என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரதீப வழிபாடு"

    • நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது.
    • லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.

    அமாவாசை அன்று தாமிரபரணி பாயும் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதி வரை பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்த முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துவார்கள்.


    குறிப்பாக பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை மாநகரின் பகுதிகளான குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், முறப்பநாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    தாமிபரணி, காசி நதிக்கு ஒப்பாக கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.

    இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி அருவிக்கரை பகுதியில் வரிசையாக அமர்ந்திருந்து அர்ச்சகர்கள் முன்னிலையில் எள்ளையும், தண்ணீரையும் ஆற்றில் விட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலின் நாகசுனை தெப்பக்குளத்தில் தர்ப்பணம் செய்வார்கள். தை அமாசாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா 12 நாள்கள் நடைபெறும்.


    நிறைவு நாளான 12-ம் திருநாள் அன்று தீா்த்தவாரி, பொருநை நதியில் திருத்துறையில் நீராடல் செய்தால் சகல நோய் தீரும் என்பது ஐதீகம். அதனைத் தொடர்ந்து அன்னதானமும், ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.

    தை அமாவாசை தினத்தன்று நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படும். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது.


    பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.

    நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை அன்று மாலை 6 மணி முதல் 9 வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபத்தால் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தால் ஜொலிக்கும்.


    பித்ருகர்மா என்னும் நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    ×