என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன் விமான நிலையம்"

    • தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    லண்டன்:

    உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் கடுமையான புகை மூட்டமாக இருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையமும் இன்று இரவு 11.59 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

    விமான நிலையத்துக்கு பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    விமான நிலையம் அருகில் இருந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

    ×