search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub-registrar Office"

    • பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சப்ரிஜிஸ்டராக அருணா என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி மற்றும் போலீசார் நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    பின்னர் அலுவலகத்தின் கதவுகளை அடைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என கூறி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளிநபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது.

    அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் சோதனை செய்தனர். இரவில் 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது நள்ளிரவையும் தாண்டி இன்று காலையும் நீடித்தது. இன்று காலை 7.30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையானது நிறைவடைந்தது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை மேற்கொண்டதில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை கேட்டு, அலுவலகத்தில் இருந்த சப்ரிஜிஸ்டரிம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து இன்று காலை சோதனையை முடித்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்ரிஜிஸ்டர் அருணாவை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை அவர் ஆஜரானதும், மீண்டும் பணம் தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • சார்பதிவாளர்கள் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு பதிவுத்துறை விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.அதன் பிறகு மாவட்ட பதிவுத்துறையால் நாள் தோறும் தற்காலிக சார் பதிவாளர்களை பாவூர்சத்திரம் சார்பதி வாளர் அலுவலகத்திற்கு பணிக்கு அனுப்பி வருகிறது.


    ஆனால் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் சார்பதிவாளர்கள் அனைவருமே காலையில் மிகவும் காலதாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் முதியோர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் கர்ப்பிணிபெண்கள் , சிறு வணிகர்கள்,வியாபார பெருமக்கள்,அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர்கள் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.இதனால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

    மேலும் பழைய பிறப்பு, இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற மனு அளித்து இரண்டு மாதம் ஆனாலும் தற்காலிக சார்பதிவாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து அப்பகுதி பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்று மாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 சென்ட் கொண்ட நிலத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர்.
    • போலீசார் 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்

    நெல்லை:

    பாளை பரணர் தெருவை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் சாமுவேல். இவருக்கு சொந்தமான இடம் வி.எம். சத்திரம் இந்திரா நகரில் உள்ளது.

    மொத்தம் 5 சென்ட் கொண்ட இந்த நிலத்தை இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர்.

    இதனை அறிந்த சார் பதிவாளர் சண்முகசுந்தரம் பாளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற குமரி மாவட்டம் காவு விளையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் என 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    ×