என் மலர்
நீங்கள் தேடியது "ஆரூர் தாஸ்"
- பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்.
- சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபலமான வசனகர்த்தவாக அறியப்பட்ட ஆரூர்தாஸ் சென்னையில் மரணமடைந்தார் (வயது 91). வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அவரது உடல் தி.நகரில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இவருக்கு பேபி என்ற மனைவியும், ரவிசந்திரன், தாராதேவி, ஆஷாதேவி ஆகிய மகன், மகள்களும் இருக்கிறார்கள்.
1955-ம் ஆண்டு நாட்டிய தாரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பிறகு வசனகர்த்தா தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்படங்களுக்கு பணியாற்றி வந்தார். திருவாரூர் ஜேசுதாஸ் என்ற இவரது பெயரை தஞ்சை ராமையாதாஸ் ஆரூர் தாஸ் என்று மாற்றி வைத்தார். இதன் பிறகு வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் உதவியாளராக சவுபாக்யவதி என்ற படத்தில் சேர்ந்தார்.
பிசியாக பணியாற்றிக் கொண்டிருந்த நாராயணன், தான் வசனம் எழுத வேண்டிய ஒரு காட்சியை ஆரூர் தாஸிடம் கொடுத்து எழுதச்சொல்ல, அவருக்குப் பிடித்துப்போனது. பிறகு தேவரின் வாழ வைத்த தெய்வம் படத்தின் மூலம் தனியாக வசனம் எழுதத்தொடங்கினார். ஜெமினி கணேசனும், சாவித்ரியும் பாசமலர் பட வாய்ப்பை தாசுக்குப் பெற்றுத்தர திரையுலகில் ஆரூர் தாஸின் சகாப்தம் ஆரம்பித்தது.
திரையுலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோரின் படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதி அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதோடு பாசமலர் படத்தில் இவர் எழுதிய ஆனந்தா என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக் கண்ணீரைத்தன் பார்க்க வேண்டும் என்ற வசனம் இன்றளவுக்கும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான வசனமாக இருந்து வருகிறது.

நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த வசனத்தை எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆரூர் தாஸ். சிவாஜி கணேசனின் படங்களுக்கு பெரும்பாலும் ஆரூதாஸ் வசனம் எழுதியிருக்கிறார். எம்;ஜி.ஆர். நடித்த வேட்டைக்காரன், அன்பே வா, தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனையன், தொழிலாளி, தனிப்பிறவி, ஆசைமுகம், நீதிக்கு தலைவணங்கு என்று பல்வேறு படங்களில் எழுதி அசாத்திய சாதனை புரிந்தார்.
திரையுலகில் 850க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியிருக்கும் இவர் பெண் என்றால் பெண் என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கிறார். இவர் 100-க்கும் அதிகமான மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு எழுதியிருந்தார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது. சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தன்னுடைய முத்திரையை பதித்து என்.டி.ஆர். போன்ற கதாநாயகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆரூர் தாஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை மந்தைவெளி கல்லறை செயிண்ட் மேரீஸ் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மேலும் ஆரூர்தாஸ் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கே.பாக்யராஜ், சிவகுமார், இயக்குனர் எழில், மனோபாலா, ஆ.ராசா, அமைச்சர் ஏ.வ. வேலு, பூச்சி முருகன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.