என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா"

    • நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும்.

    சென்னை:

    1991 முதல் 1996 வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தி சட்ட விரோத சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த சோதனையில் ஜெயலலிதா வீட்டில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் நகைகளில் மட்டும் விதவிதமான தங்க செயின்கள், வளையல்கள், தங்க கை கடிகாரங்கள், கடிகாரத்தின் தங்க வார்கள், தங்க தட்டுகள், தங்க கிரீடம் நெத்திச்சுட்டி, தங்க ஒட்டியானம், தங்க காசு மாலை, நெக்லஸ்கள் என 481 வகையான தங்க நகைகள் இடம்பெற்றிருந்தது.

    இதில் தங்க ஒட்டியானம் 1.2 கிலோ, தங்க வாள் 1.5 கிலோ, தங்க கிரீடம் ஒரு கிலோ, 1, 600 கிராம் எடை கொண்ட தங்க எழுதுகோல், ஜெயலலிதா ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற தங்க சிலை ஆகியவை மிகப் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றன.

    அத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாங்கி குவித்திருந்த 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

    ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட போது ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

    அப்போது அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்பிறகு மேல் முறையீடு வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    அதன்படி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்து விட்டனர்.

    இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஜெ.தீபா, தீபக் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

    இதையடுத்து ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள 27 கிலோ தங்கம், வைரம், முத்து, மாணிக்கம், பவள நகைகள் மற்றும் 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களை பெங்களூரில் நீதிபதி மோகன் முன்னிலையில் கடந்த 14-ந் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இவற்றை தமிழக உள்துறை இணை செயலாளர் ஆனி மேரி, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு விமலா, கூடுதல் சூப்பிரண்டு புகழ்வேந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இந்த நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த நகைகளை ஏலம் விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் கலெக்டர் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்குவார்கள். இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் நடைபெறும்.

    அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் நகைகள் விற்கப்படாமல், ரிசர்வ் வங்கி அல்லது அருங்காட்சியகத்தில் வைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

    ஆனால் இப்போது ரிசர்வ் வங்கி மூலமாகவோ அல்லது ஏலம் மூலமாகவோ பணமாக்கி கொள்ளலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அதன்படி அரசு செயல்படும்.

    கட்டிடங்கள், இடங்கள், நிலத்தை பொறுத்தவரை சிட்கோ, அல்லது டான்சி மூலம் அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது விற்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ மற்றும் வில்சன் எம்.பி. ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் பல ஏக்கர் நிலங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏலம் விடும் பணிகள் தொடங்கும்.

    ஜெயலலிதா வழக்கை பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் இருந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையாண்டு வந்துள்ளதால் அவர்களுடன் சேர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் கலெக்டர் மேற்பார்வையில் இவற்றை ஏலம் விடும் பணியை தொடங்குவார்கள் என தெரிகிறது.

    இதை யார் மூலம் செயல்படுத்துவது என்பது பற்றி கோர்ட்டு தெளிவாக கூறி இருக்கும். அதன் நகலை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. இன்று அல்லது நாளை வந்ததும் விளக்கமாக தெரிவிக்கிறோம் என்றனர். 

    ×