என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர் பெண் மரணம்"
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.
இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.
இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.
கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.
முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.