search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96107"

    செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும்.
    சென்னை :

    கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், நேரடி தேர்வு தான் கண்டிப்பாக நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அதற்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கியும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடன் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களை கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மர்றும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இனிமேல் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) அனைத்து வகுப்புகளும் ஆப்லைன் (நேரடி) முறையில் நடத்தப்பட வேண்டும்.

    அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் திட்டமிட வேண்டும்.

    உயர்கல்வித்துறை

    செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும். பாடத்திட்டம் முழுமையாக உள்ள நிறுவனங்களில் குறிப்பாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

    தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்து, திருத்தப்பட்ட அட்டவணையை இந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

    அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை பின்பற்றும்போது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் சேர்த்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    தர்மபுரி அருகே 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் வெள்ளோலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அம்பிகா (வயது30). இவர்களுக்கு சுமித்ரா (14) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுமித்ரா அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த  போது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மதிகோன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவை அருகே டூடோரியலில் படிக்க தாய் அனுமதிக்காததால் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராபபட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மொரராஜ் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களது 2-வது மகள் அபர்ணா (வயது19). இவர் கடந்த ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று தோல்வி அடைந்ததால் டூடோரியலில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். ஆனால் அந்த தேர்வில் அபர்ணா தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து நர்சாக வேண்டுமானால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் மீண்டும் டூடோரியலில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பினார். ஆனால் இதற்கு அவரது தாய் உமாமகேஸ்வரி சம்மதிக்க வில்லை. இதனால் மனமுடைந்த அபர்ணா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று கடையில் இருந்து எலிமருந்து (வி‌ஷம்) வாங்கி வந்து அபர்ணா வீட்டில் சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அபர்ணாவை அவரது தாய் உமாமகேஸ்வரி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அபர்ணா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. #SSLCExam
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு 29-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் வரும்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 6-ந்தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SSLCExam
    தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவின் போது வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தவர்கள் மனச்சோர்வுடன் முடங்கிக்கிடப்பதையும் அக்கம் பக்கத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

    தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

    சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.

    தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.

    குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

    பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

    பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.

    21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

    அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.

    இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.

    காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.

    தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.

    பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

    முனைவர் அ.முகமது அப்துல்காதர்,

    முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி,

    மதுராந்தகம்.
    எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கோமரோஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ComorosElection #ComorosPresident
    மொரோனி:

    இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையில் வடக்கு மடகாஸ்கருக்கும், வடகிழக்கு  மொசாம்பிக்கிற்கும் இடையில் உள்ள தீவு நாடு கோமரோஸ். இந்த நாட்டின் ஜனாதிபதி அஜாலி அசோமணி, கடந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் திடீரென ஒரு மாற்றம் கொண்டு வந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அஜாலி அசோமணியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே, அதாவது 2019 மார்ச் மாதம் தேர்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    2019ல் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று 2029ம் ஆண்டு வரை பதவியில் நீடிக்கும் வகையில் அஜாரி, சட்டத்தை மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் பணிகள் நடைபெற்றன.

    ஜனாதிபதி பதவிக்கு அஜாலி மீண்டும் போட்டியிட்டார். இந்த தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலேவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் 6 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.



    வன்முறை போராட்டங்கள், வேட்பாளர்கள் மீது தாக்குதல், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் அஜாலி அசோமணி 60.77 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மகமூது அகமதா 14.62 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதர 11 வேட்பாளர்களும் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளே பெற்றனர்.

    இந்த தேர்தல் முடிவினை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. #ComorosElection #ComorosPresident

    தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.
    பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிய வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டன. இவை முக்கியமான தேர்வுகள் என்பதை காரணம் காட்டி, பெற்றோர் குழந்தைகளை அரட்டி, மிரட்டி வருவது வாடிக்கை. மாணவர்களோ மனதில் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவார்கள். நின்றால், நடந்தால், பேசினால் குற்றம் கண்டுபிடிப்பார்கள். படி... படி... என்ற போதனைகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். உங்கள் வீட்டிலும் இது சகஜமாக நடக்கிறதுதானே?

    தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவது முக்கியம்தான். அதற்காக நிமிடம்தோறும் பயமுறுத்துவதும், பயந்து கலங்குவதும் தேவைதானா? என்பது யோசிக்கப்பட வேண்டியது.

    பெற்றோரிடம் நேரடியாக மனம் விட்டுப் பேசாத மாணவர்கள்தான், தோல்வியைச் சந்திப்பதுடன், எதிர்மறை முடிவுகளையும் எடுக்கிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, பெற்றோரிடம் தேர்வு குறித்தும், தேர்வு பற்றிய பயம் குறித்தும் பேசுவதுதான். இந்த விஷயத்தில் பெற்றோர்தான் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றாலும், மாணவர்களும் தங்களது கருத்தை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    9-ம் வகுப்பு படிக்கும்போதே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வைச் சொல்லி பயமுறுத்துவதை பெற்றோர் கைவிட வேண்டுமென்றால், மாணவர்கள் தேர்வு பற்றிய பயத்தை மனதில் வைத்துக் கொண்டு, பெற்றோரை ஏமாற்றித் திரியக் கூடாது. சரி படிக்கிறேன் என்று நடித்து சமாளிக்கக்கூடாது. அப்படி நாடகமாடினால் தேர்வு முடிவு வரும் சமயத்தில் உண்மை வெளிப்படும். மனம் குழப்பம் அடைந்து தவறான முடிவு எடுக்கத் தூண்டிவிடும். இதற்கு ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் தங்கள் நிலையை தெளிவுபடுத்தி விடலாம்.

    வாழ்க்கை என்பது இந்தத் தேர்வுடன் முடிந்துவிடுவதில்லை. தேர்வில் மதிப்பெண்களை உயர்த்த பல வழிகள் உள்ளன. மறுதேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது என்பதை சராசரி மாணவர்கள், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிடுவோமோ என்று அஞ்சும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தையின் திறன் அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தக்கூடாது.

    மதிப்பெண் இலக்கை அடையாதவர்கள் எவ்வளவோ பேர், வாழ்க்கையில் இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறார்கள். மதிப்பெண்களில் வாழ்க்கை இல்லை என்பதை இது உணர்த்தும். எனவே பதற்றமின்றி தேர்வை எதிர்கொண்டாலே வெற்றி பெற்றுவிடலாம். உண்மையில் பயமற்ற மனதால் அதிக விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். பாடங்கள் நன்கு புரியும்.

    தேர்வு இடைவேளையையும், படிக்கும் நேரத்திலும் சிறிது இடைவேளை எடுத்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். மூளையை சுறுசுறுப்பாக்கும் ஜூஸ் வகைகள், உணவுகளை சாப்பிடுங்கள். நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளை இனிமேலாவது வழக்கமாக்குங்கள். அடுத்த தேர்வில் பயம் வராமல் தடுத்துவிடலாம்.

    எதிர்பார்த்த மதிப்பெண் வந்தாலும், வராவிட்டாலும், வாங்கிய மதிப்பெண்ணை வைத்து வாழ்வைத் தொடர முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை காயப்படுத்தி, கடுப்பேற்றுவதைவிட சிறந்த வழிகாட்டிகளாக இருந்து அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுங்கள்!
    குன்னம் அருகே சரியாக தேர்வு எழுதாததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி, விவசாயி. இவரது மகள் சினேகா (வயது 17). இவர் குன்னத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் பிளஸ்-2 தேர்வினை சரியாக எழுத வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோழிகள், வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். #SchoolEducationDepartment #ExamsChanged #ParliamentaryElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.



    பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும்  தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  #SchoolEducationDepartment #ExamsChanged

    பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
    பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் அது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தான். பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அமையும் என்பதில் ஐயமில்லை.

    இன்று தொடங்குகிறது


    அந்த வகையில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 45 ஆயிரத்து 576 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது. தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.

    நேரத்தை வீணாக்க கூடாது

    மொழிப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்திப் பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.

    சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க கூடாது.

    விடைத்தாள்

    தேர்வில் கேள்விகளுக்கான பதில்களை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். இதில் அவசரப்பட கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள்.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

    மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.

    குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும். 
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மற்ற நேரங்களிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்ல பண்பாடு. மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உணவு சாப்பிடாமல் இருந்தால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. அதிகமாக சாப்பிட்டாலும் படிப்புக்கு இடையூறு செய்யக்கூடியது உணவு. மாணவர்களின் உடலுக்கும், கல்விக்கும் பாதிப்பில்லாமல் உணவுப் பழக்க வழக்கம் அமைய வேண்டும் அதற்கான சில டிப்ஸ்...

    காலையில் எழுந்ததும் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல்துலக்கிய பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்தப் பழக்கமானது மலச்சிக்கலைப் போக்கும். பள்ளியிலும், மற்ற வேளைகளிலும் திடீரென கழிவறை செல்லும் உணர்வை தடுத்துவிடக்கூடியது இந்தப் பழக்கம். ஆரோக்கியமான இந்த பழக்கத்தை எத்தனை பேர் இப்போது பின்பற்றி வருகிறீர்கள்?

    காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதைப்போல ஒவ்வொரு மணி நேர இடை வேளைக்கும் ஒரு டம்ளர் (100 மி.லி.) தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்தை வழங்கும். தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை தடுக்கும். பெரும்பாலான நோய் தாக்குதலை தடுக்கும்.

    ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர இடைவேளை வேண்டும். 3 மணி நேர இடைவெளிக்குள்ளாக நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடக்கூடாது. தேவையற்ற நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பர்கர், பீஸா என்று சாப்பிடும் பழக்கமுள்ள மாணவர்கள் உடல் நலத்தை கெடுப்பதுடன், படிக்கும் மனநிலையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இடைவேளை உணவுகள்தான் உடல் பருமனையும், சோம்பலையும் கொண்டு வருகிறது. அதுவே நாளடைவில் தேவையற்ற நோய்கள் பரவவும் காரணமாகிறது.

    சாப்பிடும்போது நன்றாக சாப்பிட்டுவிட்டு, அடுத்த இடைவேளையில் உணவு உண்ணுங்கள். எப்போது சாப்பிட்டாலும் முழு வயிற்றை நிரப்ப வேண்டாம். எவ்வளவு ருசியாக இருந்தாலும், முக்கால் வயிறு சாப்பிட மனதை பழக்கப்படுத்துங்கள்.

    இடையில் பசித்தால் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் குடிக்கலாம். இளநீர், காய்கறி- பழ சாலட் உங்கள் ஸ்நாக்ஸ் உணவுகளாக இருக்கட்டும்.

    செயற்கை குளிர்பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது உடல்பருமனை தடுத்து, படிப்பில் மனம் லயிக்க துணை செய்யும்.

    ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது ருசிக்காக சாப்பிடுங்கள். அதுவும் மாலை வேளையில் மட்டும் சிறி தளவு சாப்பிடுங்கள். எண்ணெயில் செய்த இனிப்பு-காரம் மற்றும் மாமிசம் அளவுடன் சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினைகள் ஏற் படுவதை உணர்ந்தால் இவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

    காலையிலும், இரவிலும் பல்துலக்குவதையும், மலம் கழிப்பதையும் பழக்கமாக்குங்கள்.

    ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக மாற்றுங்கள். இரவு 11 மணிக்குள்ளாக தூங்கிவிடுங்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழும்ப முடியுமோ, அதை பழக்கமாக்குங்கள். சிறுவர்கள் 8 மணி நேரமும், பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 மணி நேரத்திற்கு குறையாமலும் உறங்குவதை பழக்கமாக்க வேண்டும்.

    புகை, மது போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தடை செய்யுங்கள். இவை ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும். படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி. ஆம் ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் பெற முடியும். யாகாவராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கு, பேச்சுக்கு மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். மாணவர்கள் உடல்நலனைக் காத்து, கல்வியிலும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.
    ×