என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly"

    • வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதையொட்டி அவரது அதிரடி அரசியல் திட்டங்கள் பரபரப்பாகி வருகிறது.

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு மற்றும் ஊழல் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதும் அவர் பேசிய அதிரடி கருத்துகள் அரசியல் அரங்கையே அதிர வைத்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. கூட்டணியும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனும், தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீதமும் பெற்ற நிலையில் 5.66 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிவு ஏற்பட்டது. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உடனும், பா.ஜ.க., ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

    எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியின் அரசியல் பார்வை விஜய் கட்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வந்தது.

    வருகிற தேர்தலில் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு அமைந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனையாக அமைந்ததுடன் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    4 முனை போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி கனியை பறிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் தனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×