search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • கடையநல்லூரில் 2 இடங்களில் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என மனு வழங்கினார்.

    கடையநல்லூர்:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து அவரை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது கடையநல்லூரில் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடையநல்லூரில் 2 இடங்களில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும், நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அரசு முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன், துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
    • அரசு நிர்வாகத்தில் தரவு சார்ந்த மேலாண்மையின் பயனாக அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது, சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அரசு முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன், துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    மாவட்ட அளவில் அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக மாநில அளவில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாகவும், கள அளவில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கள ஆய்வு அலுவலர்களாகவும் அரசு நியமித்துள்ளது.

    இவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளை இத்துறை உரிய முறையில் தொகுத்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அதன் அடிப்படையில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    மேலும், இத்துறையினால் முன்னெடுக்கப்பட்ட சில முத்தாய்ப்பான முயற்சிகளான மாவட்டங்களின் வளர்ச்சிக்கான 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்', இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான 'நான் முதல்வன்' திட்டம், இளம் வல்லுநர்களின் திறன்மிகு ஆற்றலை அரசுத்திட்டங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டம்' ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் துறையினால் எடுத்துரைக்கப்பட்டது.

    அரசு நிர்வாகத்தில் தரவு சார்ந்த மேலாண்மையின் பயனாக அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    ஆய்வின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

    இவைத்தவிர, பல்வேறு துறைகளின் முத்திரை பதிக்கும் திட்டங்கள், தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அறிவிப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முத்திரை பதிக்கும் முத்தாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

    தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேருவதை இத்துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தின்போது அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் துறையின் அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னெசன்ட் திவ்யா மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி கூட்டத்தில் வசுமதி கொண்டுவந்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
    • ஏற்கனவே உள்ள மணக்களம் தெருவின் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 63 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இதில் தி.மு.க. 36-வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் வசுமதி கொண்டுவந்த தீர்மானத்தில் 36-வது வார்டில் மணக்களம் தெரு என மாநகராட்சி பதிவேட்டில் உள்ள பெயரை நீக்கிவிட்டு, அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முதல் தெரு, 2-வது தெரு, 3-வது தெரு என்று பெயர் மாற்றம் செய்து மாநகராட்சி பதிவேட்டில் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு கவுன்சிலர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதநிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநகராட்சி கூட்டத்தில் வசுமதி கொண்டுவந்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், ஏற்கனவே உள்ள மணக்களம் தெருவின் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    • நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

    கோவை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி பதவியேற்று கொண்டார்.

    இதையடுத்து அவரின் முதல் அரசு நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் காரில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சென்று தங்கினார்.

    இன்று காலை கோவை நேரு விளையாட்டு மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்றார். அங்கு அவரை விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டார். விளையாட்டு விடுதி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

    நேரு விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார்.

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் கோவை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் விளையாட்டு வீரர்கள், அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    ஆய்வு கூட்டம் முடிந்ததும், உதயநிதி ஸ்டாலின் கொடிசியா மைதானத்திற்கு சென்றார். அங்கு மிக பிரமாண்டமான அளவில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

    விழாவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    முன்னதாக கோவையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பதற்காக காலை முதலே அவினாசி சாலையின் இருபுறங்களிலும் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்.
    • தனக்கு நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கையசைத்து, கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

    கோவை:

    கோவையில் இன்று நடந்த அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக நேற்றிரவு காரைக்குடியில் இருந்து கோவைக்கு காரில் வந்தார்.

    பின்னர் அவர் சிட்ராவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். இன்று காலை தனியார் ஓட்டலில் இருந்து நேரு விளையாட்டு மைதானத்திற்கு காரில் புறப்பட்டார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பதற்காக காலை முதலே அவினாசி சாலையின் இருபுறங்களிலும் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். மேலும் தி.மு.க. கொடிகளும், வரவேற்பு பேனர்களும் இடம் பெற்று இருந்தன.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கார் ஓட்டலில் இருந்து வெளியில் வந்ததும் தொண்டர்கள் வாழ்க... வாழ்க என கோஷம் எழுப்பினர். சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த தொண்டர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த தி.மு.க. கொடி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் படங்கள், உதயசூரியன் சின்னம் ஆகியவற்றை காண்பித்தும் வாழ்த்து கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர அவர் மீது பூக்கள் தூவியும், செண்டை மேளங்கள், தாரை, தப்பட்டையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    உதயநிதி ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நேரு விளையாட்டு மைதானம் 10 கி.மீ தூரம் உள்ளது. இந்த 10 கி.மீ தூரமும் சாலையில் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்ததால் மக்கள் வெள்ளத்தில் அவரது கார் மெதுவாகவே நகர்ந்து வந்தது. வரும் வழியில் எல்லாம் தொண்டர்களின் அன்பான வரவேற்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

    தனக்கு நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கையசைத்து, கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர் அவர் நேரு விளையாட்டு மைதானத்திற்கு சென்று பணிகளை தொடங்கி வைத்தார்.

    அவர் ஓட்டலில் இருந்து நேரு விளையாட்டு மைதானத்திற்கு வருவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகியது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் திட்டத்திற்கு என தனியாக ஒரு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அன்னை தெரசா என கலைஞர் பெயர் சூட்டினார்.
    • முத்தமிழ் அறிஞரின் பேரனாக இருக்கும் பெருமையை விட, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

    திருச்சி:

    திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக் டர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரூ.79 கோடி மதிப்பீட்டில் 22,716 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் திருச்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்.எல்.ஏ.வாக வந்திருக்கிறேன். இப்போது முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் திருச்சிக்கு வருகை தந்திருக்கிறேன். முதல்வருடன் விமான நிலையத்திலிருந்து, விழா நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் மக்கள் வரவேற்கும் வாழ்த்தும், விழாவுக்கு அழைத்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1987-ல் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு இயக்கத்துக்கு முதன் முதலாக விதை போட்டார். 1996-ல் மீண்டும் கழக ஆட்சி அமைந்தபோது இந்த திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போது நான்கு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. 2021-22 ல் மட்டும் 16 ஆயிரம் புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மகளிர் திட்டத்திற்கு என தனியாக ஒரு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அன்னை தெரசா என கலைஞர் பெயர் சூட்டினார். இந்தத் திட்டம் இன்றைக்கு இந்தியாவிற்கு ஒரு முன்னோடி திட்டமாக திகழ்ந்து வருகிறது. தலைவர் துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது 100 மணி நேரம் நின்று கொண்டு பல லட்சம் மகளிருக்கு சுழல் நிதி கடன் வழங்கினார்.

    அதே போன்று 2021ல் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 16 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.2,00,800 கோடி சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்தார். இந்த அரசானது பெண்களின் நலன் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. இந்த தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

    2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இது சாத்தியமில்லை என்றார்கள் ஆனால் 2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு நகர பஸ்களில் கட்டணம் இல்லா பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு பெண்கள் 100 கோடி முறை பயணம் செய்து பல லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளார்கள். அதே போன்று புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக மாணவிகளின் மேற்கல்விக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 2021-22 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மேலாக ரூ.21,392 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    அது மட்டுமல்லாமல் 2023 மார்ச் மாதத்துக்குள் 25 ஆயிரம் கோடி கடன் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் உழைப்பே இந்த இடத்துக்கு அவரை எடுத்துச் சென்றிருக்கிறது. அதேபோன்று சுழல் நிதி கடன் பெறும் நீங்களும் நன்கு உழைத்து வெற்றி பெற வேண்டும்.

    முத்தமிழ் அறிஞரின் பேரனாக இருக்கும் பெருமையை விட, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். பொறுப்பான செல்லப்பிள்ளையாக என்றும் இருப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் இந்த வாய்ப்பினை அளித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன.

    மதுரை:

    தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டும் வகையில் தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்து மக்களாலும் வரவேற்கப்படும் சிறந்த விளையாட்டாகும்.

    அதில் முக்கியமாக உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகைக்கு 2 நாள் கழித்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை (15-ந்தேதி) தினத்தில் அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக இன்னும் சில நாட்களில் ஆன்லைன் மூலம் இதற்கான பதிவுகள் தொடங்கப்பட உள்ளன.

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவையான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி, தடுப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் கலெக்டர்கள் சரவணன், திவ்யான்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17-ந்தேதி அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து, அதன்படி உரியவர்களுக்கு எவ்வித பாகுபாடின்றி டோக்கன்கள் வழங்கப்படும்.

    போட்டிகள் வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 2 கார்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் கார் பரிசளிக்கப்படுகிறது.

    இது தவிர காளைகளை அடக்குபவர்களுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சிறந்த காளைகளுக்கு தங்க காசுகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் கொடுக்கப்படும்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். சிறந்த வீரர் மற்றும் காளைகளுக்கு அவர் பரிசு வழங்குகிறார்.

    அலங்காநல்லூரை போல பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கிராம கமிட்டிகளுடன் இணைந்து அரசு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

    மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக மாநகர பஸ்கள், பஸ் நிலையங்களில் 2330 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
    • பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும்.

    சென்னை:

    பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி உதவியுடன் மாநிலங்களில் 'நிர்பயா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் 2 கட்டமாக பொருத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக 500 பஸ்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2-ம் கட்டமாக ரு.72.25 கோடி ரூபாய் செலவில் 2500 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்தன. அதனுடன் பணிமனைகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 66 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்தன.

    அதில் இதுவரை 1830 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் நிலையங்கள், பணிமனைகள் என மொத்தம் 63 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளது.

    ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்ட 500 பஸ்களுடன் சேர்த்து இதுவரை 2330 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் தலா ஒரு வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள், ஒலிப்பெருக்கி ஆகியவையும் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும். அப்போது 'தானியங்கி வீடியோ ரெக்கார்டர்' 1 நிமிட வீடியோவை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

    அதேநேரத்தில் பஸ்சில் உள்ள ஒலிப்பான் ஒலிக்கும். அதன்மூலம் பஸ் டிரைவர் பஸ்சை எச்சரிக்கையுடன் நிறுத்தலாம். குற்றவாளிகளை கண்டக்டர் கண்டறியலாம். அதேநேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்படும். அதன்மூலம் பஸ்சில் உள்ள ஜி.பி.எஸ். வசதியால் பஸ்சின் இருப்பிடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    பஸ்களில் இருந்து பெரும் புகார்களை கண்காணிப்பதற்காக சென்னை பல்லவன் இல்லத்தில் 40 அடி நீளம், 7 அடி உயரம் உள்ள காட்சித் திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு பங்கேற்றனர்.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 16 கணினி இயக்குவோர் பணி புரிகின்றனர். இதன் செயல்பாடுகள், நேற்று முதல் தொடங்கின.

    • காளைகளை துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது.
    • இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகம் முழுவதும் இருந்து திரள்வார்கள்.

    பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரியும் இந்த போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காரம்பாக்கம் க.கணபதி எம்.எல்.ஏ மற்றும் மதுரவாயல் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு போரூர்- காரம்பாக்கத்தில் உள்ள நவரத்தினம் ஜெயின் திடலில் மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க செயலாளரும், மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காரம்பாக்கம் க.கணபதி தலைமையிலும், நொளம்பூர் வே.ராஜன், ஆலப்பாக்கம் கு. சண்முகம், அயப்பாக்கம் துரை வீரமணி ஆகியோர் முன்னிலையிலும் நடக்கிறது. விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார், க.தனசேகரன், காசி முத்துமாணிக்கம், பாலவாக்கம் க.சோமு, வேளச்சேரி மணிமாறன், எஸ். குணசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் பாலவாக்கம் விஸ்வநாதன், மு. மனோகரன், வாசுகி பாண்டியன், எஸ்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காரம்பாக்கம் க.கணபதி எம்.எல்.ஏ மற்றும் மதுரவாயல் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.
    • கபடி, பேட்மிண்டன், கால்பந்து, செஸ், கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    சென்னை:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் (2022-23) இன்று தொடங்கியது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம், தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கபடி, பேட்மிண்டன், கால்பந்து, செஸ், கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டலக் குழு தலைவர் மதன்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால் மாவட்ட வாரியாக விளையாட்டு குழுக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
    • விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே அடித்தளம் அமைத்து வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரை 12 மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அடைந்துள்ளது. வருகிற 30-ந்தேதி நடைபயணம் முடிவுக்கு வருகிறது.

    இதே போல் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பன்று திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்க உள்ளார்.

    39 பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து 140 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளில் எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற பட்டியலை வைத்தும் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்தும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல உள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால் மாவட்ட வாரியாக விளையாட்டு குழுக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, சிலம்பாட்டம், கராத்தே, துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி முடித்த இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் அளிக்க உள்ளார்.

    விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

    மக்கள் பணியில் தி.மு.க. என்பதை பறைசாற்றும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், அரசின் நிதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அவர் செய்து கொடுக்க உள்ளார்.

    இதன் மூலம் அரசின் சாதனைகளை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவரது நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை நம்பர்-1 மாநிலமாக்க பாடுபட்டு வருவது போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை பறைசாற்றும் வகையில் அவரது சுற்றுப்பயணத்தில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ×