search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subiksha Subramanian"

    • 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.

    இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.

    ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

    இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    ×