என் மலர்
நீங்கள் தேடியது "Sooludaiyar Shasta"
- ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் கோவில் அமைந்துள்ளது.
- ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தான், சேதுக்கு வாய்த்தான் என்னும் மிகப் பழமையான கிராமம். தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான தோற்றத்தில் காணப்படும் அற்புதமான ஊர்.
ராம காவியத்தில் ராமபிரானும் வானர வீரர்களும், சீதா தேவியை தேடி இலங்கைக்கு செல்கிறார்கள். அப்போது அவர்கள் குரங்கணி, குரங்கன் தட்டு மற்றும் அதன் சுற்றுப்பகுதியான சேதுக்கு வாய்த்தான் உள்பட பல தாமிரபரணி கரை கிராமத்தில்தான் அணிவகுத்து நின்றுள்ளனர்.
அதன் பிறகு 'சற்று தெற்கே வந்து விட்டோம்' என ராமேஸ்வரம் நோக்கிச் சென்றதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து சேது சமுத்திரத்தில் ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ராமபிரானும், வானர வீரர்களும் தங்கி இருந்த இந்த கிராமம் 'சேது பூமி' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் சேதுக்குவாய்த்தான் என்று மருவியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சேதுக்குவாய்த்தான் ஊரில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார், சூலுகாத்த சூலுடைய அய்யனார் சாஸ்தா.
கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், சேதுபதி நாதன் என்னும் குறுநில மன்னன். இவர் சேதுக்கு வாய்த்தான் பகுதிகளை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நீதி தவறாமல் நடந்து வந்த இவரது ஆட்சி காலத்தில், மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.
மாதம் மும்மாரி மழையும் பெய்தது. வருடம் முழுவதும் மூன்று வேளை விவசாயம் செழிப்பாக விளைந்தது. மக்களும் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு மிகவும் மகிழ்ச்சியாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சேதுபதிநாத மன்னனின் ஆட்சிக்குட்பட்ட சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அழகான சோலை ஒன்றில் தர்ம சாஸ்தாவான அய்யனார் அருள்பாலித்து வந்தார்.

அப்போது அவர் ஓலைக்குடிசலில் தான் அமர்ந்திருந்தார். இவ்வூரில் நல்லதாய் என்ற பெண் வசித்து வந்தாள். ஏழைப்பெண்ணான இவளது கணவன் சின்னத்துரை.
கணவன்- மனைவி இருவரும் தினமும் சேதுக்குவாய்த்தானில் இருந்து குரங்கணி வரை தாமிரபரணி கரையோரமாகச் சென்று விறகு பொறுக்கி வருவார்கள். பணி முடிந்து வீடு திரும்பும்போது, அய்யனாரை வணங்கத் தவறுவது இல்லை. விறகை விற்று அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டி வந்தனர்.
இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கள் மனக்குறையைப் போக்க தினமும் குழந்தை வரம் வேண்டும் என ஓலைக்குடிசையில் இருந்த அய்யனாரை வணங்கி நின்றார்கள். அய்யன் இவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தார்.
நல்லதாய் கர்ப்பமானாள். நல்லதாய்க்கு கணவனைத் தவிர சொந்தம் என்று யாரும் இல்லாததால், முன்பு போலவே, கணவன் தன்னுடனேயே மனைவியையும் விறகு பொறுக்கும் பணிக்கு அழைத்துச் சென்று விடுவான். 10 மாதம் கடந்த நிலையில், வயிறு பெருத்து நடக்க முடியாமல் தவித்தாள், நல்லத்தாய். இன்றோ, நாளையோ அவளுக்கு பிரசவம் ஏற்படும் என்ற நிலை.
ஆதரவாக யாரும் இல்லாததால் கணவனுடன் பணிக்குச் சென்றாள். பணி முடிந்து தலையில் பாரம் சுமந்தபடி வந்தபோது, பாதி வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் துடிதுடித்துப் போனாள். சின்னத்துரை மனைவியின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அய்யனார்கோவில் அருகில் மனைவியை அமர வைத்தான். "அய்யனே என் மனைவியை பார்த்துக்கொள்" என அய்யனாரிடம் ஒப்படைத்தான்.
பின்னர் மனைவியிடம், "ஊருக்குள் போய் உதவிக்கு மருத்துவச்சியை கூட்டி வருகிறேன்" என கூறிவிட்டு அவசர அவசரமாக ஊருக்குள் ஓடினான். அங்கே இருந்த மருத்துவச்சியிடம் தனது மனைவிக்கு பேறு காலம் பார்க்க வரும்படி கோரினான்.
அந்த நேரம் பார்த்து பெருங்காற்றும், தொடர் மழையும் பெய்யத் தொடங்கியது. மருத்துவச்சி வயதானவர் என்பதால், அவரால் அந்த புயல் மழையில் வெளியே வர முடியவில்லை. இதனால் மனம் வருந்திய சின்னத்துரை, "அய்யோ மனைவியை தனியாக விட்டு விட்டு வந்து விட்டோமே" என மீண்டும் கோவிலை நோக்கி ஓடினான்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த வெள்ளம் இவனையும் சூழ்ந்தது. எனவே மனைவியை காணச் செல்ல முடியாமல் பாதி வழியில் பறிதவித்து நின்றிருந்தான். அப்படி நின்ற இடத்தில் இருந்து அய்யனை நோக்கி கை கூப்பி வணங்கினான். "அய்யனே என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்று" என்று மன்றாடினான்.
இவனின் குரல் அய்யனாரின் காதுகளில் விழுந்தது. தனது கோட்டைக்குள் மனைவியை கொண்டு வந்து விட்டுச் சென்ற கணவனின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய அய்யனார், மருத்துவச்சி வடிவத்தில் அங்கு தோன்றி, நல்லதாய்க்கு பிரசவம் பார்த்து, அவள் நல்ல சுகப் பிரசவத்துடன் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.
வீசி அடிக்கும் காற்றையும், பேய் மழையையும் தன் கண் அசைவில் நிறுத்தினார் அய்யனார். அதன் பின் அய்யனாக சென்று கோவிலுக்குள் ஐக்கிய மானார்.
மழை நின்றவுடன் மருத்துவச்சியை அழைத்துக்கொண்டு ஓடியே வந்தான் சின்னத்துரை. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த நல்லதாய் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். "இந்த மருத்துவச்சித் தான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள்" என்று மருத்துவச்சிக்கு நன்றி கூறினாள்.
மருத்துவச்சியும், அவளது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்னம்மா சொல்கிறாய்.. நான் இப்போது தானே வருகிறேன்" என்றாள் மருத்துவச்சி. அப்போதுதான் அவர்கள் மூவருக்கும் ஒரு உண்மை புரிந்தது, அந்த அய்யனாரே, மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்துச் சென்றிருக்கிறார். இதனால் அவர்கள் மனம் நிறைந்து அய்யனுக்கு நன்றி செலுத்தினர்.
நிறைமாத கர்ப்பிணியான நல்லதாய், பிள்ளைபெற மருத்துவச்சியாக உதவி செய்ததால், இத்தல அய்யனாரை 'சூலுடையார் அய்யனார்' என்று அழைத்தனர். இவர் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, அருளை அள்ளித்தந்து மகிழ்கிறார்.
இவரின் அருள் பரவிய காரணத்தால், இங்கு வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஓலை குடிசையில் இருந்த அவர், பின்னர் பெரிய கல் கட்டிடத்திற்கு மாறினார்.
இந்த ஆலயத்தில் அரசு வேலை கிடைக்கவும், இழந்த பொருளை மீட்கவும், கடன்தொல்லை நீங்கவும் நேரில் வந்து தரிசனம் செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்களும், சுகப் பிரசவம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.
இந்த திருக்கோவில் வெளிப் பிரகாரத்தில் சங்கிலி பூதத்தாரும், பேச்சியம்மன், சுடலைமாடசாமி என பரிவார தெய்வங்களும், உள் பிரகாரத்தில் விநாயகரும், வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியரும் காட்சியளிக்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் வன்னிய ராஜா கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டவர்கள் தேடிவந்து வணங்கி நிற்கிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
இந்த ஆலயம் ஏரலுக்கு மறுகரையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து ஏரலுக்கு பேருந்து வசதி உண்டு.