என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95440"

    ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார்.  

    கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. 

    குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாகா 5 ரன்னுக்கும், மேத்யூ வேட் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்கள் அடித்தார். 

    பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    குஜராத் அணி18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இறுதிப் போட்டியை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. 

    நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    அகமதாபாத் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாசில் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

    இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார்.

    அகமதாபாத்:

    பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.  

    பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.  

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
     
    ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார். 

    இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெறச் செய்தார்.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  

    ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். 

    தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 ரன் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர்  ஜாஸ்பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

    18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    மத்திய பிரதேசத்தில் 24 குடும்பங்களின் சேமிப்பு தொகையை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தபால் நிலைய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் பினா துணை தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக இருப்பவர் விஷால் அரிவார்.

    இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்தனர். அதற்கு அவர் போலியான நிரந்தர கணக்குகளை தொடங்கி உண்மையான பாஸ்புக்குகளை வழங்கி இருக்கிறார்.

    வாடிக்கயைாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்து அவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டார். தபால் நிலைய அதிகாரி விஷால் கடந்த 2 ஆண்டாக 24 குடும்பங்களின் சேமிப்பு பணத்தை வைத்து ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி உள்ளார்.

    ஐ.பி.எல். சூதாட்டம் மூலம் அவர் ரூ.1 கோடி பணத்தை இழந்துள்ளார். இது டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களின் பணமாகும்.

    இது தொடர்பாக போலீசார் 420 மற்றும் 408 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தபால் நிலைய அதிகாரியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் தற்போது உடல் தகுதி பெற்று, உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ், கடந்த 5ம் தேதி பஞ்சாப்புக்கு எதிரான  ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார்.

    எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். அதேபோல் அந்த தொடரின் கடைசி ஆட்டங்களில் விளையாடவில்லை.



    இதையடுத்து உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றிருந்தார். காயம் ஏற்பட்டதையடுத்து, அவரது உடல்நலம் குணமடைவதை பொருத்தே கேதருக்கு பதிலாக, யாரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    கேதரின் உடல் நலனை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவர் குணமடைய பயிற்சி அளித்து வந்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கேதர் குணமடைந்தார் என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் 22ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கேதரும் செல்ல உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிடும் என தெரிகிறது.

    அன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி வரை முயற்சித்த வாட்சன் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.

    இந்நிலையில் ஐபிஎல் இறுதி போட்டி முடிந்த பின், வாட்சன் பற்றிய ஒரு புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்தில் வாட்சன் ரத்த காயங்களுடன் ஆடியது தெரிய வந்தது. இதனை அனைவரும் முதலில் பொய்யான செய்தி என கிண்டல் செய்தனர். அதன் பிறகு போட்டியின் ஹைலைட்சை பார்த்து அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.



    இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அணியின் வெற்றிக்காக விளையாடிய வாட்சனுக்கு சில தினங்களாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வாட்சன் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் வாட்சன் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.

    அடுத்த வருடம் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் விசில் போடு.

    இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார்.
    ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    12-வது ஐ.பி.எல். போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.

    ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட்கோலி, கேப்டனாக நீடிப்பதற்கு அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

    இதற்கிடையே இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

    ஆனால் ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன் ஷிப் உலக கோப்பை போட்டியில் எதிரொலிக்கும் என்று கருத்து நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது.

    ரோகித்சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

    உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். இங்கிலாந்தில் நடக்கும் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றனர்.

    இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    சென்னை அணி தோற்றாலும் வாட்சன் கடைசி வரை தனி ஒருவராக போராடி சி.எஸ்.கே. ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் 59 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சமூக வலைதளங்களில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது தெரிய வந்தது. இதை வாட்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.


    அதில் வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:-

    வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை ஆடினார். போட்டிக்கு பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 6 தையல் போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. ரசிகர்கள் வாட்சனை மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளனர். வாட்சனின் அர்ப்பணிப்பு நமக்கு கிடைத்த மகுடம் என்று சொல்லி சூப்பர் கிங் அணியும் பாராட்டி உள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் (நாட்-அவுட்) 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 29 ரன்னும், இஷான் கிஷன் 23 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது கேட்ச் மூலம் ஆட்டம் இழக்க வைத்தார். 190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

    இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.





    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி கீப்பிங்கில் சாதனை படைத்துள்ளார்.
    கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் ஜொலித்த டோனி. ஐ.பி.எல். போட்டியில் விக்கெட் கீப்பிங்கிலும் சாதித்து உள்ளார்.

    நேற்றைய இறுதிப்போட்டியில் அவர் 2 கேட்ச்களை (குயின்டன் டிகாக், ரோகித் சர்மா) பிடித்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 136 வீரர்களை அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் டோனி புதிய சாதனை படைத்தார்.

    ஐ.பி.எல் போட்டியில் அதிகமான வீரர்களை அவுட் செய்ய காரணமாக இருந்த விக்கெட் கீப்பரில் முதல் இடத்தை பிடித்தார். அவர் தினேஷ் கார்த்திக்கை முந்தினார்.



    டோனி 190 ஆட்டத்தில் 94 கேட்ச் பிடித்துள்ளார். 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். மொத்தம் 132 வீரர்களை ‘அவுட்’ செய்ய காரணமாக இருந்தார். தினேஷ்கார்த்திக் 131 வீரர்களை (101 கேட்ச்+ 30 ஸ்டம்பிங்) அவுட் செய்ய காரணமாக திகழ்ந்தார்.

    ஐ.பி.எல். போட்டியில் 100 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன், 200 சிக்சர்களை அடித்த ஒரே இந்தியர் என்ற சாதனையிலும் டோனி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோல்வி அடைந்தது மிகவும் காயப்படுத்தியதாகவும் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாகவும் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். பரபரப்பான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று 4-வது கோப்பையை இழந்தது.

    இந்த சீசனில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டிக்கு எப்படி நுழைந்தோம் என்று திரும்பி பார்க்கும்போது சிறப்பாக ஆடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் வரிசை நன்றாக அமையவில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்து விட்டோம்.

    தோல்வி எப்போதுமே காயப்படுத்தும். இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.

    இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக இருந்ததாக கருதுகிறேன். கடைசி பந்து வரை பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளிலுமே நிறைய வேடிக்கையான சம்பவம் நடந்தன. இரு அணிகளின் பக்கமும் கோப்பை கைமாறிக்கொண்டு இருந்தன. ஏனென்றால் இரு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தன. ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.இறுதிப்போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போது தேவையோ அப்போது சரியாக விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

    தவறுகள் எந்தெந்த இடங்களில் செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரமில்லை. உலககோப்பை செல்ல வேண்டி இருக்கிறது.

    அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐ.பி.எல். தவறுகளை ஆராய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த ஐ.பி.எல். போட்டியில் உங்களை மீண்டும் காண முடியுமா? என்று டோனியிடம் டெலிவிசன் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஆம் நம்பிக்கை இருக்கிறது என்று பதில் அளித்தார்.



    உலககோப்பையுடன் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக டோனியிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளையாடுவேன் என்று தெரிவித்ததால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.
    ×