search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்வாங்கியது"

    மழை நீடிப்பதால் பகவதி அம்மன் கோவில் மற்றும் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் பக்தர்கள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது.
    கன்னியாகுமரி:

    சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்கின்றன. கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வு, கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, அலையே இல்லாமல் கடல் குளம் போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது ஒன்று நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

    அதேபோல கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடலிலும் இந்த காலை மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரி கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்று 2-வது நாளாகவும் கன்னியாகுமரி கடல் நீர் மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் தண்ணீரின்றி வெளியே தெரிந்தன. கடலில் அலையும் இல்லாமல் குளம் போல் காட்சி அளித்தது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்தனர். நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு தயங்கினர். இதனால் இன்று காலை கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்த சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகளை கரைக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி பகுதியில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் கடந்த 2 நாட்களாக வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிப்பதால் சூரிய வெளிச்சத்தைக் காண முடியவில்லை. இந்த மழையினால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களை சுற்றிபார்க்கமுடியாமல் தாங்கள் தங்கிஇருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளில் இருந்து வெளியேவரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை, கடற்கரைப்பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர். இந்த தொடர் மழையினால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், வட்டக்கோட்டை பீச், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, நீர் விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரைச் சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அமைந்து உள்ள சுனாமி நினைவு பூங்கா, உள்பட அனைத்து பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

    இந்த மழை நீடிப்பதால் பகவதி அம்மன் கோவில் மற்றும் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் பக்தர்கள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது. இந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் மழையினால் பக்தர்களின் வருகை குறைந்து உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.



    ×