search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Napkin"

    பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு மாற்றாக இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நாப்கின்களுக்கு மவுசு கூடி வருகிறது.
    மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு மாற்றாக பருத்தி, மரக்கூழ், வாழை நார், கரும்பு சக்கை போன்ற இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நாப்கின்களுக்கு மவுசு கூடி வருகிறது.

    அந்த வாய்ப்பை கனகச்சிதமாக கையாண்டு தொழில்முனைவோர்களாக மாறி நாப்கின் தயாரிப்பில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட தொழில் முனைவோர்களுள் ஒருவராக விளங்குகிறார், சுஜாதா பவார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியை சேர்ந்த இவர், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய இயற்கை சானிட்டரி நாப்கின்களை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கினார்.

    இன்றைக்கு இந்தியா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தி இருப்பவர் நேபாளம், சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார். கடந்த பத்தே மாதங்களில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் வணிகம் செய்துள்ளதோடு, 30 பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

    33 வயதான சுஜாதா பி.பார்ம் முடித்துவிட்டு எம்.பி.ஏ. படித்தவர். படிப்பை முடித்ததும் 8 ஆண்டுகளாக பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றினார். அவரது கணவரும் இதே துறையில் வேலை பார்த்ததால், வருமானத்திற்கு குறைவில்லை. அதனால் வேறு தொழில் தொடங்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவும் இல்லை. பிறகு எப்படி இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து இந்த நிலையை எட்டிப் பிடித்தார்? என்பதை சுஜாதாவே கூறுகிறார்...

    "மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தும்போது மற்ற பெண்களை போல் எனக்கும் பிரச்சினை வந்தது. அப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தாத நாப்கின்களை எப்படி தயாரிப்பது? என்ற ஆராய்ச்சியில் களம் இறங்கினேன்.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு, தற்போது புழக்கத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளும், சில ரசாயனப் பொருட்களும் இருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால்தான் பெண்களுக்கு தோல் வியாதி தொடர்பான பாதிப்புகள் வருவதையும் புரிந்து கொண்டேன்.

    அதோடு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் இந்த சானிட்டரி நாப்கின்களே காரணம் என்பதும் புரிந்தது. இதற்கு மாற்றாக நாப்கின்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பருத்திதான் சரியான மாற்றாக இருக்க முடியும் என்பதை பல்வேறு ஆய்வு தகவல்கள் உறுதிப்படுத்தின. அந்த காலத்தில் கிராமப்புறப்பெண்கள் நீண்ட காலமாக பருத்தி துணிகளையே பயன்படுத்தி வந்தனர்.

    அதன் அடிப்படையில் இயற்கையான சானிட்டரி நாப்கின்களை தயாரித்தேன். அதனைப் பயன்படுத்திய பின்பு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உறவினர்களுக்கும் கொடுத்தேன். எனது நாப்கின்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. முதலில், இந்த நாப்கினைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் துவைத்துப் பயன்படுத்த இரண்டு நாட்கள் ஆனது. இரண்டாவதாக, இந்த நாப்கின்களை துவைத்து பயன்படுத்தியபோது உடலுக்கு பிரச்சினை ஏற்பட்டது.

    சரியாக சுத்தம் செய்யாவிட்டால், இந்த நாப்கின் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படும் நிலை இருந்தது. அதன் பிறகு, வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியோடு, மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க தொடங்கினேன். அந்த நாப்கின் எளிதில் உலரும் தன்மையுடன் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதும் பாதுகாப்பானது'' என்பவர் தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாப்கின் தயாரிப்பில் முழு நேரமாக ஈடுபட தொடங்கிவிட்டார்.

    ''ஆரம்பத்தில் 5 மாதங்கள் வீட்டிலேயே வைத்து நாப்கின் தயாரித்தேன். வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தானேயில் அலுவலகத்தை தொடங்கினோம். தற்போது என்னுடன் சேர்த்து 30 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் பேக்கிங் பணிகளை செய்கிறார்கள்.

    என் கணவரும் வேலையை விட்டுவிட்டு என்னுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது நாங்கள் இயற்கை சானிட்டரி நாப்கின் தயாரிக்க ரூ.25 லட்சம் முதலீடு செய்துள்ளோம். இதில் பெரும்பாலான தொகையை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களை வாங்குவதற்கு இந்த முதலீட்டைப் பயன்படுத்தியுள்ளோம். அதோடு, சந்தை வியூகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்காகவும் செலவு செய்துள்ளோம்.

    சமூக ஊடகங்கள் வழியே எங்கள் சந்தைப்படுத்தலை தொடங்கினோம். எங்கள் தயாரிப்பு தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் அதில் பகிர்ந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேவேளையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று நினைத்தேன். எந்த சானிட்டரி நாப்கின் நல்லது என்பதை வீடியோக்கள் மூலம் விளக்கினேன். அதன்பிறகு நிறைய ஆர்டர்கள் வரத்தொடங்கின.

    தற்போது மூன்று விதமான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகிறோம். முதல் தயாரிப்பான காட்டன் சானிட்டரி நாப்கின்களை 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஒரு முறை பயன்படுத்திய பிறகு 4 மணி நேரத்தில் இது உலர்ந்துவிடும். இரண்டாவது தயாரிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் இயற்கை சானிட்டரி நாப்கின். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மாதவிடாய் கோப்பையை தயாரித்துள்ளோம். இது சிலிக்கானில் தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பையை 4 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்" என்றார்.
    ×