என் மலர்
நீங்கள் தேடியது "சிவபெருமான்"
- அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
- கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானை யுத்தத்திற்கு அழைத்தான்.
மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். இவை இரண்டும் கொண்டிருப்பதால் விஷ்ணுவை, 'சங்கு சக்கரதாரி' என்றும் அழைப்பார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ததன் பலனாக, இந்த சங்கு - சக்கரத்தைப் பெற்றார். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
சங்கு பெற்ற கதை
அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷமும், அதன் பின்னர் பல்வேறு தெய்வீக பொருட்களும், தெய்வ கன்னிகளும், தேவதைகளும், சில உப தெய்வங்களும் கூட வெளிவந்தனர். அப்படி கடலில் இருந்து தோன்றிய அற்புதப் பொருட்களில் ஒன்றுதான், சங்கு. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், 'பாஞ்ச ஜன்யம்' எனப்பெயர் பெற்றது.
ஈசனின் திருக்கரத்தில் இருந்த அந்த சங்கினைப் பெற, விஷ்ணு விருப்பம் கொண்டார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, காலம் தவறாமல் சிவ பூஜை செய்தார். பல காலம் செய்த பூஜையின் பலனாக, விஷ்ணுவுக்கு ஈசனால் சங்கு வழங்கப்பட்டது. இப்படி ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், 'திருசங்கை மங்கை' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுக்கு சங்கநாதர், சங்கேசுவரர் ஆகிய பெயர்கள் உள்ளன.
சக்கரம் பெற்ற கதை
சமுத்திர ராஜனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவன், சலந்தரன். இவன் தன் செய்கையின் காரணமாக அசுரனாக வளர்ந்தான். தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இந்திரனை ஓடஓட விரட்டிய சலந்தரன், படைப்புக் கடவுளான பிரம்மனையும் தாக்க முற்பட்டான். அவனிடம் இருந்து தப்பிய பிரம்மன், விஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து சலந்தரனுடன் விஷ்ணு போரிட்டார். இருவராலும் ஒருவரை ஒருவர் வெல்லவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை. இருவரும் களைப்படைந்தனர்.
பின்னொரு நாளில் கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானையும் யுத்தத்திற்கு அழைத்தான். அப்போது ஈசன், "உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் வென்றால் உன்னுடைய போரிடுகிறேன்" என்றார். சலந்தரனும் ஒப்புக்கொண்டான். உடனே சிவபெருமான், தரையில் தன் கால் கட்டை விரலால் ஒரு வட்டம் வரைந்தார். பின்னர் "இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம்" என்றார். சலந்தரனும் அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து, தன் தலை மீது வைத்தான். அப்போது அந்த வட்டம், சக்கரமாக மாறி சுழலத் தொடங்கியது. அது சலந்தரனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது.
சிவபெருமானால் உருவான அந்த சக்கரம் எதிர்காலத்தில் பயன்படும் என்று கருதிய விஷ்ணு, அதனைப் பெறுவதற்காக பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை பூஜித்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள், ஆயிரம் பூவில் ஒரு பூ குறைந்தது. உடனே விஷ்ணு சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கண்களில் ஒன்றை தோண்டி எடுத்து, அதனை மலராக கருதி, சிவனுக்கு பூஜை செய்தார். அந்த பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த சக்கரத்தை, விஷ்ணுவுக்கு வழங்கினார்.
- தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
- தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.
கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.
சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
- புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும்.
- மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.
லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.
இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.
அமைவிடம் :
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங்குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்றுவாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.
இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும்.
இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.
அன்னையை நோக்கி தவம் :
கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.
புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆனால், முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே என்றாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இந்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.
அதன்தொடர்ச்சியாக, சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தெய்வானையை திருமணம் செய்தது ஏன்? :
முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.
திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.
பாவங்கள் போக்கும் சரவணப் பொய்கை :
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.
இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.
கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.
கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.
கோவில் சிறப்புகள் :
* முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.
* இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விழாக்கள் விவரம் :
தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.
மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். மதுரை மாநகர் மக்களும் இந்த கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்யலாம்.
- எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு.
- முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக திருச்செந்தூரில் அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.
திருச்செந்தூருக்கு செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
தல வரலாறு :
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
முன்னதாக, மாமரமாக உருமாறிகாட்சியளித்த சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் ஒரு பொருள் உண்டு.
திருச்செந்தூர் புகழ்பாடும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம். "சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி.
2 மூலவர் :
எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு. முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக இங்கு அருள்பாலிக்கிறார்.
பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் பாலிக்கின்றனர். பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும், சண்முகர் வள்ளி-தெய்வானையுடனும் எழுந்தருளியுள்ளனர்.
சிறப்புமிக்க நாழிக் கிணறு :
சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப்பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள்.
ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.
வீரவாகு தேவருக்கே முதல் மரியாதை :
திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. வீரவாகு தேவரின் வலது பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.
கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப்பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு. இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.
இதுதான் விபூதிப் பிரசாதம் :
திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான். பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.
ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.
இதேபோல், 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.
வள்ளிக்குகை :
திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை. முருகப்பெருமானிடம் வள்ளி கோபித்துக்கொண்டு வந்து தங்கிய இடம் இது என்கிறார்கள்.
இங்கு குகையை குடைந்து வள்ளிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும். வள்ளி குகைக்கு முன்புள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.
நடுக்கடலில் நடந்த அதிசயம்! :
இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்தவரை சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்க-வில்லை.
திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக்கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியில் கடும் புயல் வீசியது. பேய் மழை-யும் கொட்டித் தீர்த்தது. இதைக்கண்டு பயந்துபோன அவர்கள், கடத்திக்கொண்டு சென்ற சாமி சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கடத்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறு புதிய சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலை கிடைக்கும்" என்று அடையாளம் காட்டினார்.
அதன்படி, வடமலையப்ப பிள்ளை உள்ளிட்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். ஓரிடத்தில் எலுமிச்சைபழம் மிதக்க, அங்கு மூழ்கித் தேடினர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட முருகனின் திருமேனி கிடைத்தது. அந்த சிலை மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதேநேரம், புதிதாக வடிக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை" என்று அழைக்கப்படுகிறது. குறுக்கு வழியில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க இங்கு சென்று வழிபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
தாமரையுடன் கந்தன் :
சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
தெரியுமா மாப்பிள்ளை சுவாமி? :
பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்) சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
முதன் முதலானது முருகனுக்கே... :
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறி ஆகியவற்றை அறுவடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்தி விடுகின்றனர்.
இப்படிச் செய்தால் மகசூல் அதிக அளவில் இருக்கும் என்றும், இயற்கையால் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் நம்புகிறார்கள். இதேபோல், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சுப்பிரமணிய காயத்ரி :
"ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"
- முருகப்பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
திருவிழாக்கள் விவரம் :
முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகம், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் கடற்கரையோரம் நடைபெறும். அப்போது, அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் வெள்ளத்தால் கடலே காணாமல்போன உணர்வு நமக்குள் ஏற்படுவது வியப்பு.
மற்றும், முருகனுக்கு உகந்த எல்லா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- பழனி மலை மீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.
- திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
பெயர் காரணம் :
பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்த பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை "ஞானப்பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.
இதேப்போன்று, இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்த முருகப்பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார்.
மகன் கோபித்துக்கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்த பழனி மலைக்கு வந்தனர். முருகப்பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக்கோவில் தல புராணம் கூறுகிறது.
மலை உருவான கதை :
பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப்பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.
சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலை குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.
அப்போது முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.
இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. "இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது...?" என்று யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனை கீழே இறங்குமாறு கூறினான்.
ஆனால் அந்த சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.
பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப்பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.
இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள்பாலிப்பதாக அப்போது அருளினார்.
அன்று முதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள்.
இதனால்தான், பழனி மலை மீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.
திருவாவினன்குடி சிறப்பு :
திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.
திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசிக மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.
குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக்காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்த கோவிலின் தலவிருட்சம்தான். ஆம்... இங்குள்ள தலமரம் நெல்லி மரமே.
நலம் தரும் கிரிவலம் :
பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.
வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன. இப்போது பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம் :
இங்கு முருகப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.
எப்போதும் அபிஷேகம் :
முருகப்பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.
தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.
ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித்திப்பெற்ற பஞ்சாமிர்தம் - பாதயாத்திரை :
பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தப்படியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.
திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தைப்பூசம் திருவிழாவின்போது பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக பாத யாத்திரையாக 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய விவாதம் :
பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவதுபடை வீடு என்று கூறுவோரும் உண்டு.
கொடைக்கானல் மலையில் இருந்து
பழனி மலையின் தோற்றம்...
- மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது.
- சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
தந்தைக்கே குருவான கதை :
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.
ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.
அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.
முருகப்பெருமான் காட்சி :
இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.
மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.
தலவிருட்சம் நெல்லி :
நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.
அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.
இயற்கையான மலை அல்ல :
சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.
மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச்செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.
மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண்கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.
திருவிழாக்கள் விவரம் :
இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
- திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார்.
- ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.
தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.
மலையின் சிறப்புகள் :
திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.
மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.
"குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
தலச்சிறப்புகள் :
இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.
இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க்குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.
திருமுருகாற்றுப்படை தந்த-நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.
வள்ளலாரும், முருகப்பெருமானும் :
வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி :
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.
திருவிழாக்கள் விவரம் :
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
- காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கோவில் அமைவிடம் :
மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.
ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.
அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.
வரலாற்று ஆதாரங்கள் :
திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.
கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
அவ்வையை சுட்ட பழம் :
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.
தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.
அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.
உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.
மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.
இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
அதிசய நூபுர கங்கை :
பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.
மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.
இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.
மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.
திருமண பரிகார தலம் :
முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.
விழாக்கள் விவரம் :
கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
- வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்.
- ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
(சிவராத்திரி, சிவபெருமானுக்கு சிறப்பான நாள். தென்னாடுடைய சிவனே போற்றி என்று நாயன்மார்களும் அவரைப் போற்றி ஏத்தியுள்ளனர்.)
சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அன்பாக-அருட் பெருஞ்சோதியாக, இன்பமாக-ஈசுவரனாக, மங்களமாக- மறைப்பொருளாக எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமைமிக்கது இந்தப் புண்ணிய பூமி. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன். உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. புராணங்கள் பகருகின்றன. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
'எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று' 'எங்கள் பெற்றோர்களைக் காப்பாற்று' 'எங்கள் பசுக்களைக் காப்பாற்று' என்று சிவபிரானை வேண்டும் ரிக்குகள் ரிக்வேத மந்திரங்களில் வருகின்றன. பசுபதி, பூதபதி பூதநாதர் என்பன வேதங்கள் ருத்திரனுக்குச் சூட்டும் சிறப்புப் பெயர்கள், சிவன் உக்கிரவடிவினன்; ஜடாமுடி கொண்டவன், என்று ரிக் வேதத்தின் பிற்கால சூக்தங்கள் வருணிக்கின்றன.
சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும். ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவவழி பாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம், சுக்லயஜுர் வேதத்தில் சிவனின் நூறு நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. யஜுர்வேதம், ' நம சிவாய என்று முழங்குகிறது ' நம : சிவாய சிவதராயச ' என்பது யஜுர்வேதவாக்கு, மகாபாரதம், சிவபிரானின் ஆயிரம் நாமங்களை-சிவசகஸ்ர நாமத்தைக் கூறுகிறது.
பதஞ்சலி முனிவரின் ' மகாபாஷ்யம் ' சிவனின் பெருமையையும் சிவநடியார் இயல்புகளையும் சுவைபடச் சித்திரிக்கிறது. வியாசர் அருளிய ' சிவபுராணம் ' ஆதிசங்கரரின் ' சிவாநந்தலகிரி, அப்பைய தீட்சதரின் சிவார்க்கமணி தீபிகா ' ஆகியவை ஓப்பற்ற சிவபக்தி நறுமலர்கள்,
"சைவ சமயமே மிகப்பழமையானது, இப்பொழது உயிருள்ளதுமான சமயம் ; சிந்துசமவெளி எங்கும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன " என்கிறார் தொல்பொருள் அறினர் ஜான் மார்ஷல்.
ஈராஸ் பாரதியார் சிந்து சமவெளியில் " எணான் ' என்று வருவது எண் குணத்தான் என்னும் சிவனே என்று கூறி, சிவ வழிபாட்டின் தொன்மைமைச் சிறப்புக்கு ஒரு கோடி காட்டுகிறார். கிறித்துவ சகாப்தத்துக்குப் பல நுறு ஆண்டுகள் முற்பட்ட மொகஞ்சதாரோவில் கண்டெடுத்த முத்திரைகள் பலவற்றில் சிவ வடிவங்கள் காண்கின்றன. அவற்றில், ஒரு முத்திரையில் இறைவன், தவம் புரியும் ஞானக்கோலத்தில் யோகமூர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டிருகிறார். கி.மு. இரண்டாயிரம் நுற்றாண்டளவில் சைவம் தனிச் சமயமாகச் செல்வாக்குப் பெற்றுவிட்டது. காந்தாரநாடு சைவத்தின் நிலைகளனாக விளங்கியது. சக வம்சத்து அரசன் மோஹன் வெளியிட்ட செப்பு நாணயங்களிள் நந்தி உருவங்கள் பொறிக்கப்பட்டன. சிவலிங்க வழிப்பாட்டை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர்கள் நாகவம்சத்து அரசர்களே. ஆர்யாவர்த்தத்துக்குத் தென்புறத்தே இருந்த பாரசிவர், சுட்டு நாகர், மகாநாகர் ஆகிய ரச மரபினரா வழிப்பட்டதால் சிவனை தட்சிணாபதி, தெற்கத்தியர் என்று ஆரியர்கள் வழங்கினர். ரிக்வேதமும் ' தட்சிணாபதம் ' என்றே தென்னாட்டை குறிப்பிடுகிறது. இதனாலேயே இறைவனைத் ' தென்னாடுடைய சிவனே போற்றி !' என்று போற்றினர் போலும் ! சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும் பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்ப் பேரொளிப் பிழம்பாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம். தென்னகத்தில் சிவசக்தி ஐக்கிய வடிவே லிங்கமாகக் கருதப்படுகிறது. ஆலயங்களில் சிவப்பிரான் லிங்க வடிவிலே எழந்தருளியுள்ளார். ஆந்திரத்து குடிமல்லம் ஆலயத்திலுள்ள சிவ லிங்கமே மிகப் பழமையான லிங்கத் திருமேனி என்று கருதுவர். அந்தக் கோயிலின் காலம் கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகும்.
இலிங்க தத்துவம், அவற்றின் அமைப்பு, லட்சணங்கள் ஆகியவை பற்றி மகுடாகமம் என்ற நூல் விரிவாகச் சொல்கிறது. தெய்விகம், அர்ச்சா, காணபம், மானுஷ்யம், என்று லிங்கங்கள் நான்கு வகையானவை. தெய்வீகம், அர்ச்சா என்ற இரண்டும் தேவர்களாலும் ரிஷிகளாலும் ஸ்தாபிக்கப்பட்டவை. காணவம் கணங்களாலும் மானுஷம் மனிதர்களாலும் வணங்கத்தக்கவை. காமிகாகவம், அறுவகை லிங்கங்களை குறிப்பிடுகிறது. அவை சுயம்பு, தெய்வீகம், காணபம், மானுஷ்யம், அர்ச்சா பாணலிங்கம் என்பது சாலக்கிராமம் போன்றக் ஸ்படிகக் கற்களால் ஆனது இவை இயற்கையாகக் கண்டகி, ரேவா, நர்மதா போன்ற நதி தீரங்களில் கிடைக்கின்றன.
மானுஷ்ய லிங்கம் என்னும் மனிதர்களால் கல்லில் செதுக்கப்படும். லிங்கம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. விஷ்ணுபாகம், ருத்திரபாகம் என்னும் மேற்பகுதியே பூஜாபாகம் எனப்படுகிறது. பூஜாபாகத்திலேயே அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை செய்தல் வேண்டும் என்பது பொது விதி. பிற்காலத்தில் தோண்றிய சில ஆகம நூல்கள் லிங்கத்தின் ருத்திரபாதம் என்றும் மேற்பகுதியில் பிரம்ம சூத்திரம் என்றும் சில நுட்பமான கோடுகள் அமைப்பது பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களால் அமைக்கப்படும் மானுஷ லிங்கத்துக்கு மட்டும் அமைத்தால் போதும் என்று நூல் கூறுகிறது.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் முதல் கொழும்பில் உள்ள திரிகோணமலை வரையில் தவப்பெருமையும் மிக்க புராதனமான சிவாலயங்கள் பல உள்ளன. தேசம் முழுவதும் சைவம் கொடிகட்டிப் பறந்ததை நாட்டில் பரவலாக அமைந்து போற்றப்படும் கீர்த்திமிக்க பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களிலிருந்து அறியலாம். கொடியவன் கஜினிமுகம்மது அழித்த சோமநாதபுரத்துச் சிவலிங்கம் உஜ்ஜயினி மாநகரத்துச் சிவலிங்கம், நர்மதை நதிக்கரயில் உள்ள ஓங்காதநாதர், இமயமலைச் சாரலில்லுள்ள கேதாரீசுவரர், கர்நூல் மாவட்டத்துச் ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர், இராமேசுவரத்தில்லுள்ள இராமநாத சுவாமி ஆகியவை. அவை சிவலிங்கங்கள், தமிழ் நூல்களில் அண்டலிங்கம், பிண்டலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம் எனக் குறிப்பிடுகின்றன.
பஞ்சபூதத் தலங்கள் என்னும் ஐந்து தலங்கள் சிவபெருமானுக்கு சிறப்பாக உரியவை. அவ்விடங்களில் இறைவன் நீர், பூமி, வாயு, அக்கினி, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களோடு தொடர்பு கொண்டு விளங்குகின்றான். திருவாரூரில் பிருதுவி (பூமி) வடிவமாகவும், ஜம்புகேஸ்வரத்தில் அப்பு (நீர்) வடிவாகவும், காளஹத்தியில் வாயு வடிவமாகவும், திருவண்ணாமலையில் அக்னி வடிவாகவும் சிதம்பரத்தில் ஆகாய வடிவிலும் சிவபெருமான் விளங்குவதாக ஐதீஹ்யம். இந்தப் பஞ்சபூதத் தலங்களுடன் சிவபெருமானின் தலங்களுடன் சிவபெருமானின் கருணைக்கும் கனிவுக்கும் சான்றாக விளங்கும் புனிதத் தலங்கள் எண்ணற்றவை உள்ளன.
தென்னாடுடைய சிவனே போற்றி என்று குறிப்பிடுமளவிற்க்கு அப்பெருமானை தென்னகத்தின் நாயகனாகிய பெருமை நாயன்மார்கள் என்ற சைவ அடியார்களுக்கே உரியது. அவர்கள் சொல்லோவியம் தீட்டித் தேவாரமும் திருவாசகமும் புனைந்தார்களென்றால், நாடாண்ட மன்னர்கள் கல்லோவியம் தீட்டி வானளாவும் ஆலயங்களை எழுப்பி மண்ணிலே விண்ணைக்கண்டனர்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ வேந்தன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்து பிறகு திருநாவுக்கரசர் முயற்சியால் சைவரானதை வரலாறு கூறுகிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த தஞ்சை கண்டராதித்தினின் மனைவி செம்பியன் மாதேவி தம் கணவனையே சிவலிங்கமாகப் பூஜித்தாலாம். சிவ வழிபாடு பிற நாடுகளிலும் செல்வாக்குப் பெற்று விளங்கியதையும், கடல் கடந்த நாடுகளில் சிவாலயங்கள் உள்ளதையும் வரலாறு கூறுகிறது. அமெரிக்காவில் கொலஹடே ஆற்றங்கரையில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவாலயம் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
பிலிப்பைன்ஸ் மக்கள் சிவனைச் சிவப்பன் என்று வழங்குகின்றனர். ஆசியாவில் சிவாஸ் என்று ஒருநகர் இருக்கிறது. அங்கே சிவவழிபாடும் ரிஷப வழிபாடும் இருந்தன. இந்தோனேசியாவில் இப்போதும் சிவாலயங்கள் உள்ளன. இலங்கையில் சிவன் ஒளி பாதமலை இருக்கிறது. ஜப்பானியரின் புராதனத் தெய்வம் சிவோ என்பது. பின்லாந்து மக்களின் காவல் தெய்வம் சிவனே கொரியாவில் வீதிதோரும் சிவாலயம் அமைத்து வழிபட்டனர். பாபிலோனியாவின் களிமண் ஏடுகளில் சிவன் என்பது மாதப் பெயராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்கேடிய மக்களின் ஏழுமுக்கிய நட்சத்திரப் பெயர்களில் சிவன் என்பதும் ஒன்று. எகிப்திய நதிக்கரையில் சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சயாம் மன்னரின் முடிசூட்டு வைபவத்தில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை லோரெம்பாவாய் என்று பாலிலிபியில் எழுதிப்படிக்கப்பட்டு வந்தது.
சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் பலவற்றைச் சிவபுரானங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஞான மார்கத்துக்கு வழி காட்டும் சைவம் நளினக் கலைகளையும் வளர்த்து வந்திருக்கிறது. சிற்ப எழில் மிக்க அற்புத ஆலையங்கள் வரிசையில் வடபுலத்தில் உள்ள குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாஜ்ரா மகாதேவர் ஆலையம், அல்மோராவை அடுத்த பீனேஷ்கர் ஆலயம், கேதாரிநாத் கஜுரஹோ மகாதேவர் கோயில்கள், உஜ்ஜைனி, புவனேசுரம், நாசிக் மகேசுவரர் திருக்கோயில்கள், தென்புலத்திய் கர்நாடகத்தில் சிருங்கேரி வித்யாரண்யர் ஆலையம், நஞ்சன்கூடு நஞ்சுண்டேசுவரர் கோயில், ஸ்ரீசைலம், காளஹத்திக் கோயில்கள், கேரளத்துவைக்கம், எட்டுமாணுர், வடக்குநாதர் ஆலயங்கள், தமிழகத்தில் சிதம்பரம், மதுரை, குடந்தை, தஞ்சை, காஞ்சி, திருவண்ணாமலை, இராமேசுவரம், மயிலை ஆலயங்கள் ஆகியவை தலப் பெருமையும், கலைப்பெருமையும் இணைந்தவை.
தமிழகத்தில் இந்தியர் சிற்பக் கலைக்குப் பெரும் பணிபுரிந்த பல்லவர், பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகர அரசர்கள் கைவண்ணத்திலும், மெய்வண்ணத்திலும் மலர்ந்த ஆலயங்கள் பலவற்றில் ஆகமங்கள் வருணிக்கும் அரனின் அழகு வடிவங்களைக் காண்கிறோம். சிவபெருமானின் அர்த்தநாரீச்சரர், சோமாஸ்கநாதர், ஹரிஹரர், தட்சிணாமூர்த்தி கல்யாண சுந்தரர், கங்காதரர், பைரவர். சண்டேச அனுக்கிரகமூர்த்தி ரிஷபாருடர், உமாசதகர், சரபமூர்த்தி, சகாசனர் விருஷாபஹரணா ஆகிய திருக்கோலங்களைக் கல்லிலும், செம்பிலும் கண்ணாரக்காணலாம்.
சிவபெருமான் ஆடும் அழகன். தமிழகத்துக் கலைப்படைப்புகளில் ஆடல் தேவனின் அழகு வடிவங்கள் தனிஇடம் பெற்றவை. பிறை சூடிய பெருமான் கலைக்கு ஒரு தெய்வம் அல்லவா. அழகுக் கலைகள் அவனைச்சரணடைந்ததில் வியப்பில்லைதான். சிவதாண்டவத்தின் பேரெழிலை, தத்ரூபமான படப்பிடிப்பை, திருவெண்காடு, திருவாலங்காடு, நல்லூர், குடந்தை நாகேசுவர ஆலையப் படிமங்களில் காணலாம். சிவலீலைச் சிற்பங்களைச் சித்தரிக்கும் தமிழகத்துக் கோயில்களில் பல்லவர் படைத்த காஞ்சி கைலாயநாதர் ஆலயம், திருச்சி மலைக்கோயில், சோழர் சமைத்த தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் ஆலயங்கள் பாண்டியரின் கழுகுமலைக் குகைக்கோயில், பல மன்னர்கள் பாங்கோடு உருவாக்கியதில்லை. மதுரை ஆலயங்கள் சுசீந்தரம் தாணுமாலயப் பெருமாள் கோயில் ஆகியவை காலம் போற்றும் கற்காவியங்களாக விளங்குகின்றன.
சிவபெருமானுக்குச் சிறப்பாக உரிய திருநாட்கள் மூன்று. மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை நாட்கள் சிவமகிமையை உணர்த்துகின்றன.
இத்திருநாட்களின் பழமைச் சிறப்பை ஆலயக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆந்திரத்து ஸ்ரீ சைலத்திலுள்ள மல்லிகார்ஜுனர் ஆலய முகமண்டபத்தில் சிவராத்திரி நாளில் விஜய நகர வேந்தர் ஒருவர் அந்த மண்டபத்தை அக கோயிலுக்கு வழங்கியதாகக் கல்வெட்டுகள் உள்ளன. சிவராத்திரி வழிபாட்டுக்காகக் சோழ மன்னன் ஒருவன் திரவியதானம் அளித்ததாகக் திருச்சிக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. திருவள்ளுரை அடுத்த திருப்பாசூரில் உள்ள சிவாலயக் கல்வெட்டு அந்நாளில் ஆடும் அழகனுக்கு ஆதிரைவிழா எடுக்கப்பட்டதை அறிவிக்கிறது. தஞ்சை மாவட்டத்துத் திருக்கோடிக்காவலில் உள்ள மற்றொறு கலிவெட்டு சோழ வேந்தன் குலோத்துங்கனின் முப்பத்து நான்காம் ஆண்டில் தில்லையம்பல விழுப்பரையன என்பான் நடராஜப்பெருமானுக்கு ஆதிரை நாளன்று அபிஷேகம் செய்விப்பதற்காக நிலமளித்த செய்தியைச் சொல்கிறது. இக்கல்வெட்டுக்கள்யாவும் பன்னுறு ஆண்டுகளாகச் சிவனுக்கு உரிய திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வந்திருப்பதையும் சிவவழிபாட்டின் பழமைச் சிறப்பையும் பறைசாற்றுகின்றன.
சிவவழிபாடு காலத்தைவென்று ஞானத்தில் நிலை கொண்டது அவலங்களை விரட்டி அருள் ஒளிபெற அந்த ஞான மூர்த்தியைப் போற்றுவோம். ஹர ஹர மஹாதேவா. சமய பயிற்சி எல்லோரும் பெற வேண்டும். இந்து மதம் என்பது அநாதியானது. எவ்வாறு நில இயல் வள்ளுநர்களாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்களாலும் உலகம் தோண்றியகாலத்தையும், மனிதன் தோன்றிய காலத்தையும் சரியாக நிர்ணயிக்க முடியவில்லையோ, அதுபோல இந்து மதமும் அநாதியானது. எவ்வாறு மற்ற மதங்களைத் தேதியிட்டுக் கூற முடியுமோ அது போல் இம்மதத்தைக் கூற முடியாது.
உலகமும் மனிதனும் தோன்றியவுடன் பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பித்தன. அத்துடன் அதற்கான தீர்வும் தோன்ற ஆரம்பித்தன. இதுதான் இந்து சமயம். இம்மதம் அநாதியானது என்பதற்க்கு சூரிய சந்திரனை நாம் ஒப்பிடுகிறோம். நான் இந்து நாடான நேபாளம் சென்றிருந்தபோது, அந்நாட்டின் தேசியக் கொடியில் சூரியன் சந்திரன் இருந்திருந்தது. சூரிய சந்திரனுக்கு எவ்வாறு அழிவு என்பது இல்லையோ, எவ்வாறு அது பழமையானதோ, எவ்வாறு அது தோன்றிய காலம் நிர்ணயிக்கப்பட முடியாததாக உள்ளதோ, அவ்வாறே இந்து மதமும், சூரியன், உணர்ச்சி, வேகம், சுறுசுறுப்பு இவைகளுக்கு உதாரணமாகவும், சந்திரன், சாந்தம், அமைதி இவைகளுக்கு உதாரணமாகவும் இருக்கின்றன. இதுவே இந்த மதத்தின் சின்னங்களாக இருக்கின்றன சூரியனும் சந்திரனும் இந்த உலகத்தில் ஒரு பகுதியில் தோன்றும் பொழது மற்றொரு பகுதியில் மறைந்திருக்கிறது. அவைகளுக்கு அஸ்தமனம் என்பதே கிடையாது. சில சமயங்களில் சூரியனும், சந்திரனும் மேகங்களால் மறைக்கப்படலாம். அது போலவே சில சமயங்களில் இந்து மதமும் மறைக்கப்பட்டது போல் காணப்படுகிறது.
மற்ற தெய்வங்கள் போல் அல்லாமல் சிவலிங்கம் தோன்றிய உடனே அதற்கு ஒரு கலை (சக்தி) சக்தி தோன்றுவது போல் அமாவாசை அன்று சந்திரனுக்கும் ஒரு கலை மறையாமல் இருக்கிறது. அது போலவே இந்து சமயம் மறைந்து இருந்தாற் போல் தோன்றிய காலத்திலும் சத்தியம், தர்மம் என்ற இவைகளினால் அது மறையாமல் இருக்கிறது. இவ்வாறு குழப்பங்களை அகற்றி தனி மனிதன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இம்மதம் உள்ளது. இந்து சமய மாணவர் மன்றம் மதத்தின் அடிப்பக்கொள்கைகளை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதின் முலம் இப்பணியை செய்துவருகிறது. 480 கிளைகள் கொண்ட இதில் மதுரை இந்து சமய மாணவர் மன்றம் சிறப்பாகச்செய்து வருகிறது. இதில் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் பல பயிற்ச்சி வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. மற்றும் தியானம், பஜனை போன்ற நல்வழிகள் மூலமாக மனிதனை நல்வனாக்குகிறது.
தனி மனிதன் வாழ்வு தூய்மையாக இருந்தால் துன்பம் வராது. ஒரு குடும்பத்தில் ஒருவராவது இப்பயிற்சியைப் பெறவேண்டும். அதுவே அக்குடும்பத்திற்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். இவ்வாறு குடும்பம் தூய்மை அடையும். அதைத் தொடர்ந்து நகரம் தூய்மை அடையும். அதைத் தொடர்ந்து நாடு தூய்மை அடையும். இப்பயிற்சியின் மூலமாக மாணவர்களை தூய்மை அடயச்செய்வதின் மூலம் தாய், தந்தை, ஆசிரியர்கள் இவர்களுடைய பிரச்சனை நீங்குகிறது. நல்ல சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவன் தூய்மையடைய பெற்றோர்களும் மதத்தைப்பற்றி அறிந்து இருக்கவேண்டும்.
பெற்றோர்கள் எவ்வாறு இருப்பார்களோ அவ்வாறே புதல்வர்களும் இருப்பார்கள். நல்ல குடும்ப சூழ்நிலையுள்ள இடத்தில் புதல்வர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இந்த நல்லனவற்றை நமது பண்பாடு, கலாச்சாரம், தத்துவம், வேதம், சரித்திரம், புராணங்கள் இவைகள் தெரிவிக்கின்றன. நான் திண்டுக்கல்லில் பேசும் போது ஒரு சிருவன் எழுந்து தன்னால் கடவுளைக்காண முடியுமா எனக்கேட்டான். நான் பதில் அளிக்கையில், எவ்வாறு நாம் அத்தியாவஸ்யமான தேவைகளுக்கு முயற்சி செய்கிறோமோ அதுபோலவே கடவுளைக்காண முயற்சிசெய்ய வேண்டும். துன்பம் இல்லாத ஒரு பொருள் ஒன்று கூற வேண்டுமானால் அதுவே கடவுளாகும். அக்கடவுளைக்காண சில அருகதைகள் வேண்டும். அதாவது இந்தத் தூய்மை, உடல், உடை இம்மூன்றிலும் வேண்டும். இம்மூன்று தூய்மைகளும் அமைந்து விட்டால், உள்ளத் தூய்மை தானாகவே வந்துவிடுகிறது. தூய்மை என்பது பனிதத்துவத்தைக் குறிக்கிறது. முதலில், உடலிலும், பிறகு உணவு உடைகளிலும் இப்புனிதத்துவம் ஏற்பட வேண்டும் இம்மூன்றும் வரும்போது உள்ளம் தூய்மையடைந்து உள்ளம் பெருகுகிறது. கடவுளைக்காணவேண்டும் என்றால் அகத்தூய்மை என்ற அருகதை வேண்டும், இத்தூய்மை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்து சமய மாணவர்மன்றத்தின் பணியாகும்.
- மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
- நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.
ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோவில் உள்ள சங்கரன்கோவில் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் ஆகும். நெல்லை மாவட்டத்திற்கு தலைநகரம் திருநெல்வேலி. அதற்கு அடுத்த பெரிய நகரம் சங்கரன்கோவில் ஆகும். ஆடித்தபசு என்றால் உடனே நினைவுக்கு வருவது சங்கரன் கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும்.
மற்ற தலங்களைப் போன்றே இந்த திருத்தலத்திற்கும் ரசிக்கும்படியான, சுவையான புராணக்கதைகள் உண்டு. இந்து சமயத்திலே பல பிரிவுகள் உண்டு. வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ஒற்றுமை இருப்பதாலே உலகிலேயே மிகவும் தொன்மையான பெரிய சமயம் ஆக இருக்கின்றது.
வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் வாதங்கள் உண்டாயிற்று. மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். இருவரும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரனாகவும், நாராயணராகவும் இணைந்து தோன்றி, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்தனர்.
இங்குள்ள பெருமானார் பாதி உருவம் சந்தனம், பாம்பு, மான் ஆகியவற்றுடன் சிவபெருமான் ஆகவும், மறு பாதி உருவத்தில் சங்கு, சக்கரத்துடனும் நாராயணராகவும் காட்சி தருகிறார். ஆனாலும், இதை ஒப்புக்கொள்ளாத வைணவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபடுவதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் தேவர்களில் ஒருவரான மாணிக்கிரீவன் என்பவர் பார்வதி தேவியின் சாபத்தினாலே பூமியிலே மானிடனாகப் பிறந்து ஒரு தோட்டத்தில் தோட்டக்காரானாக வேலை செய்து வந்தார். அந்த தோட்டத்தில் இருந்து மலர்கள் அரண்மனைக்கு தினமும் அனுப்பப்பட்டு வந்தது.
வன்மீகநாதன் பெயர் எப்படி?
ஒரு நாள் தோட்டத்தில் ஒரு பாம்பு புற்று இருப்பது கண்டு அதை அகற்ற மாணிக்கிரீவன் முயன்றபொழுது அதில் இருந்த பாம்பின் வால் வெட்டப்பட்டது. அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து அரண்மனைக்கு வந்து மன்னனிடம் கூறினார். அப்பொழுது அரசனாக இருந்த மன்னன் உக்கிரம பாண்டியன் இது சிவபெருமானின் இருப்பிடம் தான் என்று தீர்மானித்து, அந்த லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை நிர்மாணித்தார்.
அந்த புற்று வன்மீகம் என்று அழைக்கப்பட்டதால் அந்த இறையனாருக்கு வன்மீகநாதர் என்று பெயரிட்டனர். அந்த புற்றை இப்பொழுதும் கோவிலிலுள்ள ஒரு பெரிய தொட்டியில் வைத்துள்ளனர். அந்த புற்று மண்ணை சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பூசி வருகின்றனர். பாம்பு கடித்தல், தோல் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் துணைவியார் பார்வதி தேவி சிவபெருமானையும், தன் அண்ணன் மஹாவிஷ்ணுவையும் ஒன்று சேர காண விரும்பி, அதற்காக புங்கவன யாத்திரை சென்றாராம். ஆடி மாதம் ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்தார். பவுர்ணமி அன்று அவர் விருப்பம் நிறைவேற பூஜையின் முடிவில் சங்கரரும், மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி அளித்து ஆசி கூறியதால், இந்த இடம் சங்கர நாராயணர் கோவில் ஆயிற்று.
சிவபெருமான்-விஷ்ணுவை வழிபட்ட நாக அரசர்கள்
நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இருவரும் போட்டியில் யாருடைய இறைவன் பெரியவர் என்று வினா எழுப்பியதற்கு விடை தரும் வகையில் சிவனும் மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நராயணராக காட்சி அளித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.
உக்கிர பாண்டிய மன்னன் யானை மீது ஏறி, மீனாட்சி அம்மனை தரிசிக்க புறப்பட்டபொழுது யானை ஒரு குழியில் விழுந்து அதனால் அந்த குழியில் இருந்து எழ முடியவில்லை. அதுசமயம், ஒரு குடியானவன் அரசனிடம், காட்டில் உள்ள ஒரு எறும்பு புற்றின் மேல் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த லிங்கத்தை ஒரு பாம்பு சுற்றி இருப்பதாகவும் கூறினான். அங்கு விரைந்து சென்று அந்த அதிசயத்தை கண்ட மன்னன், இது இறைவனின் ஆணை என்று தீர்மானித்து கட்டியது தான் இந்த தலம் என்றும் கூறுகின்றனர்.
இப்படி பல புராண கதைகள் இத்தலத்தை பற்றி உள்ளது.
இத்திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.
புற்று மண்ணே அருள் பிரசாதம்
இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாகதேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டியதாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது.
இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.
ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.
சித்திரை பிரம்மோத்சவம் ஏப்ரல் மாதம் 10 நாட்களும், ஆடித்தபசு ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களும், தெப்பத்திருவிழா தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு விழா சமயத்தில் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கி பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக கூடுவர்.
வளர்ந்து வரும் பெரிய நகரம்
சங்கரன் கோவில் வளர்ந்து வரும் ஒரு பெரிய நகரம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, மிளகாய் வத்தல், நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் இதை சுற்றி, நூற்பாலைகளும், 4000 விசைத்தறி ஆலைகளும், கைத்தறி நெசவுத் தொழிலும் இருக்கிறது.
இங்கு உற்பத்தி ஆகும் பருத்தி சேலைகள், பாலி பருத்தி சேலைகள், துண்டுகள், டெரிதுவாலை துண்டுகள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவை.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
சென்னையில் இருந்து தினமும் வரும் பொதிகை விரைவு ரெயில் மூலம் வரலாம். இங்கு ரெயில் நிலையம், பேருந்து நிலையமும் உண்டு.
தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து ஆகம பூஜைகளும் பக்தர்களுக்காக தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது.
- மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது.
- சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான்.
இந்தியாவிலிருக்கும் முக்கியமான சிவபெருமானின் 12 தலங்களில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவை இந்தியாவில் அமைந்திருக்கும் இடங்களையும் அவை எப்படி அந்த இடங்களில் அமைந்தன என்பது குறித்த தகவல்களையும் சிவபுராணம் சொல்லுகிறது. அந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோவில்கள் குறித்த சிறு தகவல்களை இங்கே காணலாம்.
1. சோமநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - சோமநாதம் (குஜராத்)
சோமா என்ற இன்னொரு பெயரைக் கொண்ட சந்திர பகவான் ரோகிணியையும் தக்ஷ மகாராஜாவின் மகளையும் மணந்து கொண்டார். இரு மனைவிகளுக்குள் சோமா ரோகிணியை அதிகமாக நேசித்தார். இதை அறிந்த தக்ஷ மஹாராஜா சோமாவிற்கு சாபம் கொடுத்தார். சந்திரபகவான் ஒளியிழந்து தேயத் தொடகினார். சந்திரனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட தக்ஷன் ப்ரபாஸா என்ற இடத்தில் சோமாவிற்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்குமென்ற பரிகாரத்தையும் சொன்னார்.
அந்த இடத்திற்கு சென்ற சோமா ஒளியையும், தோற்றத்தையும் முழுமையாக பெற்றான். சந்திர பகவான் ப்ரபாஸாவில் சிவபெருமானுக்காகத் தங்கத் தகடுகளால் ஜொலிக்கும் சோமநாதர் கோவிலைக் கட்டினார். அரபிக்கடலின் தென்மேற்கு திசையிலுள்ள குஜராத் மாநிலத்தில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது. சந்திர பகவானால் கட்டப்பட்ட சோமநாத் கோவில் சேதமடைந்து பிறகு ராவணன், கிருஷ்ண பரமாத்மா, பீமனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோவில் 1026ஆம் ஆண்டில் முகமது கஜினி அழித்தான். அதன் பிறகு சோமநாத் கோவில் பல முறை புதுபிக்கப்பட்டது. தற்சமயமுள்ள சோமநாத் மந்திர் ஏழாவது முறையாக 1950ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது.
2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோவில் - ஸ்ரீசைலம் (ஆந்திரா)
கிருஷ்ணா நதியின் தென்திசையை ஒட்டி ரேஷபாகிரி மலைத்தொடரில் சிவபெருமான் உருவெடுத்து லிங்க வடிவத்தில் மாறினார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. இந்தக் கோவில் 1404ஆம் ஆண்டில் ஹரிஹர ராயா என்ற அரசனால் கட்டப்பட்டது. 8 மீட்டர் உயரத்தில் இந்தக் கோவிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கோவிலுள்ள லிங்கம் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முன்காலத்தில் மக்கள் இந்த லிங்கத்தை மல்லிகை மலர்களால் பூஜை செய்து வந்தார்கள். அதனால் இந்த லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான் இந்தக் கோவிலுக்கு வருகை தந்ததாகவும் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமர் ஸஹஸ்ரலிங்கத்தை நிறுவியதாகவும் புராணம் சொல்லுகிறது. இங்கு இவர் 1001 சிறிய லிங்கங்களை உருவாக்கினார் என்ற பெருமையும் இருக்கிறது. இந்தக் கோவிலில் பிரம்மராம்பிகா தேவியின் (பார்வதி தேவியின் இன்னொரு பெயர்) சன்னதியும் இடம் பெற்றுள்ளது.
3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
துஷானா என்ற அரக்கன் அவந்தி நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனுடைய கொடுமையை அழிக்கவும் அவனிடமிருந்து மக்களைக் காக்கவும் சிவபெருமான் இந்த பூமியில் தோன்றினார். துஷானாவைக் கொன்று அவந்தி நாட்டு மக்களை கொடுமையிலிருந்து விடுவித்தார். அதன்பிறகு மக்கள் சிவபெருமானை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதின் காரணத்தால் மஹா கால் லிங்கமாக உருவெடுத்தார்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாநகரத்தில் இந்த மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. மாபெரும் சக்தியைக் கொண்ட சுயம்புவாக தோன்றிய மஹாகால் லிங்கம் கோவிலின் அடித்தளத்தில் உள்ளது. இதற்கு மேல்தளத்தில் விநாயகர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது தளத்தில் நாக சந்திரேஷ்வரர் சன்னதி உள்ளது. இந்தச் சன்னதியின் கதவுகள் நாகபஞ்சமியன்று திறந்து வைக்கப்படுகின்றன. கோவிலின் பிரதான சன்னதியில் 100 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்ட ருத்ரயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரகன் சிவபெருமான். இந்தக் கோவிலில் மஹாகாலேஷ்வர் லிங்கத்திற்கு மனிதப் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலால் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)
நர்மதை, காவேரி ஆகிய இரண்டு நதிகள் கூடுமிடத்திலுள்ள மன்ஹாடா தீவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஓம் என்ற வடிவத்திலுள்ள இந்தத் தீவின் வடதிசையில் கௌரிசோமநாதர் கோவில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் அர்ஜுனன், பீமனின் மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளன. பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தநாத் கோவிலும் இந்தத் தீவில் இடம் பெற்றிருக்கிறது. நவராத்திரி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோவில் - வாரணாசி எனும் காசி (உத்தரப்பிரதேசம்)
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கிறது. வாரணாசியை காசி என்றும் அழைக்கிறார்கள். இந்தோரை ஆண்ட அஹில்யாபாய் ஹோல்கர் என்ற மஹாராணி இந்தக் கோவிலைக் கட்டினார். கோவிலின் பிரதான சன்னதியிலுள்ள தங்கத்தகடுகள் மகாராஜா ரஞ்ஜித் சிங்கினால் வழங்கப்பட்டது. இந்தக் கோவிலுள்ளே ஞானவியாபி கிணறு ஒன்று உள்ளது.
விஸ்வநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள லிங்கமும் இந்தக் கிணற்றிலிருந்துதான் கிடைக்கப் பெற்றது என்று புராணங்கள் சொல்லுகின்றன. தாமரை புஷ்பம், மந்தாரை புஷ்பம் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு தினந்தோறும் பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தண்டபாணி, மஹாவிஷ்ணு, காலபைரவன் சன்னதிகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கின்றன.
6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் -இமயம் (உத்தரப்பிரதேசம்)
ருத்ர இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள இந்தக் கேதாரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் வருடத்தில் ஆறு மாதத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற ஆறு மாதத்திற்கு மூடி வைக்கப்படுகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் இணைந்து அர்த்தநாரேஷ்வரராக தோற்றமளிக்க கேதாரேஷ்வரரை பிரார்த்தனை செய்தாள். பார்வதியின் வேண்டுதலுக்காக இங்கு சிவபெருமான் கேதாரேஷ்வர லிங்கமாக உருவெடுத்தார். இந்தக் கோவிலினுள்ளே பார்வதி, விநாயகர் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், திரௌபதிதேவி, குந்திதேவி போன்றவர்களின் மூர்த்திகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கிறது.
7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோவில் - நாகநாதம் (மகாராஷ்டிரா)
த்வாரகா பெட், த்வாரகா ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையே நாகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் உள்ளது. சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று தாக்கி அவர்களைக் கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள்.
சிவ பக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோவிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். எரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். திடீரென்று கிழக்கு திசையை நோக்கியிருந்த நாகேஷ்வர லிங்கம் தென்திசையை நோக்கித் திரும்பியது. கோவிலின் கோபுரம் கிழக்கு திசையை நோக்கியிருந்தாலும் பிரதான சன்னதி தென்திசையை பார்த்திருப்பது இங்கு விசேஷமானது.
8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - குண்ருனேசம் (மகாராஷ்டிரா)
மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது. தேவகிரி மலைத்தொடரில் சுதர்மா சுதேஹா பிராமணத் தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். வேதங்களை அறிந்த சுதர்மா தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் வேதனையடைந்த சுதேஹா சகோதரி கிரிஷ்னாவை சுதர்மாவுக்கு மணம் செய்து கொடுத்தார். சிவபக்தியுடைய கிரிஷ்னா 101 லிங்கங்களை உருவாக்கி பூஜைகள் செய்த பிறகு ஏல கங்கா நதியில் விசர்ஜனம் செய்தாள். அவளுடைய பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவளுக்கு ஆண் குழந்தையை வரமாக கொடுத்தார்.
பொறாமை கொண்ட சுதேஹா அவளுடைய ஆண் குழந்தையைக் கொன்று ஏலகங்கா நதியில் தூக்கி வீசினாள். அனைத்தையும் அறிந்த கிரிஷ்னா சிவபெருமானால் கொடுக்கப்பட்ட குழந்தை அவரால் ரட்சிக்கப்படுவான் என்று மன உறுதியோடு சிவலிங்க பூஜையைத் தொடங்கினாள். லிங்கங்களை நதியில் விசர்ஜனம் செய்யும்போது அவளுடைய ஆண் குழந்தை திரும்பி வருவதைக் கண்டாள். சிவபெருமானும் அவள் முன் காட்சி தந்தார்.
தன் சகோதரியை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். தன்னுடைய பெயரில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக உருவெடுக்க வேண்டுமென்று அவளுடைய ஆசையையும் தெரிவித்தாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் அங்கு கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கமாக காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலில் மதிய வேளையில் பஜனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் - திரியம்பகம் (மகாராஷ்டிரா)
நாசிக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் த்ரியம்பக் என்ற இடத்தில் இந்தக் கோவில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கண்களின் வடிவத்தில் காட்சி தருவது விசேஷமானது. பிராமணர்கள் நிறைந்த த்ரியம்பக் நகரத்தில் வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் அதிகமாக இருக்கின்றன.
10. ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)
ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் பழமையான கோவிலாகும் இந்தக் கோவிலில் பிரம்மாண்டமான நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். சீதாதேவியால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விஸ்வலிங்கம் ஆகிய இரண்டும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமேஸ்வரத்தில் சிவபெருமானுக்கு சிறப்புப் பூஜை செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது.
11. பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோவில் - பீமசங்கரம் (மகாராஷ்டிரா)
திரிபுரசுர அரக்கனின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவனுக்கு சாவில்லாத வரத்தை கொடுத்து கூடவே ஆண்பாதி, பெண்பாதி உடல் கொண்டவரால் அவனுக்கு சாவு என்று சொன்னார். சிவபெருமானிடமிருந்து வரத்தை பெற்ற திரிபுரசுரன் மக்களை கொடுமைப்படுத்தினான். அவனுடைய கொடுமையை தாளமுடியாத மக்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார்கள்.
கார்த்திகை பௌர்ணமியன்று பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் புகுந்து அர்த்தநாரீஷ்வரராக மாறி திரிபுசுர அரக்கனை கொன்றார். அவனோடு போராடும் சமயத்தில் பூமியைத் தொட்ட சிவபெருமானின் வியர்வைத் துளிகள் பீம நதியாக மாறியது. அந்த இடத்தில்தான் சிவபெருமான் பீமசங்கர் ஜோதிர்லிங்கமாக காட்சி அளிக்கும் கோவில் இருக்கிறது.
12. வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - பரளி (மகாராஷ்டிரா)
சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து, அவனிடம் சக்தி வாய்ந்த லிங்கத்தை கொடுத்தனுப்பினார். அரக்கர்கள் நிறைந்த இலங்கைக்கு ராவணன் லிங்கம் எடுத்துச் செல்வது தேவர்களுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை.
ராவணனுக்கு தடங்கல்கள் உருவாக்க முடிவெடுத்தார்கள். திடீரென்று கங்கா தேவி ராவணன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டாள். தண்ணீர் நிரம்பிய வயிற்றின் பாரத்தை குறைக்க ராவணன் கையிலிருந்த லிங்கத்தை பிராமணனிடம் கொடுத்தான். ராவணன் அந்த பிராமணனை மஹாவிஷ்ணு என்று அறிந்து கொள்ளவில்லை. ராவணன் திரும்புவதற்குள் மஹாவிஷ்ணு லிங்கத்தை பூமியில் ஆழமாக புதைத்து விட்டு மறைந்தார்.
மண்ணில் புதைந்த லிங்கத்தை ராவணன் எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தான். லிங்கத்தை எடுக்க முடியாததால் சலிப்படைந்த ராவணன் இலங்கையிலிருந்து இந்த இடத்திற்கு வந்து பூஜை செய்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. லிங்கம் புதைந்த இடத்தை வைத்யநாத் ஜோதிர்லிங்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தக் கோவிலைச் சுற்றி 22 கோவில்கள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை குளமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்தில் நீராடினால் தீராத எந்த வியாதியும் மறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இங்கு அதிகமாக வந்து செல்லுகிறார்கள்.
- இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
- “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.
திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.
இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.
மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.
ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.
இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
ஆகாயம் - சிதம்பரம் கோவில்
நீர் - திருவானைக்காவல் கோவில்
நெருப்பு - திருவண்ணாமலை கோவில்
"மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
"ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.
இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.
இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.
கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
ஓம் நம சிவாய!...