என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதம்பம்"

    • ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.
    • உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்.

    எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அது போல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்.

    ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காற்றோடு கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.

    மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

    இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்.

    இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

    இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான். குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம்.

    நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது. உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்.

    இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

    கோயிலுக்கு போய் வந்தவுடன் குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான்.

    -இந்திரா செளந்திரராஜனின் "சிதம்பர ரகசியம்" நூலில் இருந்து...

    • தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.
    • பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது.

    அதிகாலை...

    சென்னை யானைக்கவுனி பகுதியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

    அது எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலம். இளமைக்காலத்தில் பெரும்பாலும் வறுமையில்தான் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

    அப்போது அவர் குடியிருந்த இடம்தான் யானைகவுனி.

    எம்ஜிஆர் வழக்கமாக வாக்கிங் போகும் வழியில், சாலையோரம் அமர்ந்து, புட்டு அவித்து விற்றுக் கொண்டிருப்பாராம் ஒரு பாட்டியம்மா. அந்த பாட்டியிடம் தனக்கும், தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.

    அப்படி ஒரு நாள் காலையில் வாக்கிங் போய்விட்டு, அந்த பாட்டியிடம் புட்டு வாங்கச் சென்ற எம்.ஜி.ஆர்., தன் கையில் இருந்த காசை எண்ணிப் பார்த்து விட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.

    "பாட்டி, இன்றைக்கு புட்டு வேண்டாம். நாளைக்கு வாங்கிக்கறேன்."

    பாட்டி நிமிர்ந்து எம்ஜிஆர் முகத்தை பார்த்தார்.

    "ஏம்பா..?"

    தயக்கத்துடன் சொன்னார் எம்ஜிஆர்: "பாட்டி.. நான் எனக்கு மட்டும் வாங்க வரவில்லை. என்னோடு இருக்கும் மூணு பேருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால்..?"

    "என்ன ஆனால்?" என்று பாட்டி கேட்க..

    "அவ்வளவு பேருக்கும் சேர்த்து வாங்கக் கூடிய அளவுக்கு இன்னைக்கு என் கையில் காசு இல்லை பாட்டி" என்றார் எம்.ஜி.ஆர்.

    "பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடுப்பா " என்று சொல்லி எல்லோருக்கும் சேர்த்து புட்டை பார்சல் செய்து எம்.ஜி.ஆர். கையில் கொடுத்தாராம்.

    எம்.ஜி.ஆர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.பாட்டி கொடுத்த பார்சலை வாங்காமல் எம்.ஜி.ஆர். ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க,

    பாட்டி:"என்னப்பா யோசிக்கிறே ?"

    "ஒண்ணும் இல்ல, ஒருவேளை நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்னை ஏமாத்திட்டா என்ன பண்ணுவே பாட்டி ?"

    பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது. வரலேன்னா உங்க எல்லோருக்கும் பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. அது தருமக் கணக்குல சேர்ந்துடும்."

    பாட்டி சாதாரணமாகச் சொன்ன இந்த பதில் எம்ஜிஆரின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எம்ஜிஆர் பிற்காலத்தில் செய்த எத்தனையோ தானதர்மங்களுக்கு, அந்தப் பாட்டிதான் காரணமாக இருந்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

    சொன்னபடியே மறுநாள் தேடிச் சென்று அந்தப் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டி பற்றி விசாரித்து, தேடிச் சென்று உதவி செய்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.

    -ஜான்துரை ஆசீர் செல்லையா

    • எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.
    • 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.

    இசை சொல்லி கொடுத்த குருவிடமே சவால் விட்டவர் இசைஞானி!..

    ராஜான்னா சும்மாவா!..

    70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் தனது இசையால் திரையுலகையும், ரசிகர்களையும் கட்டி ஆண்டவர் இசைஞானி இளையராஜா. அறிமுகமான 'அன்னக்கிளி' படத்திலேயே அற்புதமான பாடல்களை கொடுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

    80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவானது.

    ராஜா இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் ஹிட் என்றே கணித்த காலம் அது.

    படத்தின் கதாநாயகன், கதாநாயகி யார் என முடிவாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் இளையராஜாவை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.

    அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு அவர் தேவைப்பட்டார்.

    இளையராஜா ஏதோ இசைக்கச்சேரிகள் நடத்தி வந்து அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார் என பலரும் நினைக்கிறார்கள்.

    அதுதான் இல்லை.

    அவர் எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.

    இளையராஜாவுக்கு கிடார், பியானோ மற்றும் வெஸ்டர்ன் இசையை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர்.

    ஆனால், காலையில் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் வேலை, மாலை இசைக்கச்சேரிகள் என ராஜா பல வேலைகளையும் செய்து வந்ததால் அவரால் தன்ராஜ் மாஸ்டர் வகுப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை.

    இசையில் 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.

    ஒரு நாள் ராஜாவிடம் 'நீ கண்டிப்பாக 8வது டிகிரியை தேர்ச்சி பெறவேண்டும். அது உன் எதிர்காலத்துக்கு நல்லது. உடனே அந்த தேர்வுக்கு பணத்தை கட்டு' என சொல்ல ராஜாவும் பணத்தை கட்டிவிட்டார்.

    ஆனாலும், வகுப்புக்கு சரியாக செல்லவில்லை.

    ஒருநாள் ராஜா வகுப்புக்கு சென்றபோது 'இனிமேல் என் வகுப்புக்கு நீ வராதே' என மிகவும் கோபத்துடன் சொல்லிவிட்டார்.

    அவரிடம் ராஜா 'எனக்கு சொல்லி கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்க. நானே பயிற்சி எடுத்து 8வது டிகிரியை பாஸ் பண்ணி அந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்பேன்' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    சொன்னதுபோலவும் செய்தும் காட்டினார். அந்த தேர்வில் 84 மார்க் எடுத்தால் ஹானர்ஸ் என சொல்வார்கள்.

    இளையராஜா 85 மார்க் எடுத்திருந்தார்.

    இதற்கு காரணம் ராஜாவிடம் இருந்த நம்பிக்கை மட்டுமல்ல. அவரின் உழைப்பு, விடாமுயற்சி, இசையில் அவர் காட்டிய ஆர்வம் என எல்லாவற்றையும் சொல்லலாம்.

    இப்படி தனது குருவிடமே சவால் விட்டு ஜெயித்து காட்டி பெருமை சேர்த்தவர்தான் இசைஞானி இளையராஜா.

    -ஸ்ரீரமணர் ராஜஷே்

    • உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • பழச்சாறு, சூப், பாயாசம்,ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.

    வெய்யில் அதிகமாகிறது....கவனமாக இருங்கள்.....உங்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி அளவான தண்ணீர் அருந்த வேண்டும்.

    ஒருவேளை, தண்ணீர் குடித்தும் தாகம் அடங்க வில்லை என்றால், உங்கள் உடலுக்குத் தேவையான நுண் சத்துகள் கிடைக்காமல் இருக்கலாம். இதற்கு, தர்பூசணி, இளநீர், மோர், கூழ், பழச்சாறு, வெள்ளரி, நுங்கு, பதநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.

    இது எதையும் செய்யவில்லை என்றால், மலச்சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சனைகள், உடலில் துர்நாற்றம், உடல் சோர்வு, மயக்கநிலை, வாயில் துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுதல், தலைவலி, கால்வலி என்று எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.

    ஒருவேளை....குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், நீர் அதிகம் சேர்க்கும்படி செய்யும் கஞ்சி, வெது வெதுப்பான பழச்சாறு, சூப், பாயாசம்,ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.

    இதனால் சிறு சிறு சருமப் பிரச்சனைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். ஆனாலும், தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வகையில், அதிக வியர்வை வெளியேற்றம், அதிக வெய்யிலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் (இருக்கிறார்கள்..காலையில் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில் மாலை அப்படியே திரும்பி வரும்).....

    இவர்கள்....அவர்களது இல்லத்தரசியிடம் அல்லது அம்மாவிடம் இதுபோன்ற மோரை செய்து கொடுக்கச் சொல்லி, ஒரு பாட்டிலில் ஊற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுங்கள்....

    ஒரு கைப்பிடி புதினா, சிறிது இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்....இவற்றுடன் சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி, துப்பியை நீக்கி விடவும். இதனுடன் மேலும் தேவையான மோரைக் கலக்கி, உப்பு (தேவையெனில்) சேர்க்கவும். ஒருநாள் கொத்துமல்லி தழை மாற்றிக் கொள்ளலாம். குடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் சுவையில் நிச்சயம் இருக்கும்...

    தேவையான நீரும், தாதுக்களும் ஒரு சேரக் கிடைப்பதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் சரியாகி, பசியும் நன்றாக எடுக்கும்.

    -முனைவர் வண்டார்குழலி

    • ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.
    • பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள்.

    பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும். கடவுள் அறிவுப்பொருளாக இருக்க, கோயில்களில் செம்பாலும் சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகிறார்களே? கல்லும் செம்பும் கடவுளாகுமா? இது அறிவுக்குப் பொருந்துமா?

    அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்புதான். இவைகளுக்கு தக்க விடைகள் பகிர்கின்றேன். ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.

    பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும், அந்தப் பசுவின் கொம்பைப் பிடித்து வருடினால் பாலைப் பெறமுடியுமா? வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது. பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி மூலம் பெறுவது போல், எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோவிலில் விளங்கும் திருவுருவத்தின் மூலமாகப் பெறுதல் வேண்டும்.

    ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.

    பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள். ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று, மோர்க்குழம்பு போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாதவனை பார்த்து.

    தம்பி! நீ என்ன படிக்கின்றாய்? என்று கேட்டார்.

    அவன் "புத்தகம் படிக்கின்றேன் " என்றான்.

    புத்தகம் எங்கே ? என்று கேட்டார்.

    வீட்டில் இருக்கிறது என்றான்.

    புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் ?

    மோட்டார், லாரிகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    இது என்ன ஆடு, மாடு அடைக்கின்ற பவுண்டா? என்று கேட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கரும்பலகையில், "அறம் செய்ய விரும்பு " என்று எழுதி, "தம்பி இது என்ன படி" என்றார்.

    அவன் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

    என்னப்பா! ஆறு மாதங்களாக பள்ளிக்கு வருகின்ற உனக்கு 'அறம் செய்ய விரும்பு' என்பதை படிக்கக் கூடத் தெரியவில்லையே ? " என்று கூறி வெகுண்டார்.

    பின்னர் குழந்தைகள் சுலபமாக படிக்கக் கூடிய விதத்தில் அக்கரும்பலகையில் " படம் " என்று எழுதினார்.

    அம்மாணவனைப் பார்த்து " இதனைப் படி" என்றார். அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.

    பள்ளித் துணை ஆய்வாளர் 'படம்' என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார். நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி, தம்பி! இது உனக்குத் தெரிகிறதா? என்றார்.

    தெரிகிறது என்றான். ஆசிரியரும், ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.

    தம்பி இது என்ன எழுத்து?

    கோடு என்று கூறினான் அம்மாணவன்.

    ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.

    மற்றொரு மாணவனை அழைத்து "இது என்ன?" என்று கேட்டார்.

    அவன் ' ட' என்று கூறினான்.

    கோடும் அதுதான், ' ட' வும் அதுதான். கற்றவன் ' ட' என்று கண்டான். கல்லாதவன் " கோடு " என்று கண்டான்.

    கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ' ட' என்ற ஒலியைக் காண்கின்றான்.

    இது போல, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளுக்குள்ளே சச்சிதானந்தப் பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள்.

    அவைகளைச் செம்பு என்றும் கல் என்றும் கூறுவது ' ட' என்ற எழுத்தைக்கோடு என்று கூறுவதை ஒக்கும்.

    திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய " வாழும் வழி " என்ற புத்தகத்திலிருந்து...

    -ஆர். எஸ். மனோகரன்

    • முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார்.
    • அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.

    அவ்வையார் எளிதாக எழுதிய வைத்துச் சென்றுவிட்டார். சினம் கொள்ளாமல் இருந்து விட முடிகிறதா? முடியவில்லையே!

    "தீராக் கோபம் போதாய் முடியும்" என்பது முதுமொழி.

    ஆண்களுக்கு எளிதாக சினத்தைக் காட்டும் இடம் மனைவிதானே!

    மனைவி மட்டும் தான், "இது இப்படி தான், முதலில் பாயும் அப்புறம் பதுங்கும்" என்று நினைத்து அமைதி காப்பவர்.

    தலைமை ஆசிரியர் என்னை அழைத்துச் சினந்தார். "உங்களால் தான் பள்ளிக்கூடமே கெடுகிறது. மாணவர்களை அடக்கவே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் ஏன் வாத்தியாரா வந்தீங்க?" என்றெல்லாம் கூறி, யார் மேலோ உள்ள கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்.

    அவர் அப்படிப் பேசலாம். நான் அவரிடம் அவ்வாறு பேச முடியுமா? அமைதியாக வீடு வந்தேன்.

    மனைவி காப்பி ஆற்றியவாரே வந்தார். நான் வாங்கிய வசவை யாரிடமாவது கொட்டியாக வேண்டுமே!

    "காப்பியாடி இது..? கழனித்தண்ணி மாதிரி இருக்கு!" என்று சீறினேன்.

    என் மனைவி புரிந்து கொண்டார். "இது எங்கேயோ வாங்கினதை இங்கே வந்து இறக்கி வைக்குது" என்று பக்குவமாகக் கேட்டார்.

    "ஏங்க.. உங்க எச்.எம். ஏதாவது திட்டிட்டாரா?"

    புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நடந்ததை விவரமாகக் கூறி மனச்சுமையை இறக்கினேன்.

    ஆண் நெருப்பு என்றால் பெண் தண்ணீர். ஆம், நான் நெருப்பாகச் சுட்ட போது, என் மனைவி தண்ணீராக மாறி அதை அணைத்தார்.

    கொள்ளிக்கட்டையின் மீது நீரை ஊற்றினால், சுறுசுறுவென்று சத்தம் வரும். கூடவே கொஞ்சம் புகையும் வரும்.

    அதனால் தான் அடுத்த வீட்டுக்காரர், "பக்கத்து ஊட்டுல என்னா புகையுது?" என்று அவர் மனைவியிடம் கேட்கிறார். இதனால் தான் நெருப்பை "அக்னி பகவான்" என்று ஆணாக்கிக் கூறுகிறார்கள்.

    காவிரி கங்கை ஆறுகளை, "காவிரி அன்னை" என்று பெண்ணாக்குகிறார்கள். "கங்கா மாதா" என்று நெகிழ்கிறார்கள்.

    முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார். அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.

    முல்லா வேலைக்காரர் திருடிச் செல்வதை அறிந்து கொண்டார். ஆயினும் அவரிடம் கோபமாகப் பேசாமல் நயமாகவே திருத்த நினைத்தார்.

    ஒவ்வொன்றாக நிறையப் பொருளை எடுத்துப்போய் விட்டார். கடைசியாக ஒரு நாள் ஒரு தம்ளரை எடுத்து மறைவாக மடியில் கட்டிக் கொண்டு, முல்லாவிடம் விடைபெற்று வீடு சென்றார். அவர் பின்னாலயே முல்லாவும் பணியாள் வீட்டுக்குச் சென்றார்.

    வீடு சென்ற பணியாள் திரும்பிப் பார்க்கிறார், முல்லாவும் பின்னாலயே வருகிறார்.

    "முல்லா நீங்க எங்கே வாரிங்க?" என்றார் வேலைக்காரர்.

    "நானும் உங்க வீட்டுக்கே வந்துடறேனே" இது முல்லா.

    "ஏன் முல்லா இப்படிச் சொல்றீங்க?"-வேலையாள்

    "வேற என்னப்பா? என் பொருளெல்லாம்தான் இங்கே வந்துட்டு, நான் மட்டும் அங்கே இருந்து என்ன செய்யப்போறேன்? நானும் வந்துடறேன். அதான் வந்துட்டேன்"

    முல்லா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் வேலைக்காரர் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தார்.

    கோவமாகப் பேசி இருந்தால், வேலைக்காரர் தலைகுனிவாரா?

    ஒரு திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும் மதுரமும் கணவன் மனைவியாய் நடிப்பார்கள்.

    பல ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு நாள் கலைவாணர் சினத்துடன் சொல்வார், "பத்துவருசமாப் புள்ளை இல்லே. வேற கல்யாணம் பண்ண வேண்டியது தான்."

    மதுரம் சொல்லுவார், "புள்ளை இல்லேன்னா என்னாங்க? கல்யாண எல்லாம் வேணாங்க"

    கலைவாணர்,"அதலெல்லாம் முடியாது, வேற கல்யாணம் பண்ணியே ஆகனும்" என்று பிடிவாதம் பிடிப்பார்.

    மதுரம் கடைசியாகச் சொல்லுவார், "நான் வேணாம் வேணாம்னு சொல்லுறேன். நீங்க என்ன கேட்க மாட்டேங்கறீங்க. சரிங்க நீங்களே சொல்றீங்க, வேற என்ன செய்றது? நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க. கல்யாணம் பண்ணிடலாம்" என்றதும் கலைவாணர் கலங்கி நிப்பார்.

    இது வெறும் சிரிப்பு மட்டுமா? சிந்திக்க வேண்டிய செய்தி. சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. சினம் தவிர்ப்போம் சிறக்க வாழ்வோம்!.

    -புலவர் சண்முகவடிவேல்

    • ராத்திரி தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் பாய் ஒரு பக்கம் கெடக்கும்...
    • தலையணை வேற பக்கம் கெடக்கும். நானு அந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் கெடப்பேன்.

    "நிம்மதியாக..சந்தோஷமாக வாழ வழி சொல்லு முருகா..."

    "பக்தா மூணு வேளையும் ஒழுங்கா பசிக்குதா... ?

    சாப்பாடும் கிடைக்குதா... ?

    சாப்பிட்டது ஜீரணம் ஆகுதா..?"

    "ஆமாம் முருகா.... மூணு வேளையும் நல்லா கொட்டிக்கிறேன்....

    இது போக காபி டீ... வடை, பஜ்ஜி , சமோசா, சிப்ஸூ, பப்ஸூ னு எல்லாம் போயிட்டு இருக்கு...

    ஞாபக சக்தியை விட ஜீரண சக்தி அதிகமாக இருக்கு முருகா...."

    "நல்லா தூக்கம் வருதா... ?"

    "அத ஏன் கேட்குற முருகா... ராத்திரி தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் பாய் ஒரு பக்கம் கெடக்கும்.. தலையணை வேற பக்கம் கெடக்கும். நானு அந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் கெடப்பேன். அதிலும் வாய பே ன்னு வச்சுட்டு தூங்குறேன்..."

    "ஏன்டா அவனவன் சோறு கிடைக்காம... கிடைத்தாலும் நினைத்த நேரத்திற்கு சாப்பிட முடியாம... அப்படியே சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாம.... தூங்கினா தூக்கம் வராம நாயா பேயா அலைஞ்சுட்டு இருக்கானுங்க... இதுல நீ இன்னும் நிம்மதி சந்தோஷம் கேட்குற... உன்னை எல்லாம்...."

    "அதில்ல முருகா....",

    "இப்ப பேசாம போறீயா.. இல்ல வேல எடுத்து வாயில சொருகவா..."

    "முத்தைதிரு பத்தித்திரு...."

    "டேய் பாட்டு பாடாம போடா....

    வந்தேன் ன்னா அம்புட்டுத்தேன்...."

    -ஜெய் ஸ்ரீராம்

    • இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள்.
    • வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது.

    காஷ்மீரைத் தாண்டி காரகோரம் மலைத் தொடர்களின் மடியில் இருப்பதுதான் ஹன்ஸா பள்ளத்தாக்கு. இங்கு வாழும் மக்களின் சராசரி வயது 120 என்பதையும், பெண்கள் 90 வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் சொன்னால் நம்புவீர்களா?

    பெண்களே இப்படி என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன.. நூற்றியிருபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், நூறு வயது என்பது இங்கே நடுத்தர வயது தான்.. நூறு வயதிலும் இவர்கள் அப்பாவாகிறார்கள்.

    இது எப்படி சாத்தியம்? இந்த விஷயம் வெளி உலகுக்கு எப்படி தெரியவந்தது? என்று கேள்வி எழுப்பினால் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கைப் பார்த்துவிடலாம். 1984-ம் ஆண்டில் ஹன்ஸா இனத்தைச் சேர்ந்த அப்துல் என்பவர், லண்டன் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.

    'பிறந்த வருடம் 1932 என்பதற்குப் பதிலாக 1832 என்று தவறாக அச்சாகியிருக்கிறது' என்று அதிகாரிகள் அப்துலிடம் கேட்டார்கள். 'இல்லை... 1832 என்பது தான் சரி' என்று அப்துல் சொன்னதும் கோபம் கொண்ட அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரணம், அப்துல் நடுத்தர வயது மனிதராகவே தோன்றினார்.

    அப்துலுக்கு வயதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வயது 152-தான் என்பது உறுதியானதும் உறைந்துபோனார்கள் அதிகாரிகள். ஹன்ஸா இன மக்கள் பற்றிய ரகசியம் அதன் பிறகே உலகுக்குத் தெரியவந்தது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது இன்னும் பல அதிசயங்கள் வெளிவந்தது.

    இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள். அதுவும் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சுவாசிக்க தூய்மையான மலைக்காற்று, பகல்முழுவதும் உழைப்பு, ஜீரோ டிகிரி குளிராக இருந்தாலும் குளிர்ந்த ஆற்றுநீரிலேயே குளிப்பது போன்ற நல்லவாழ்க்கை முறையே அந்த ரகசியம் என்பதை ஆய்வு புரிய வைத்தது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இதெல்லாம் நமக்கும் சாத்தியம்தானே!

    -சரவணகுமார்

    • அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது.
    • மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க.

    "கையிலே என்ன பொட்டலம்?"

    "மல்லிகைப் பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்....!"

    "அவ்வளவு பிரியமா உங்களுக்கு?"

    "ஆமா சார்.... என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதானே காரணம்!"

    "உங்க வெற்றிக்கு மட்டுமா... அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து... அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியா ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே!"

    "அப்படியா?"

    "மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!"

    "அய்யோ பாவம்!"

    "அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க... மனது சோர்ந்து போயிடாதீங்க...நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க... அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு... அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டு பிடிச்சார்!"

    "பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!"

    "சரி... இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?"

    "அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்!"

    "இதுக்கு உங்க மனைவி ரொம்ப ஒத்தாசையா இருந்தாங்களா ?"

    "ஆமாங்க!"

    "எப்படி?"

    "அதை நான் எழுதி முடிக்கிற வரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்கு போயிருந்தா சார் !"

    - தென்கச்சி கோ.சுவாமிநாதன்

    • சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் “சும்மா” என்ற தலைப்பில் பேசினார்.
    • சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை... அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான்.

    சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.

    உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

    "சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை! அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா". அதுசரி "சும்மா" என்றால் என்ன?

    பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".

    "சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்... வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.

    1. கொஞ்சம் "சும்மா" இருடா? (அமைதியாக )

    2. கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு)

    3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக்கூடாது! (அருமை)

    4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? (இலவசமாக)

    5. "சும்மா" கதை விடாதே? (பொய் )

    6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். (உபயோகமற்று )

    7. "சும்மா, சும்மா கிண்டல் பண்ணுகிறான்". (அடிக்கடி)

    8. இவன் இப்படித்தான், சும்மாசொல்லிக்கிட்டே இருப்பான். (எப்போதும்)

    9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- (தற்செயலாக)

    10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. (காலி )

    11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. (மறுபடியும் )

    12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது (வெறுங்கையோடு)

    13."சும்மா" தான் இருக்கின்றோம். (வேலையில்லாமல்)

    14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். (வெட்டியாக)

    15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். (விளையாட்டிற்கு)

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் பலவிதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.

    -ராஜகோபால்

    • திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும்.
    • அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது.

    வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் "வெட்டி" என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்" என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சிப்பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று "உப்பு ஊழியம்" ஆகும்.

    கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப்பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு. இதிலிருந்து தான் பயனற்ற வேலையை வெட்டிவேலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இன்றுவரை அந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.

    -அண்ணாமலை சுகுமாரன்

    • திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.
    • இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

    மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?

    புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கதையோடு நின்று விடக்கூடாது.

    சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும், அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

    இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள். கதை சொல்ல வந்த கருத்து என்ன?

    திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.

    இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

    உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால், நிறைய புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது என்று சொல்ல வந்த கதை அது.

    யார் பெரியவர், யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.

    வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.

    பல பட்டங்கள் பெற்றால் இறைவனை அறிந்து விடலாம் என்றும் நினைக்கக் கூடாது.

    அன்பாலும் அறத்தாலும் மட்டுமே இறைவனை அடையமுடியும்.

    -மோகன்ராஜ்

    ×