என் மலர்
நீங்கள் தேடியது "ஹூசைனி"
- இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
- ஹுசைனி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார். இந்த நிலையில் ஹுசைனி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வீடியோவில், 'தனக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், தினசரி 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. இப்படித்தான் தினமும் தனது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது', என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர்.
இதற்கிடையில் தனது உடலை தானம் செய்வதாக ஹுசைனி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹுசைனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்.
இந்த கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர். எனது 'சினேக் பைட் வேர்ல்டு ரெக்கார்ட்' உலக சாதனை நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர். என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையெழுத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹுசைனியின் இந்த உருக்கமான பதிவு நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. உடல் தானம் செய்வதாக அறிவித்துள்ள ஹுசைனிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்துடன் ஆறுதலையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.