என் மலர்
நீங்கள் தேடியது "marriage bond"
- இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை விவாதித்துவிடுவது நல்லது.
- பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது.
அத்தகைய விவாதம் திருமண வாழ்க்கையை தெளிவான கண்ணோட்டத்துடன் கட்டமைக்க உதவிடும். தடுமாற்றமோ, கருத்துவேறுபாடோ இன்றி சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிவகை செய்துவிடும். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிடுகிறோம்.
திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு மட்டுமல்ல திருமணத்தை நடத்தும் போதும் நிதி விஷயம் பற்றி இருவரும் விவாதிப்பது நல்லது. ஏனெனில் விமரிசையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி செலவு செய்தால், பின்பு திருமணத்திற்கு பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இருவரும்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
அதனால் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வது? இருவரும் திருமணத்திற்கு முன்பு அன்றாடம் செய்யும் செலவுகள் என்னென்ன? ஏற்கனவே கடன் இருந்தால் அதனை எப்படி திருப்பி செலுத்துவது உள்ளிட்ட குடும்ப வரவு செலவு திட்டங்களை கையாள்வது பற்றி விவாதிப்பது நல்லது.
சேமிப்பை பற்றி விவாதிக்கும்போது ஓய்வு கால சேமிப்பு பற்றிய திட்டமிடலும் இடம் பெறுவது இறுதி கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க உதவிடும்.
குழந்தை
குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் திருமணத்திற்கு முன்னரே விவாதித்துவிடுவது நல்லது. ஏனெனில் இருவரில் ஒருவர் குழந்தை பேற்றை தள்ளிப்போட விரும்பலாம். அப்படி விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குவது அவசியமானது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண வயதை எட்டிய பிறகும் காலதாமதமாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.
எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தை வளர்ப்புக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள், குழந்தைக்கான கல்விச்செலவு உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொண்டு விவாதிப்பது சிறப்பானது.
வேலை-வாழ்க்கை சமநிலை
திருமணத்திற்கு முன்பு துணை வேலைக்கு சென்று வந்திருக்கலாம். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர விருப்பப்படலாம். அவரின் கருத்துக்களை கேட்டறிந்து வேலை நேரம், வேலைக்கு சென்று வர ஆகும் பயண நேரம், துணையின் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்து கொள்வது நல்லது.
வேலை, குடும்பத்தை நிர்வகிப்பதற்கு இது உதவும். மேலும் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முன்வருவது துணை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். திருமண பந்தத்தை வலுவடையச் செய்யும்.
குடும்ப அமைப்பு
திருமணத்திற்கு முன்பு வரை மணமகனோ, மணமகளோ இருவரும் பெற்றோரின் ஆதரவில்தான் வசித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் பெண் அங்கு புதிய உறவுகளுடன் பழகி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
திருமணத்திற்கு பிறகு மணமகன் பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதற்கு விரும்பலாம். மணப்பெண்ணோ தனியே சுதந்திரமாக வாழ விரும்பலாம். அதனால் இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்பே விவாதித்துவிடுவது நல்லது.
தனிக்குடித்தனத்தை விரும்பினால் அதுபற்றி மணமகன் முன்கூட்டியே பெற்றோரிடம் விளக்கி கூறிவிடுவது நல்லது. அது திருமணத்திற்கு பிறகு தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படுவதை தடுக்க உதவிடும்.
குடும்பத்தின் பங்கு
இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் அவரவர் பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதியே செயல்படுவார்கள் என்றாலும் தேவையில்லாமல் தலையீடு செய்வது பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
கூடுமானவரை அவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதுபற்றி இருவரும் விவாதித்து தெளிவான முடிவை எடுத்துவிட வேண்டும். முக்கியமான விஷயங்களில் அவர்களிடம் கருத்து கேட்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா விஷயத்திலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
இருவருக்கும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மரபணு சார்ந்த நோய் தாக்கங்கள் இருந்தால் அதுபற்றி விவாதித்துவிடுவது நல்லது. அதில் இருந்து மீண்டு வரும் வழிமுறைகள், நோய்களை முற்றிலும் குணமாக்கும் தன்மை பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
சச்சரவுகள்
வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் புதுமண தம்பதியர்களுக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருமணத்திற்கு முன்னரே கண்டறிந்துவிடுவது சாலச்சிறந்தது. அதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் தத்தம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இறை நம்பிக்கை
இறை நம்பிக்கை விஷயத்தில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் நல்லது. ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக துணை இருந்தால் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது அவசியமானது. அது திருமண பந்தத்தை வலுவுடன் வைத்திருக்க துணைபுரியும்.
நட்பு
குடும்பம், உறவுகளை பற்றி தெரிந்து கொள்வது போலவே இருவரும் அவரவர் நெருங்கிய நண்பர்களை பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நட்பு எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் விளக்கி விட வேண்டும். திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு வட்டத்தை தொடரலாமா? எந்த அளவுக்கு தொடர்பில் வைத்திருப்பது என்பதையெல்லாம் முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.
இலக்கு
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும். லட்சியங்கள், கனவுகள் இருக்கும். அது பற்றி பேசி தெரிந்து கொள்வதும், அதனை நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதும் இருவருக்குமிடையேயான திருமண பந்தத்தை இன்னும் வலுமையாக்கும்.