என் மலர்
நீங்கள் தேடியது "ஓ.பன்னீர்செல்வம்"
- தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
- நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, எதிர்பாராத விதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை.
- அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
சென்னை:
மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுப்பினராக கிடையாது. அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டி இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டலாம்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் அவருக்கு வேறு வழியும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போது, "அ.தி.மு.க.வில் 1 லட்சம் கிளைகள் உள்ளன. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ளனர். பொதுக்குழுவிலும் அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.
- போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி உள்ளது.
- தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களாலும், தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ள நிலையில், வெடிகுண்டு கலாச்சாரம் ஆரம்பித்துள்ள நிலையில், கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, சட்டவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடு தான் என்று சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களும், பயங்கரவாதிகளும் முடிவெடுத்து விட்டார்களோ என்ற ஐயம் மக்களிடையே நிலவுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி உள்ளது. மொத்தத்தில், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களாலும், தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.
- ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது.
புதுடெல்லி:
அ.தி.மு.க .பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதாடி வருகிறது.
இந்த நிலையில் இன்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வாதிடும்போது, பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.
ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது என்பது பொதுக் குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோது அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்கினீர்கள்? என்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பினர்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடும்போது, இரட்டை தலைமையில் முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒற்றை தலைமை கொண்டு வரப்பட்டது. உரிய முறையில் பொதுக்குழு கூட்டி ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று கூறினார்.
அவைத் தலைவர் தரப்பில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணை 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- ஓ.பன்னீர்செல்வத்துடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர்.
- குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும், குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து தான் எங்களின் கருத்தும்.
- எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும்.
சென்னை:
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் வைக்கப்பட உள்ள பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-
பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து தான் எங்களின் கருத்தும். பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது; அதன் முடிவு வரட்டும்.
பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் கூறுவதை பற்றி நீங்கள் (பத்திரிகையாளர்கள்) அவரிடம்தான் கேட்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கருத்து சொன்னாலும் அதை நாகரிகமாக தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கட்சியின், தற்போதைய ஆளும் கட்சியின் மூத்த தலைவருக்கு நினைவு சின்னம் எழுப்பப்படும்போது எதனால் எதிர்க்கிறோம் என்பதை எதிர்ப்பவர்கள் விளக்க வேண்டும். அதை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும்.
பல்வேறு நினைவு சின்னங்கள் தேசிய தலைவர்களுக்கும், மாநில தலைவர்களுக்கும் அமைக்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பயன் என்ன? என்பதை கலந்து பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும். கருணாநிதியை எனக்கு உறுதியாக பிடிக்கும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். எங்கள் அரசியல் பாணி 1972-ல் இருந்து நாங்கள் வேறு அவர்கள் வேறு என்றாகிவிட்டது. என்னுடைய அரசியல் பயணம் நாகரிகமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளாட்சி தேர்தலிலேயே பாரதிய ஜனதா தனியாகத்தானே நின்றது.
- தி.மு.க. நீங்கலாக எல்லாருமே எங்களுடன் இருந்தால், நாங்கள் வர வேற்கதானே செய்வோம்.
சென்னை:
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் அண்ணா நினைவிடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:-தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துள்ளார். ஏதாவது ஒருங்கிணைக்கும் முயற்சி ஏதும் நடக்கிறதா?
பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த பேரியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்துவது எம்.ஜி.ஆர். ஆவி, அண்ணாவின் ஆவி, அம்மாவின் ஆவி.
அந்த அடிப்படையிலே 1½ கோடி தொண்டர்களும் 94.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும் தமிழக மக்களும் எடப்பாடி பழனிசாமி பின்னாலே அவரது தலைமையின் கீழ் இயங்குகிறார்கள். செயல்படுகிறார்கள்.
கேள்வி:- இந்திய தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவை ஏற்கவில்லை. இதை பின்னடைவாக ஏற்கிறீர்களா?
பதில்:- தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரைக்கும் சட்டரீதியாக அவர்களுக்கு சில கடமைகள் உண்டு. ஒரு அரசியல் கட்சியினுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை கண்காணிக்க வேண்டியது நீதிமன்றம் அல்ல. சட்டரீதியாக.
அந்த அடிப்படையிலே அ.தி.மு.க. சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், ஆழமாக பார்த்து, சட்டத்துக்கு உட்பட்டு அந்தந்த கட்சிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. கடமையில் தவறி விட்டு, ஆரம்பத்தில் கோட்டை விட்டு விட்டு இப்போது நீதிமன்றத்தை கைகாட்டுவது, சட்டத்தை மீறிய செயல்.
தேர்தல் ஆணையம் கூறுகிற கூற்று அவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் போடப்பட்டிருக்கும் மனு சட்டத்துக்கு புறம்பான ஒன்று. அதை நீதிமன்றம் சரி செய்யும். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எல்லாமே நடக்கும்.
கேள்வி:- ஈரோடு தொகுதியில் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?
பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க.தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். இதை ஏற்கனவே ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. இதை எதிர்த்து வழக்கு போட்ட ஓ.பி.எஸ். இன்று வரை தடை உத்தரவு வாங்குவே இல்லையே.
கேள்வி:- ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணியும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை 2 தலைவர்களையும் சந்தித்து இருக்கிறாரே?
பதில்:- பாரதிய ஜனதா கட்சி வடநாட்டில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது, பாரதிய ஜனதாவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சிகளை பி.ஜே.பி. எப்படியெல்லாம் பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
கேள்வி:- தேசிய ஜன நாயக கூட்டணி இப்போது இருக்கிறதா? உடைந்து விட்டதா?
பதில்:- உள்ளாட்சி தேர்தலிலேயே பாரதிய ஜனதா தனியாகத்தானே நின்றது. எனவே இந்த கேள்விக்கே பொருள் இல்லை.
கேள்வி:- பாரதிய ஜனதாவின் கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆபத்தா?
பதில்:- மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால் பி.ஜே.பி. எங்களோடு இருக்கலாம் அல்லவா? எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்கள்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதை விரும்புகிறீர்களா? இல்லையா?
பதில்:- தி.மு.க. நீங்கலாக எல்லாருமே எங்களுடன் இருந்தால், நாங்கள் வர வேற்கதானே செய்வோம்.
கேள்வி:- ஈரோட்டில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அண்ணாமலை, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை சந்தித்தாரா?
பதில்:- எனக்கு தெரிய அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் இல்லை. இமய மலையில் இருந்து தமிழக மக்களை காக்க கூடிய ஆற்றல் பெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த தேர்தல் நடக்க வேண்டும் என்பது மக்களுடைய கருத்து. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளுடைய கருத்து.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட, எடப்பாடி பழனிசாமிதான் மிகச் சிறந்த முதலமைச்சராக தமிழகத்தில் செயல்பட்டார் என்று கூறுகிற நிலை இருக்கிறது.
கேள்வி:- தி.மு.க. நீங்கலாக ஓ.பன்னீர்செல்வம் இணைய வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்:- அவர் ஒரு தனி நபர். ஓ.பி.எஸ்.சுக்கு கட்சியே இல்லையே? அவர் ஒரு செல்லாக்காசு. ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்.
கேள்வி:- ஓ.பி.எஸ். நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள். வேட்பாளரை அறிவித்துள்ளாரே? பா.ஜனதா போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம் என்று அறிவித்து இருக்கிறாரே?
பதில்:- நீங்கள் கூட சுயேச்சையாக நின்று கொண்டு எங்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது என்று அறிவிக்கலாம். மக்கள் ஏற்க வேண்டும். சட்டம் ஏற்க வேண்டும். அவர் அணியை சட்டம் ஏற்காது.
கேள்வி:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் உங்களது நிலைப்பாடு என்ன? டி.டி.வி.தினகரன், சசிகலா வந்தால் ஏற்பீர்களா?
பதில்:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் விதிகள் முடிவு செய்து விட்டன. ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு முடிவு செய்து விட்டது. அதற்கு மேல் என்ன இருக்கிறது. ஒன்றுமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
எஞ்சியுள்ள ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த நான்கு நாள் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கனவே அறுவடை செய்த நெல்லையும் காய வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்போது, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
எனவே ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணத்தை இந்த அரசு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அஜித்தின் தந்தை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டாலும் சட்ட போராட்டத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டாலும் சட்ட போராட்டத்தை மலைபோல் நம்பி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு கைவிட்ட நிலையில், கடைசியாக ஒரு தடவை கல்வீசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புதிய கோணத்தில் தனது வக்கீலை வாதாட வைத்தார்.
அதாவது அ.தி.மு.க.வில் தனக்கு உரிய வாய்ப்புகள் தரப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்துள்ளார். அது மட்டுமின்றி அ.தி.மு.க. கட்சி பிரமுகர் மாற்றப்பட்டது பற்றியும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் வெளியில் தெரியாத சில விஷயங்களையும் தனது எழுத்துப்பூர்வமான பதிவில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்து இருக்கிறாராம்.
இந்த புதிய முயற்சி மூலம் தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அவர் நூறு சதவீத நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் இதை அறிந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டு முடிவு யாருக்கு சாதகமாக வருமோ தெரியவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் ரொம்ப.... ரொம்ப.. ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றி பெற்று தந்தனர்.
- தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல திருமணத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒற்றுமையாக இருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும், சாதாரண தொண்டர் கூட கழகத்தின் உச்ச பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதிமுறையை மாற்றி தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சட்டத்தை திருத்தி உள்ளார். இதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றி பெற்று தந்தனர். தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். அதைத்தான் நாங்களும் வழிமொழிகிறோம்.
சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினராக இருப்பவரை புதுப்பிப்பது என்று ஏற்கனவே கழகத்தில் சட்ட விதிகள் உள்ளது. இந்த விதிகள் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள். இந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. பழைய விதிகள் தொடர்ந்தால் நான் போட்டிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
- எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் தலைமை பதவியை பிடிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வம் கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஆதரவு அதிகரித்து இருந்ததால் அவரது கை ஓங்கியது.
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் ஒரு விதமான பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் இந்த மசோதாவை வரவேற்பதாக தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் "கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கழக துரோகி ஓபிஎஸ் சட்டமன்றத்தில் கழகத்தின் பெயரை பயன் படுத்தி குளிர்காய நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.