என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97409"

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
    குழந்தைகள் மற்றும் தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப கட்டுப்பாடு, கல்வி அறிவு, திருமண வயது, நல வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்) மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு கட்டங்களாக கள ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் போக்கு நிலவுவதை கள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனாக உள்ளனர்.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், இந்த விகிதம் 900-க்கும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறக்கும் பாலின விகிதம் கொண்ட ஒரே மாநிலமாக திரிபுரா உருவெடுத்துள்ளது.

    2015-16-ம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த பதின்ம வயது கர்ப்பம் 43 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது குழந்தை திருமண விகிதம் 26.8 சதவீதமாக இருந்தது. தற்போது 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதி கொண்ட இடங்களில் நடக்கும் பிரசவம் 2015-16-ல் 78.9 சதவீதமாக இருந்தது. தற்போது 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சிசேரியன் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவம் 47.4 சதவீதமாகும். அரசு மருத்துவமனைகளில் 14.3 சதவீதம் சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை (வயதுக்கு ஏற்ப உயரம்) சற்று குறைந்துள்ளது. 2015-16-ல் 38.4 சதவீதத்தில் இருந்து சமீபத்திய கணக்கெடுப்பில் 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ அதிகமான பெண்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். இது 38.4 சதவீதத்தில் இருந்து 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு கியாஸ் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதம் 43.8 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள். அதில் ஒன்று தான் இரத்தக்கசிவு ஏற்படுவது. பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இரத்தக்கசிவு ஏற்படக்கூடாது. இருப்பினும் சிலருக்கு சில காரணங்களால் கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும். இங்கு கர்ப்பிணிகளுக்கு எப்போதெல்லாம் இரத்தக்கசிவு ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

    கர்ப்பிணிகளின் கருப்பை வாயானது மிகவும் சென்சிடிவ்வாக இருந்தால், அப்போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபட்டால் இத்தகைய இரத்தக்கசிவு ஏற்படும்.

    கருமுட்டையானது வளர்ந்து, கருப்பையில் பதியும் போது, கருப்பையில் நிறைந்துள்ள இரத்தமானது கசிய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் லேசாக இரத்தக்கசிவு ஏற்படுகிறது.

    நஞ்சுக்கொடியானது கருப்பை சுவரில் இருந்து முழுமையாகவோ அல்லது பாதியாகவோ தகர்ந்து காணப்பட்டால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். பொதுவாக இந்த நஞ்சுக்கொடி தகர்வானது பிரசவத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் அல்லது பிரசவம் நடைபெறும் போது ஏற்படும்.

    கருமுட்டையானது கருப்பையில் வளராமல், வேறு இடங்களில் அதாவது கருமுட்டை குழாயில் வளர ஆரம்பித்தால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த காரணத்தினால் இரத்தக்கசிவு வந்தால், அத்துடன் கடுமையான வலி மற்றும் பிடிப்புக்கள் அடிவயிற்றில் ஏற்படக்கூடும்.

    நஞ்சுக்கொடியானது கருப்பை வாயை முழுமையாவோ அல்லது பாதியாகவோ உள்ளடக்கியிருந்தால், அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்த நிலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பெண்கள் தரையில் நேராக படுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிசேரியன் செய்யக்கூடும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன. முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

    ரிதம் (காலண்டர்) முறை (Rhythm calendar method)

    இந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

    பில்லிங்ஸ் முறை (Billings or Ovulation Method)

    பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

    உடலில் வெப்ப மாறுபாடு

    * பெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.

    * அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
    பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.
    முட்டைக்கோஸ்

    முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

    ப்ராக்கோலி

    கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக்  அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

    மாதுளை

    மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

    வாழைப்பழம்

    சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

    அன்னாசிப்பழம்

    அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

    முட்டை

    முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

    மஞ்சள்

    சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
    குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது.
    கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.

    சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும்.

    கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.

    முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.

    கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

    சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.
    உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணிகள் உணவாக கொள்ளவேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிட்டால் நல்லது. அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லது.

    பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!
    உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.
    முதல் குழந்தையை பெற்றேடுக்க போகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக வளைகாப்பு எனும் சடங்கை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இதன் பின்னணியில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

    கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

    கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழும். வாந்தி, மயக்கம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளும் இத்தகைய உடல் மாற்றங்களை கண்டு குழப்பம், பிரசவம் பற்றிய அச்சம் போன்ற மனநல பிரச்சனைகளும் ஏற்படும். இந்த நேரத்தில்  பெரும்பாலான கர்ப்பிணிகள் வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் குமட்டல் உணர்வு காரணமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட்டு அவர்களை சிரமப்படுத்தும்.

    வளைகாப்பு வைபவம்

    கருவுற்ற ஏழாவது மாதத்தில் உறவினர்களும், நண்பர்களும் பெண்ணின் புகுந்த வீட்டுக்கு வந்து வளைகாப்பு செய்வார்கள். கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து கணணாடி வளையல்களை அணிவித்து ஆரத்தி எடுத்து அட்சதை தூவுவார்கள்.

    கர்ப்பிணியின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வண்ணமயமான வளையல்கள் நிறைந்திருக்கும். சுற்றமும்-நட்பும் சூழ அந்த பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

    தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையும் பயமும் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

    கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சனை ஏழாவது மாதத்திற்குள் பெரும்பாலும் நின்று விடும். வளைகாப்பு சமயத்தில் அவர்களுக்கு வாய்க்கு ருசியான புளி, எலுமிச்சை, போன்ற சோறு வகைகளையும், இனிப்பு காரம் போன்ற தின்பண்டங்களையும் தாய் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆசை தீர சாப்பிடுவார்கள்.

    கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாக கேட்க முடியும். அந்த சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.

    மேலும் ஏழாம் மாதத்தற்கு மேல் தம்பதிகளுக்கிடையே தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். அதற்காகவே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள். இதன் மூலம் கணவன் தன்னை பார்க்க வரும் நாளில் கூட அப்பெண் பாதுகாப்பாக நடந்து கொள்வதற்கு அந்த வளையல்களே காப்பாக அமையும்.

    ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்தில் நம்மையும் நம் தாய் இப்படித்தான் தாங்கியிருப்பாள்? என்று நினைத்து தாயின் மீது அதிக பாசம் கொள்வார்கள். தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள். எனவே தான் தலைப்பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது.
    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.
    பெண்கள் ஒருபுறத்தில் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்வு பெற்று முன்னேறிக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் பழைய சோக கதைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பள்ளிப் பருவம் முடியும் 17 வயதிலே காதல்வசப்படுவது, 18 வயதானதும் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவசரமாய் தாய்மை அடைவது போன்றவை இப்போதும் அன்றாட செய்திகளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

    இந்த சூழ்நிலைக்கு உள்ளாகும் அவசர ஜோடிகளுக்கு சமூகநெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.

    சுகாதாரத்துறை நிபுணர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள எல்லா கர்ப்பிணிகளையும் ‘இளம் வயது கர்ப்பிணிகள்’ என்ற பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்த வயதுகளில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமான மனஅழுத்தத்திற்கும், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார்கள். 19 வயதுக்கு கீழ்உள்ள பெண்கள் எந்தவிதமான கர்ப்பத்தடை முறைகளையும் கடைப்பிடிக்காமல் தாம்பத்ய உறவுகொண்டால் ஒரு வருடத்திற்குள் அவர்கள் கர்ப்பிணியாகிவிடும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது. இந்த பருவத்தில் உள்ள டீன்ஏஜ் பெண்களில் 33 சதவீதம் பேர் பாலியல் உறவில் அதிக வேட்கையுடனும் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளால் இளம் வயது கர்ப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இளம் வயதிலே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உடனே கர்ப்பமாவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் இருவருக்குள்ளும் மானசீக நெருக்கம் ஏற்பட்ட பின்பே அவர்கள் தாய்மையை பற்றி பரிசீலிக்கவேண்டும். 20 வயதுக்கு பிறகு 24 வயது வரை தலைபிரசவத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அது வரை பொறுமை காக்கவேண்டும். கர்ப்பத்தடை உறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற பலவகை தடுப்பு முறைகள் இருக்கின்றன. டாக்டரின் ஆலோசனைபடி அதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து இளம் வயது கர்ப்பத்தை தவிர்க்கவேண்டும்.

    இதனை மேற்கொள்ளாமல் 20 வயதுக்கு முன்பே பிரசவித்துவிடும் பெண்களுக்கு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும். பிரசவம் நடந்த உடனே அல்லது அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஏற்படக்கூடிய அசாதாரணமான ரத்தப்போக்கு சில நேரங்களில் அந்த பெண்களின் கருப்பையை நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிவிடுகிறது.

    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். குழந்தைகளின் எடை 2 கிலோவிற்கும் குறையாமல் இருக்கவேண்டும். எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை தொற்றுகளும், நோய்களும் தாக்கும் வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனோவளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

    இளம் வயது கர்ப்பிணிகள் பல்வேறுவிதமான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளம் வயதிலே காதலிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். பெற்றோர் தேடிவந்து தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன் பின்புதான் அவர்களுக்கு அவசரப்பட்டுவிட்டதும், குடும்பத்தினர் யாருடைய அனுசரனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. அதனால் தவித்துப்போகும் அவர்கள் மீண்டும் குடும்பத்தினரின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.

    ‘தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், அந்த குழந்தை இரண்டு குடும்பத்தினையும் இணைக்கும் பாலமாகிவிடும்’ என்று உடனடியாக கர்ப்பிணியாகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களது அந்த செயல் மிகப்பெரிய தப்புக்கணக்காகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின்பும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம்.
    திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.
    படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து, ஓரளவு செட்டிலான பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.

    வயது அதிகரிப்பு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

    20 வயதுகளின் ஆரம்ப காலகட்டம் குழந்தை பேறுக்கு ஏற்றது. அந்த சமயத்தில் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் 30 வயதை நெருங்கும்போது கர்ப்பம் தரிக்கும் திறன் குறைய தொடங்கிவிடும். 35 வயதை கடக்கும்போது கருவுறுதல் திறன் வேகமாக குறைய தொடங்கும். 45 வயதுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் திறன் சாத்தியமில்லை.

    கரு முட்டைகள் எத்தகைய பாதிப்புகளை அடையும்?

    பெண்கள் பருவமடையும்போது கருப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகள் நிறைந்திருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். மேலும் பெண்களுக்கு வயதாகும்போது, ​​கருப்பை கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியசிஸ் போன்ற கருவுறுதலை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் உண்டாகக் கூடும்.

    வயதாகும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்ன?

    20 முதல் 30 வயதுடைய தம்பதியரில் மாதவிடாய் சுழற்சியின்போது 4-ல் 1 பெண் கர்ப்ப மடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 40 வயதை நெருங்கும்போது மாதவிடாய் சுழற்சியில் 10 பெண்களில் ஒருவர் தான் கர்ப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் திறன் குறைந்துவிடுகிறது.

    தாமதமாக கர்ப்பமடைவதால் பாதிப்பு நேருமா?

    குறிப்பிட்ட வயதை கடந்து தாமதமாக கர்ப்பமாகும்போது ஒருசில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக 40 வயதை கடக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரீக்ளாம்ப்சியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகக்கூடும். இளம் பெண்களை விட வயதான பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதானவர் களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பிரச் சினைதான் பாதிப்பை அதிகப்படுத்தக்கூடும்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான தீர்வை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, பனிக்குடலில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்ற கர்ப்பவாய் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் உடலுறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவார். மேலும் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு, மரபுத்திரி அசாதாரண அமைப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் ஏற்படும்.

    பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இந்த பாலுணர்ச்சி உந்துதலுக்கு ஹார்மோன்கள் தான் காரணம். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதுவே பாலுணர்ச்சியை தூண்ட காரணமாக அமையும்.

    விலங்குகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பாலுறவு கொள்ளக் கூடியவை. ஆனால் மனிதர்கள் எல்லா நாள்களிலும் பாலுறவு கொள்ளும் திறன் பெற்று இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு கூடலாம் அல்லது குறையலாம். அதேபோல் கணவன் தனது மனைவியின் மேல் இருந்து பாலுறவு கொள்ள சிரமமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் கிருமிகள் அதிகம் இருக்கலாம். அதனால் பாலுறவின் போது கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புகள் அதிகம்.



    உடலுறவு மூலமாக பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் உங்களை பாதுகாக்காது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. கர்ப்ப காலத்தில் இவ்வகை நோய் உங்களை தாக்கினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் இவ்வகை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்த வியாதி இல்லாத ஒருவருடனே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

    இதன் காரணமாக கருப்பை நோய் தொற்று ஏற்படலாம். எனவே பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பல நேரங்களில் பாதுகாப்பானதே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவு மற்றும் பாலுணர்வு கண்டிப்பாக கருச்சிதைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பாலுணர்ச்சியால் ஏற்படும் சுருங்குதலுக்கும், பிரசவத்தால் ஏற்படும் சுருங்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் மறுபடியும் மருத்துவரை அணுகி, உடலுறவு கொள்வது ஆபத்தை விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம்.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    * டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது. குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

    * உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

    * கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

    * முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம். வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

    * சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும். குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும். முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

    * கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.



    * சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும். 6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள். குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

    * 6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

    * மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

    * முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும். அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

    * புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

    * பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

    * தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். ஸ்கரப் செய்ய கூடாது. மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள். தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

    * முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

    * 2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

    * மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். 
    ×