர். அப்போது ஈசன், அந்த நஞ்சை அருந்தினார்.
இதனால் பதறிப்போன பார்வதிதேவி, அந்த நஞ்சு இறைவனின் உடலில் இறங்காதபடி, அவரது கண்டத்தை இறுகப்பற்றினார். இதனால் நஞ்சு, ஈசனின் கழுத்திலேயே நின்றது. இதன் காரணமாகவே, சிவபெருமானுக்கு 'நீலகண்டர்' என்ற பெயர் வந்தது.
அந்த திருநீலகண்டேஸ்வரரின் நாமத்தோடு, அமைந்த ஆலயம்தான் கெருகம்பாக்கத்தில் உள்ள ஆதிகாமாட்சி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் ஆகும். தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது, இந்த திருக்கோவில். கருவறையில் ஈசன் திருநீலகண்டேஸ்வரராக லிங்க ரூபத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே நந்திகேஸ்வரர் வீற்றிருக்கிறார்.
திருநீலகண்டேஸ்வரரே இத்தலத்தில் கேது பகவானாக அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக இத்தலத்தில் கேது பகவானுக்கென தனிச் சன்னிதி இல்லை. கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் பாணமானது பாம்பினுடைய தலையாகவும், ஆவுடையார் சுற்று பாம்பின் உடல் பகுதியாகவும், அடிப்பாகம் பாம்பின் வால் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது.
இவ்வாலய அம்பாள், 'ஆதிகாமாட்சி' என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கி அருள்கிறார். அழகே உருவாய் அமைந்த இந்த அம்பாளின் எதிரில் அவளது வாகனமான சிம்மம் காட்சி தருகிறது. விநாயகப் பெருமான் 'சங்கடஹர கணபதி' என்ற திரு நாமத்தோடு தனிச் சன்னிதியில் அருள்கிறார்.
அம்பாள் சன்னிதிக்கு அருகில் காலபைரவருக்கும் தனிச்சன்னிதி இருக்கிறது. தவிர சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். இவ்வாலயத்தின் முன்மண்டபத் தூண்களில் கேது பகவான், பைரவர் உள்ளிட்ட பல தெய்வங் களின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
வெளிச்சுற்றில் நாகராஜர் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியில் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில் நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் உள்ள விதானத்தில், சூரியனை கேது பகவான் விழுங்குவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர் கீழே நின்றபடி, ஈசனையும் அம்பாளையும் மனமுருக வேண்டிக் கொண்டால், கேதுவின் கெடுபலன்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு தீர்த்தம் இல்லை.
சிவத்தலங்களுக்கே உரிய அனைத்து உற்சவங்களும் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக சிவராத்திரி, ராகு - கேது பெயர்ச்சி, பிரதோஷம், பவுர்ணமி, காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, விநாயகருக்கு சங்கடகர சதுர்த்தி, பங்குனி உத்திரம் அன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் (புஷ்பாபிஷேகம்) முதலான பல உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கிண்டி - ராமாபுரம் வழியாக போரூர் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது, கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கெருகம்பாக்கம் இருக்கிறது.
கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கெருகம்பாக்கம் உள்ளது.