என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sri chakra ratham"
- ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
- சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழாம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் ஒன்பதாம் நாள் இரவில் `கிண்ணித் தேர்' என்னும் அற்புத ஸ்ரீசக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வந்தது' என்று ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தமது `சென்னை நகர வரலாறு' என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அற்புதக் கிண்ணித் தேர் காலத்தால் பழுதுபட்டு விட்டதால், சுமார் 22 அடி உயரத்தில் புதிதாக ஒரு நூதனக் கிண்ணித் தேர் செய்து முடிக்கப்பட்டு 24.5.1987 அன்று கரிக்கோலம் வெள்ளோட்ட விழாவும், பிரம்மோற்சவம் 7-ம் நாள் 7.6.1987 அன்று காலை பூந்தேராகவும், 9-ம் நாள் 9.6.1987 அன்று இரவு கிண்ணித் தேராகவும் ஸ்ரீஅம்பாள் கொலுவீற்று திருவீதி உலா வருவதைப் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதைப் பக்தர்கள் வந்து நேரில் பார்த்தால்தான், அதன் மகிமையை உணர முடியும்.
இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதி சண்முகாச்சாரியாரால் மதிப்பீடு வரைப்படங்கள் அமைக்கப்பட்டு, பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி, பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீரிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிண்ணித் தேர் விழாவினை முதல் கவர்னர் பிட் நிறுத்தினார். சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21.9.1790-ல் பக்தர்களோடு தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பரவசப்பட்டார்.
ஸ்ரீசக்ரத் திருத்தேர்
தேர் திருவிழாவில் ஓர் சமுதாய தத்துவம் அடங்கியுள்ளது. தேரை இழுக்க ஒருவரால் முடியாது. எனவே, பலருடைய ஒத்துழைப்பும் முழுமையாக தேவை. சும்மா கையை வைத்து இருந்தால் தேர் நகராது.
பலரும் முழுமையாக செயல்பட்டாலும் பலரும் பலதிசையில் இழுத்தாலும் தேர் நகராது ஒரு முகப்பட்டு ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆக அப்படி இழுத்தாலும் ஒரு நொடிப் போழுதில் நிலையை அடைவதில்லை. காலம் தேவைப்படுகின்றது.
அதுபோலவே, சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா கொண்டாடினர்.
சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீசக்ரத்தேர் மிகவும் அழகும் சக்தியும் வாய்ந்த திருத்தேராக காட்சி அளிக்கின்றது.
பிரம்மோற்சவத்தில் இரவில் ஒலிக்கும் வெண்கல ஓசை `ஓம் ஓம்' என்ற பிரணவ ஓசையை நம் செவியில் இனிய இசையாக ஒலிக்கும் என்பதை நேரில் கண்டவர் கூறுவர்.
தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், யட்சர்களும் கின்னரர்களும், கந்தருவர்களும் வசிப்பார்கள். உருத்திர கணிகைகளும், ரிஷிகளும் வசிப்பார்கள்.
இவர்களின் சிற்பகங்கள் தேரின் அடிப்பாகத்தினைச் சுற்றிலும் இருக்கும். மேலும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் இவர்கள் அதிதேவதைகளாக இருப்பர்.
தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம்.
`விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்'
உச்சியிலிருக்கும் கலசம் சோடசாந்தம். அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம். அதற்கு அடுத்த கீழ் அடுக்கு மத்தகஸ்தானம். அடுத்த அடுக்கு புருவ மத்தியஸ்தானம். நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் முன் மூன்று துளைகள் மூன்று கண்கள் பின்புறம் உள்ளது. சிகையும் இட, வலக்காதுகளும் ஆகும்.
இறைவன் எழுந்தருளும் கேடய பீடம் முகம். குதிரைகள், சூரிய, சந்திர கலைகள் சாரதி அக்னி கனல் இவை நாசி (மூக்கு) ஆகும். அடுத்த கீழ் அடுக்கு கண்ட ஸ்தானம். அதை அடுத்த கீழ் அடுக்கு இருதய ஸ்தானம். அதற்கடுத்த நாபிஸ்தானம். அதை அடுத்து குண்டலி ஸ்தானம்.
சக்கரங்கள் தசவாயுக்கள்.
இறைவி இதற்கு கர்த்தா `தான் ஒருத்தியே' என்று உணர்த்தி இவ்வாறு அமைந்த பிண்ட தத்வ சரீரமாகிய ரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனதை உந்தி குண்டலினியில் இருந்து நாபிக்கும், நாபியில் இருந்து கண்டத்திற்கும் அதில் இருந்து வாயிக்கும் முறையே ரத குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்கள் வழியாகவும் நடுவழியாகவும் மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவத்திற்கும் ஏற்றி வயப்பட்டு சும்மாயிருந்தபடி இருக்கும் நித்ய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது.
மேலும் தேரானது திரிபுராதிகளை சிவன் சிரித்து எரித்து ஆன்மகோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கு அறிகுறியாக உள்ளது. இவ்வளவு தத்துவமுள்ள தேரில் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் வருவதை தரிசிப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் கோடி புண்ணியங்களும் உண்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்