search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99169"

    இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாக பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
    அயோத்தி :

    தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

    மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் மக்களின் பணத்தை கப்ரிஸ்தானுக்காக (கல்லறைகள்)செலவிட்டன. ஆனால், பா.ஜனதா அரசு மக்களின் பணத்தை கோவில்களின் மறுகட்டமைப்புக்காக செலவிடுகிறது. மதத்தின் மீதும் கலாசாரத்தின் மீது பற்றுள்ளவர்கள், இதை மக்கள் வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவார்கள்.

    இங்கு மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகின்றன. ஏறக்குறைய 300 திட்டங்களின் பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும்.

    இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாக பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    30 ஆண்டுகளுக்கு முன் உங்களை எதிர்த்தவர்கள், இன்று உங்கள் முன், உங்கள் வலிமையின் முன் பணிந்துவிட்டார்கள். ராமர் ஒவ்வொருவரையும் ஒன்று சேர்ப்பார், இதுதான் ராமரின் சக்தி. 2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டுமானம் முடிக்கப்படும், இதைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.

    இந்த உலகின் முன் அயோத்தி நகரம் கலாசார நகரமாக மாறிவிட்டது, அடுத்துவரும் நாட்களில் இன்னும் வளர்ச்சித்திட்டங்கள் வரும். உலகளவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை இந்த நகரம் ஈர்க்கும். எனவே இது சுற்றுலா தல நகரமாக மாறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 27-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ள பிரியங்கா காந்தி, பாதுகாப்பு கருதி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PriyankaGandhi
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அந்த தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி தேடி தர அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    கடந்த வாரம் 3 நாட்கள் அவர் கங்கையில் படகு பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை நடத்தினார். கங்கை கரையோர மக்களை அவர் வெகுவாக கவர்ந்தார்.

    அடுத்த கட்டமாக அவர் பஸ் பயண பிரசாரத்தை நடத்த உள்ளார். பிறகு ரெயில் பயண பிரசாரத்துக்கும் பிரியங்கா திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரியங்காவின் அடுத்த கட்ட பிரசார பயணம் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி பகுதியில் நாளை மறுநாள் (27-ந்தேதி) அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அயோத்தில் ராமர் கோவில் விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையாக உள்ளது. இந்த நிலையில் பிரியங்காவின் பிரசாரம் அந்த பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



    சமீப காலமாக ராகுலும், பிரியங்காவும் எந்த ஊருக்கு பிரசாரத்துக்கு சென்றாலும் அங்குள்ள இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பிரியங்கா சமீபத்தில் குஜராத்துக்கு சென்றிருந்தபோதும் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டார்.

    அதே பாணியில் அவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரியங்கா செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PriyankaGandhi


    அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சமரச குழு, பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதற்காக வழக்கின் மனுதாரர்கள் நேற்று இந்த குழு முன் ஆஜரானார்கள். #Ayodhya
    பைசாபாத்:

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி நியமித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 3 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    இந்த குழு ஒரு வாரத்துக்குள் சமரச பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 8 வாரங் களுக்குள் அதை முடித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையை உத்தரபிரதேசத்தின் பைசாபாத்தில் நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு தங்கள் உத்தரவில் கூறியது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டது. இதற்காக பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அறையை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. பின்னர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்காக நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவினர் நேற்று முன்தினம் பைசாபாத் சென்றனர். பின்னர் நேற்று அவர்கள் அவாத் பல்கலைக்கழகத்தில் சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதற்காக வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வக்கீல்களுடன் சமரச குழு முன் ஆஜராகினர். இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது. இதற்காக சமரசக்குழுவினர் 3 நாட்கள் பைசாபாத்திலேயே தங்கி இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சமரச பேச்சுவார்த்தையை முன்னிட்டு அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறு பைசாபாத் மாவட்ட நிர்வாகத்துக்கு சமரசக்குழுவினர் அறிவுறுத்தி இருந்தனர். அத்துடன் அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் மற்றும் அவர்களது வக்கீல்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி இருந்தனர்.

    அதன்படி அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் சமரசக்குழு முன் ஆஜராவோரை தவிர வேறு யாரையும் போலீசார் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
    அயோத்தி கோவில் பிரச்சினை தீர்க்கப்படும் வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது என்று சிவசேனா கூறியுள்ளது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கூட்டணி அமையுமா என்பதில் தொடர்ந்து கேள்விக் குறி நீடிக்கிறது.

    சிவசேனாவுடன் நிச்சயம் கூட்டணி உண்டு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் கூறியிருந்தார்.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர இதுவரை சிவசேனா சாதகமான பதிலை கூறவில்லை. அதற்கு பதில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் புதிய நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே நேற்று பொதுக் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி பற்றி பேச சிவசேனாவுக்கு விருப்பம் இல்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை கிடப்பில் போட்டு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த கும்பகர்ணா தூக்கத்தை கலைக்கவே நான் சமீபத்தில் அயோத்திக்கு சென்று வந்தேன்.

    அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்துவதை சிவசேனா ஒரு போதும் ஏற்காது. அத்தகையவர்களை நாங்கள் ஒருபோதும் மண்ணிக்க மாட்டோம்.

    அயோத்தி கோவில் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தெளிவான நிலையை ஏற்படுத்த வேண்டும். அயோத்தி கோவில் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை கிடையாது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    தெலுங்கானாவிலும், மிசோரமிலும் மாநில கட்சிகளே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மராட்டிய மாநில மக்களும் அப்படி வாக்களித்து சிவசேனா கட்சிக்கு வலிமை சேர்க்க வேண்டும். நிதிஷ் குமாரும், ராம்விலாஸ் பஸ்வானும் அயோத்தி பிரச்சினையில் தங்களது தெளிவான முடிவை வெளியிட வேண்டும்.

    பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முனைகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. வெங்காயம் விலை வீழ்ச்சி கண்ணீரை வரவழைக்கிறது. பயிர் விவசாயிகள் கடனில் தத்தளிக்கிறார்கள். எனவே விவசாயிகளை காப்பதையே நாங்கள் லட்சியமாக கொண்டுள்ளோம்.

    ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பது எங்களது லட்சியம் அல்ல. அனைத்து பெரிய முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வரை பாரதிய ஜனதாவுடன் சமூக உறவுக்கு வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு உத்தவ்தாக்கரே கூறினார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. #RajnathSingh #RamTemple #BJP
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. பொறுமை காக்குமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அடுத்த ஆண்டுதான் இது விசாரணைக்கு வருகிறது.

    ஆனால் அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் சட்டம் இயற்றி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்துத்துவா அமைப்புகளின் உணர்வுகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இருந்தாலும்கூட, சட்டம் இயற்றும் முடிவுக்கு அந்தக் கட்சி வரவில்லை.

    இருப்பினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சிக்குள் கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவில்லை.

    இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவீந்திர குஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் ஆகியோர் அயோத்தி பிரச்சினையை எழுப்பி பேசினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அவர்களின் பேச்சுக்கு பிற எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    ஆனால் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங், “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமும் ஆகும். அதே நேரத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு சமமாக எதிர்க்கட்சியில் ஒரு தலைவர் கிடையாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எம்.பி.க்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். #RajnathSingh #RamTemple #BJP


    அயோத்தியில் ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
    லக்னோ:

    அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கவுரவத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விசுவ இந்தி பரிஷத் பேரணி நடத்த இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #VHP
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. அதில் நாடுமுழுவதும் இருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை வந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் பசு பாதுகாவலர்கள் மாநாடு நடந்தது.

    அதில் நடந்த வன்முறை மற்றும் கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோன்று சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்க டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மாநாடு மற்றும் பேரணி நடைபெறும் ராம்லீலா மைதானம் 50 ஆயிரம் பேர் மட்டுமே கூடும் கொள்ளளவு கொண்டது. ஆனால் 5 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என் எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி போலீசாருடன் 25 முதல் 30 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ராம்லீலா மைதானம் உள்ள மத்திய டெல்லி 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 210-க்கும் மேற்பட்ட கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேரணி கடந்து வரும் டெல்லி கேட் மற்றும் ராஜ பாதை பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
    பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  #Ayodhya #Section144 #BabriMasjid 
    நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #BabriMasjid #BabriMasjidDemolitionDay
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சிவசேனா மற்றும் விசுவ இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்காக சமீபத்தில் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

    இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய துணை நிலை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    அயோத்தியில் மட்டுமின்றி பைசலாபாத் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    அயோத்தியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  #BabriMasjid #BabriMasjidDemolitionDay
    மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவில்லை என்றால் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் கூறியுள்ளார். #BabaRamdev #AyodhyaTemple #BJP
    ஆமதாபாத்:

    பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் குஜராத் மாநிலத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடியை ஆமதாபாத்தில் நேற்று திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டிமுடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி நிறைவேற்றி அரசு கோவிலை கட்டுவது.

    ஒருவேளை மக்களே கோவிலை கட்டினால் அது கோர்ட்டு மற்றும் சட்டத்தை அவமதிப்பதாகும். ஆனால் கோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே இந்த விவகாரத்துக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை இழக்கும்.  #BabaRamdev #AyodhyaTemple #BJP 
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடிக்கு திறமை இல்லை என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. #Ayodhyarally #Ramtemple #PMModi
    மும்பை :

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், சிவசேனா கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜனதாவும் ராமர்கோவில் கட்டுவதில் ஆர்வமாக உள்ளது. அண்மையில் இதே கோரிக்கையை முன்வைத்து தனிப்பட்ட முறையில் சிவசேனா அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

    இந்தநிலையில் கடந்த 4½ ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவசேனா தனது கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து உள்ளது.

    அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் இதுபற்றி கூறப்பட்டு இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ஒருவர்(மோடி) தனக்கு 56 அங்குல மார்பளவு இருப்பதாக கூறினார். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். இதனால் காங்கிரசை தேர்தலில் மக்களால் தூக்கி எறிந்துவிட்டு 56 அங்குல மார்பளவு கொண்ட மனிதரிடம் நிர்வாகத்தின் சாவியை ஒப்படைத்தனர்.

    ஆனால் அவரிடம் அரசியல் திறமை இல்லை. இதனால்தான் ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.



    விரைவில் நடக்கப்போகும் தேர்தலில் மக்கள் உங்களின் மார்பளவை மீண்டும் அளக்கப் போகிறார்கள். அப்போதும் ராமர் வனவாசத்தில் இருக்க நேர்ந்தால் உங்கள் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துவிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ராமர் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு காங்கிரஸ் மறைமுக நெருக்கடி அளிப்பதாக மோடி குற்றம்சாட்டி இருப்பதற்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    ‘‘இந்திராகாந்தி குடும்பம் மற்றும் காங்கிரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்று புகார்களை கூறுவதற்காக ஆட்சியை மக்கள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரசும், சமாஜ்வாடியும் முட்டுக்கட்டை போட்டதால்தான் அவற்றை அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றினர். எனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.

    இதில் ராகுல்காந்திக்கு முக்கியத்துவம் எதற்கு?... காங்கிரசுக்கு என்ன பலம் உள்ளது?... பிறகு ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். காங்கிரசை எதிர்ப்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தில் நாடகமாடினால் நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். ராமர்கோவில் பா.ஜனதா அளித்த வாக்குறுதி’’ எனவும் சாம்னாவில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. #Ayodhyarally #Ramtemple #PMModi 
    அயோத்தி நகரில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடிய தர்மசபா ஆலோசனை கூட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. #Ayodhyadispute #VHPDharamSabhasponsored #AyodhyaDharamSabha #Ramtemple
    லக்னோ:

    ராமர் பிறந்த இடமான அயோத்தி நகரம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. இங்கு ராமருக்கு கோவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி இந்து அமைப்புகள் கரசேவை நிகழ்ச்சியை நடத்தின.  

    இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி பாபர் மசூதியை இடித்ததுடன் அந்த இடத்தில் சிறிய வடிவிலான ராமர் கோவிலையும் கட்டினார்கள். அங்கு பெரிய அளவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமாக உடனே கோர்ட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என கூறி ஜனவரி மாதத்துக்கு வழக்கை  சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது.

    இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் அயோத்தியில் இன்று தர்மசபா என்ற நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த தொண்டர்களும், ராம பக்தர்களும் அயோத்தியில் குவிந்தனர்.

    புகழ்பெற்ற சாமியார்களான ஜெகத் குரு ராமானந்தசாரியா, சுவாமி ஹன்ஸ்தேவ சாரியா, ராம்பத்ரசாரியா, ராமேஸ் வர்தாஸ், வைஷ்ணவ், மகாந்த் நிரித்திய கோபால் தாஸ் மற்றும் ஏராளமான சாமியார்கள் பங்கேற்றனர். இவர்களின் பேச்சை கேட்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களும் திரண்டனர்.

    இது தவிர, விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ராமஜென்ம பூமிக்காக கட்டுமான பொருட்களை தயார் செய்யும் இடமான நயாஸ் ஒர்க்‌ஷாப் அருகில் உள்ள படேபக்த்மால் கிபாகியா என்ற  இடத்தில் இந்த தர்மசபா நிகழ்ச்சி நடந்தது.



    பகல் 12.30 மணியளவில் தர்மசபா நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தலைவர்களும், சீயர்களும் உரையாற்றினர்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தலைவர் கிருஷ்ண கோபால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் இந்த தர்மசபை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) கட்டுப்படுவோம். இங்கு கோவில்  கட்டும்வரை நாங்கள் ஓய்ந்திருக்க மாட்டோம் என்றார்.

    அடுத்து பேசிய சுவாமி ராம்பத்ராச்சாரியா, ராமர் கோவிலை இங்கு கட்டுவது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நான் மூத்த மத்திய மந்திரி ஒருவருடன் பேசி இருக்கிறேன். டிசம்பர் 11-ம் தேதி பிரதமர் மோடியுடன் இவ்விவகாரம் தொடர்பாக பேசுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார். கோவில் கட்டுவதற்காக ஒரு சட்டம் வரும் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என்னிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் சுவாமி ராம்பத்ராச்சாரியா கூறினார்.

    நிறைவுறைவாற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய தலைவர் சம்பத் ராய், அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மொத்த நிலமும் ராமர் கோவில் கட்டுவதற்காக எங்களுக்கு தேவை. இதற்கு ஒத்துழைக்கும் வகையில் முஸ்லிம்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கை அவர்கள் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    தற்போது இங்கு கூடியுள்ள மாபெரும் பக்தர்கள் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 45 மாவட்டங்களில் இருந்துமட்டும் வந்துள்ள கூட்டம். அடுத்த தர்மசபா கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர், இன்றைய ஆலோசனை கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. ராமர் கோவிலை கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, அவசர சட்டம் கொண்டுவந்து கோவிலை கட்டிமுடிக்க வேண்டும் என்பதுபோன்ற எழுத்து வடிவிலான தீர்மானம் ஏதும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. #Ayodhyadispute #VHPDharamSabhasponsored #AyodhyaDharamSabha #Ramtemple
    ×