என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு மாநகராட்சி மேயர்"

    • ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதில் ரூ.968 கோடி முறைகேடு நடந்ததாக புகார்.
    • மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பிரகலாத் ராவ் மற்றும் உதவி என்ஜினீயர்களின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர்.

    பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2016-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் ஒப்பந்தம் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த சித்தராமையா காலக்கட்டத்தில் பெங்களூரு நகரில் 9,558 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2016-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதில் ரூ.968 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது ஒரே நபருக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து 2019-ம் ஆண்டு பா.ஜனதா பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் என்பவர் ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். அதில் அப்போதைய மேயர், 5 என்ஜினீயர்கள், 5 உதவி என்ஜினீயர்கள் உள்பட 40 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    பின்னர், இந்த வழக்கு லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரித்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

    கடந்த 2023-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநகராட்சி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்த அம்பிகாவதி என்பவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது 40 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இதுகுறித்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைமை என்ஜினீயர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பிரகலாத் ராவ் மற்றும் உதவி என்ஜினீயர்களின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு 10 மணி வரை 11 மணி நேரம் நடந்தது. இதில் ஆழ்துளை கிணறுகள், கான்கிரீட் சாலை அமைப்பது தொடர்பாக நடந்த முறைகேடு குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களை தலைமை என்ஜினீயர், உதவி என்ஜினீயர்களிடம் காட்டி, தீவிர விசாரணை நடத்தினர். அதற்கு என்ஜினீயர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அதை விசாரணைக்காக எடுத்து சென்றனர். மேலும் இது குறித்த விசாரணைக்கு என்ஜினீயர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    ×