என் மலர்
நீங்கள் தேடியது "வங்கதேசத்தினர் ஊடுருவல்"
- திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோவை:
அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.
இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.
இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-
கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.
இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.