என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக வேட்பாளர்"

    • தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.
    • பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2024 பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!

    அதேபோல், பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    இதற்கு முன் 1999 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி! என கூறியுள்ளார்.

    • தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தி.மு.க.-பா.ம.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி உள்ளது. இதனால் 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பா.ம.க. நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான அன்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறும்போது, கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

    'இதைத் தொடர்ந்து பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இருவரும் தங்களது ஆதரவாளர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் இன்று களைகட்டி காணப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நாளை முதல் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சி களை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்கிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து சீமானும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    வருகிற 24-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதன் பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×