search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்"

    • 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
    • பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் செல்வகுமரேசன் (வயது 38). இவர் நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

    இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரை, அரிவாளால் வெட்டியும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, சேரன்மகா தேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, வழக்கு ஒன்று தொடர்பாக முப்புடாதி மற்றும் அவரது கூட்டாளிகளை செல்வகுமரேசன் கைது செய்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் முப்புடாதி உள்பட 3 பேரும் கொடைக்கானலில் உள்ள நண்பர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் முப்புடாதி, சேரன்மகா தேவியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரும் தப்பிப்பதற்காக கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதில் முப்புடாதிக்கு முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அதேபோல் அய்யப்பனுக்கு கையில் சவ்வு விலகி இறங்கியது. செல்வகுமாருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    போலீசாரிடம் சிக்கிய முப்புடாதிக்கு சென்னையில் பாலியல் பலாத்கார வழக்கும், அய்யப்பனுக்கு திருச்சியில் ரூ. 30 லட்சம் திருட்டு வழக்கிலும், செல்வகுமாருக்கு சேரன்மகாதேவியில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி மிரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×