என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரசொலி"

    • முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.
    • பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

    விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன்.

    தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

    இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது.

    பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில், கே.பாலகிருஷ்ணன் பேச்சு தோழமைக்கான இலக்கணம் அல்ல என்று தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறியருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். போராட்டங்களை நடத்திவிட்டு அனுமதி அளிக்கவில்லை என கூறுவது அரசியல் அறமல்ல. பாலகிருஷ்ணனின் பேச்சு கூட்டணி அறமல்ல, மனசாட்சிக்கு அறமும் இல்ல.

    அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா இருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்விளைவுகளை பற்றி கவலைபடாமல் பேசுவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கு வக்கீலாக மாற வேண்டியது ஏன்? பாலகிருஷ்ணன் 6 நாட்களுக்கு முன் அவர் எழுதிய அறிக்கையை படிக்க வேண்டும்.

    முதல்வரை எப்போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். எதற்காக வீதியில் நின்று கொண்டு இப்படி கேட்க வேண்டும். முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கே.பாலகிருஷ்ணனுக்கு இருக்கலாம்.

    விழுப்புரம் மாநாட்டில் பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு' என்று சொன்னது பெரியாரின் பொன்மொழி!
    • நீ பேசு. அது உனக்குத் தரப்படும் கூலிக்கு நீ செய்யும் பிழைப்பு.

    பெரியாரை அநாகரிகமாக விமர்சித்த சீமானை கடுமையாக விமர்சித்து தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    95வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக உழைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் பற்றிப் பேச இந்தக் கழிசடைக்கு அருகதை இருக்கிறதா?

    தன்னைத் தானே மோகித்து – சதா சோற்றைப் பற்றியே சிந்தித்து – அடுத்தவரை மிரட்டியே பணம் திரட்டி – வாயை அடகு வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழும் புதுப் பிராணி ஒன்றைப் பிடித்து பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேச கூலி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆரியக் கூட்டம். அவனுக்கு வெட்கமும் கிடையாது. மானமும் கிடையாது. சூடும் கிடையாது. சொரணையும் கிடையாது. எவன் கொடுத்தாலும் எதிர் வீட்டைப் பார்த்துக் குரைப்பான். எவன் ஏவி விட்டாலும் எதிரே நிற்பவனைப் பார்த்து கனைப்பான்.

     

    உழைக்காமல் உண்டி பெருக்குவதற்கு எது எப்போது பயன்படுமோ, அதை அப்போது பயன்படுத்திக் கொள்பவன் அவன்.

    செத்து மடியும் ஈழத்தமிழன் வீட்டில் இருந்தே சொத்து பறித்து வாழ்ந்தவன். இழவு வீட்டில் காசுக்கு ஒப்பாரி வைக்கப் போன ஒருத்தி, 'பந்தலிலே பாவக்காய்' பாடிய பாட்டை தமிழ்நாடு அறியும். 'பந்தலிலே பாவக்காய்... பந்தலிலே பாவக்காய்' என்று ஒருத்தி ஒப்பாரி வைக்க, 'போகையிலே பார்த்துக்கலாம்.. போகையிலே பார்த்துக்கலாம்' என்று இன்னொருத்தி பாடியதாக ஒரு பாட்டு உண்டு. இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்தான்.

    ஐயோ பாவம்! இவன் பேச்சை உண்மை என நம்பி அந்த மக்கள் பணம் அனுப்பி பிழைக்க வைத்தார்கள். அவர்களது உழைப்பைச் சூறையாடி உண்டு கொழுத்தான். நாள்பட நாள்பட அவர்களுக்கும் இது 'விஷஜந்து' என்று தெரிந்து போனதால் 'டாலர்' அனுப்புவதை நிறுத்தினார்கள். இவனுக்கு டல்லடித்தது பிழைப்பு.

    ஈழத்தமிழரை ஆதரித்துப் பிழைப்பது முடிவுக்கு வந்ததும் ஈனப்பிழைப்பு ஐடியா ஒன்று கிடைத்தது. திராவிட இயக்கத்தை, திராவிடத்தை, தந்தை பெரியாரை, திராவிட இயக்கத் தலைவர்களை திட்டிப் பிழைக்க இங்கே சிலரால் தட்சணை தரப்படுகிறது என்ற தகவல் கிடைத்தது, அந்தப் பக்கம் போனான்.

    'திராவிடத்தைத் திட்ட நாக்கு வாடகைக்கு விடப்படும்' என்பதுதான் அவனது கட்சிக் கொள்கை. இப்படி ஒருவனுக்காகத் தானே அந்தக் கும்பல் காத்துக் கிடக்கிறது. உடனே 'மார்வாடி' மூலமாக காசுகளை அனுப்புகிறது. 'கத்து, காசு'. இதுதான் உத்தரவு. கத்தக் கத்தக் காசு. 'இன்னும் இன்னும்' என்று கத்தச் சொல்கிறார்கள். சவுண்ட்டுக்குத் தக்க அளவில் அமௌண்ட்!

     

    ஒரு விஜயலட்சுமிதான் வெளியில் வந்துள்ளார். அவர் இவனுக்குச் சொல்லும் அடைமொழியை இங்கே நாம் பயன்படுத்த முடியாது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. உடம்பில் உடையில்லை என்பதை உணராதவன். சொரணை சிறிதும் இல்லாதவன். உமிழ்நீரைச் சிறுநீராய் கழிக்கும் கழிசடையவன்.

    'மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒருவனுடன் போராட முடியாது' என்றார் தந்தை பெரியார். அது இவன்தான். மானம் இருந்திருந்தால் விஜயலட்சுமியின் ஒரு வீடியோவுக்கே தலைமறைவு ஆகி இருப்பானே! ஆயிரம் வீடியோக்களில் ஒரு லட்சம் வசைச்சொற்களைக் கேட்ட பிறகும் ஒருவனால் எப்படி மீடியாக்களுக்கு முன்னால் பேட்டி தர உட்கார முடிகிறது.

    தமிழ் நிலத்தில் எத்தனையோ போராளிகளை உருவாக்கியவர் தந்தை பெரியார். முப்பது ஆண்டுகள் ஒரு போராளி அமைப்பை நடத்திய பிரபாகரனையே 'ஹோட்டல் ஓனர்' போல உருவகப்படுத்தி விட்டவன் நீ!

    'தமிழ்நாடு தமிழருக்கே' என முழக்கமிட்டவர் பெரியார். இந்திக்கு எதிராக 1938 முதல் போராடத் தொடங்கியவர் பெரியார். 'தமிழா; தலைநிமிர்!' என்று இயக்கம் நடத்தியவர் பெரியார். இராமாயணம் கோலோச்சிய காலத்தில் திருக்குறளை அந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தவர் பெரியார். தமிழ்நிலம் காத்தவர் பெரியார். 'தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் நான் ஏன் வாழவேண்டும்' என்றவர் பெரியார்.

    ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1919 முதல் தீர்மானங்கள் கொண்டு வந்தவர் பெரியார். அதற்காகவே இயக்கங்கள் கண்டவர் பெரியார். அவரது போராட்டத்தால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதல் திருத்தம் கண்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கியவர் பெரியார். அதைச் சட்டமாக்கியவர் தமிழினத் தலைவர் கலைஞர்.

     

    இப்படி ஒரு சாதனையை உன் வாழ்க்கையில் இருந்து சொல். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிய 'க்ரைம்' நம்பர் வேண்டுமானால் இப்படி அடுக்கலாம். மானங்கெட்டவன்.

    'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு' என்று சொன்னது பெரியாரின் பொன்மொழி!

    நீ பேசு. அது உனக்குத் தரப்படும் கூலிக்கு நீ செய்யும் பிழைப்பு. இதுமாதிரி நடந்த எத்தனையோ விபூதி வீரமுத்துகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டார்கள். பெரியார்தான் மண்ணைப் பிளந்து எழுந்து சிலையாக, மலையாக நிற்கிறார்.

    அவர் மீது செருப்பு வீசிய இடத்தில் இன்று சிலை இருக்கிறது. ஆனால் நீ நடந்த தடத்தில் ஒரு புல் கூட முளைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×