search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stolen house"

    கட்டிய வீட்டை காணோம் என போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்த ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMAY #StolenHouse #WomanComplain #Police
    பிலாஸ்பூர்:

    தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். கிணறு வெட்டுவதற்காக வங்கிக்கடன் வாங்கிய வடிவேலு, கிணறு வெட்டாமல் காலம் கடத்துவார். ஆனால் கிணறு வெட்டியதாக ரசீதை பெற்றுக்கொண்டு தனது கிணற்றை காணோம் என அவரே போலீசில் புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.

    அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை காட்சியை போல, வீட்டை காணோம் என புகார் கொடுக்கப்பட்ட ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் அட்பார் கிராமத்தை சேர்ந்த பல்ஜரியா பாய் பாரியா என்ற பெண்ணுக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு ஒதுக்கப்பட்டது.

    நீண்ட நாட்களாகியும் அவருக்கு வீட்டையோ அல்லது பணத்தையோ பஞ்சாயத்து அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று விவரம் கேட்டார். அப்போது அவரது பெயரில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், வீடு ஒன்றின் படத்தையும் பல்ஜரியாவிடம் காட்டினர். மேலும் இதற்காக பணம் வழங்கப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பல்ஜரியா, தனது வீட்டை காணவில்லை என பெண்ட்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்து நிர்வாகிகளின் ஆவணத்தில் மட்டுமே வீடு இருப்பதாகவும், உண்மையில் அப்படி ஒரு வீடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

    வீட்டை காணோம் என அளிக்கப்பட்ட இந்த புகாரை படித்த போலீசாருக்கு முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. எனினும் பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்தது.

    பல்ஜரியாவுக்கு வரவேண்டிய ரூ.80 ஆயிரத்தை பஞ்சாயத்து ஊழியரான அவாஸ் மித்ரா திரவுபதி கைவர்ட் என்ற பெண் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு பயனாளியின் வீட்டின் படத்தை அளித்து 2 முறையாக இந்த பணத்தை வங்கியில் இருந்து அவர் எடுத்து இருக்கிறார்.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவாஸ் மித்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேல் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PMAY #StolenHouse #WomanComplain #Police
    ×